Tuesday, June 11, 2013

பல்துறைக் கலைஞன் திரு.பிரதீபன் உடனான நேர்காணல் - நன்றி மித்திரன் வாரமலர்

Warigapojja - the CLAN, interview with pratheepan

01. இலங்கையின் திரைப்படத்துறையிலிருந்து அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் 'வரிகபொஜ்ஜ ' Warigapojja - the CLAN என்ற பெயரில் வெளியாகவிருக்கின்ற திரைப்படத்தில் உங்களின் பங்கு என்ன?
1950களை நெருங்கிய ஆண்டு காலம்வரை வாழ்ந்து, அழிந்துபோனதாகக் கூறப்படும் 'நிட்டாவோ' என்றழைக்கப்பட்ட குரங்கு உருவை ஒத்த குள்ளமனிதர் அல்லது நிட்டர்கள் எனும் இனத்தை மக்களுக்கு மீளுருநிலைப்படுத்திக்காட்டுவதுடன்,அவ்வினத்தின் தாக்கத்துடன் வேடர்குல மனிதரின் வாழ்க்கையினையும் சித்தரிக்கும் இத்திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாகிய குள்ளக்குரங்குமனித இனத்தின் ஒரு பிரதான வேடத்தை ஏற்று நடிக்கின்றேன்.

02. அப்படியா? இத்திரைப்படத்தில் உங்கள் பாத்திரத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களைக் கூறுவீர்களா?
சிறப்பம்சம் எனும்போது இப்பாத்திரத்தின் தோற்றம், நடத்தை, உணர்வு வெளிப்பாடு,மற்றும் மனநிலையுடனான அசைவியக்கம் அனைத்திலும் மனிதனதும் குரங்கினதும் கலவையினைக் காணலாம். அடுத்ததாக ((Animation)) தொழிநுட்ப வேலைப்பாடு எதுவுமற்ற நேரடியான சொந்த ஆற்றுகைத்திறண் வெளிப்படும். குறிப்பாகச் சொன்னால் எனது இப்பாத்திரத்திற்கான ஒப்பனை 6 அல்லது 6.5 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அடுத்ததாக எமது நாட்டின் திரைப்படத் துறையின் படைப்பாக்கங்களில் ஒப்பனைக்கலை மற்றும் ஏனைய கலைநுட்பம் சார்ந்த அதீத வளர்ச்சியின்மையை உணரமுடிவது எவ்வாறெனில் 1956ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் Hollywood இல் பயன்படுத்தப்பட்ட ஒப்பனை முறையினையும்,வளங்களையும் கொண்டே இலங்கையில் இன்று இத்திரைப்படத்தில் ஒப்பனை மேற்கொள்ளப்படுகிறது. ஜேர்மன் போன்ற நாடுகளில் முறையாக ஒப்பனைக்கலையைக் கற்றும்,பணிபுரிந்தும் 30 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட திரு.ஜயந்தா ரணவக்க அவர்களே இத்திரைப்படத்தின் ஒப்பனைக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Warigapojja - the CLAN, interview with pratheepan

பிறந்த மண் பற்றியும், கடந்தகால உங்கள் வாழ்வனுபவங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
ஈழத்தின் உதயம், வடகிழக்கின் இதயம், இயற்கை வளங்களின் பெட்டகம் என்றெல்லாம் வர்ணிக்கக்கூடியதும்,இலங்காபுரியை ஆண்ட பேரரசன் இதிகாசகால சரித்திர நாயகன் எனப் போற்றும் இராவணேசனுடைய வரலாற்றின் முகவரியானதுமான திருக்கோணமலை மண்ணே எனது சொந்த ஊர். ஆரம்பக் கல்வியினை தி/புனித சவேரியார் ம.வி, தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா ம.வி.ஆகிய பாடசாலைகளிலும், உயர்தரம் வரை தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியிலும்
கற்கும் பேறைப் பெற்றேன்.  தம்பலகாமம் என்கின்ற கமவளத்தால் நிரம்பிய அழகிய தொன்மைக் கிராமத்து அந்தச் சிறுவயதின் பலவருட என் பிஞ்சுப்பருவ வாழ்பனுபவம் இன்றும் பசுமைநினைவுகளாய் என் மனதில் படர்ந்துகிடக்கிறது. கடந்தகால போர்முரண், இயற்கை அனர்த்தம், மற்றும் சமூகப் பிரச்சனை என்பவற்றூடாக சராசரி சகமனிதரின் வலி,வடு, வறுமை என அனைத்தையும் நான் நன்கு அனுபவித்தவனாவேன்.

எட்டு வருடகாலமாக மிகப்பிரபல்யமான சிறந்த திரைப்பட நடிகையும் எனது அரங்கியல் செயன்முறைப் பயிற்சி ஆசிரியையுமான திருமதி. அனோஜா வீரசிங்க அவர்களின் 'அபின' எனும் கொழும்பிலுள்ள நாடக அரங்கியல் கலைக் கல்லூரியின் சிரேஷ்ட செயன்முறைப் பயிற்றுவிப்பாளராகவும்,இலங்கையின் ஆற்றுகைக் கலைஞனாகவும், அதாவது மேடை,தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடினாகவும், பாடகனாகவும், நெறியாளனாகவும் பணியாற்றி வருகின்றேன். எது எப்படியாயினும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழ்வனுபவமானது குறிப்பாகப் படைப்பாளிகளுக்கும்,கலைஞர்களுக்கும் இன்றியமையாதது.

03. இலங்கையிலே விவாத அரங்க நாடக முறைமையை பல வருடங்களாகக் கற்பித்துவரும் முக்கியமான ஒரு தமிழ் வளவாளர் என்ற பெருமைக்குரிய நீங்கள் இதுபற்றிச் சொல்வீர்ளா?
மனிதர்கள் தமக்கான நல்ல திருத்தங்கள், தீர்மானங்களை மேற்கொள்ளவும்,சமூகத்திலுள்ள பிரச்சனைகளுக்கு தைரியமாக முகம்கொடுத்து சிந்தனை மாற்றத்தினூடாக நல்விளைவினைப் பெற்று சமூகம் ஆரோக்கியமடையவும் உதவுகின்ற மிக வித்தியாசமானதும்,எளிமையானதும், அவசியம் மிக்கதும் மிகப் பலம்வாய்ந்ததுமான நாடக அளிக்கை முறைமையைக் கொண்ட சமூகவிருத்திக்கான அரங்கே இதுவாகும்.

2005ஆம் ஆண்டு பிரித்தானிய சபையின் (British Council) ஏற்பாட்டில் இலண்டனிலுள்ள PAN Intercultural Arts அமைப்பின் படைப்பாக்க இயக்குனரும், நாடகக்கலைஞரும்,சமூக விருத்திக்கான இவ் அரங்க முறைமையில் தேர்ச்சி மிக்க சிரேஷ்ட பயிற்றுவிப்பாளருமான திரு.ஜோன் மார்டின் (John Martin) அவர்களால் முறையாக வழங்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கட் கான பயிற்சிநெறியை பெற்றுக்கொண்டேன். அதன்பின் பிரித்தானிய சபை தொடர்ந்து முன்னெடுத்த விவாத அரங்க ஆற்றுகையாளர் குளுக்களை உருவாக்குவதற்காய் பயிலுனர்களைப் பயிற்றுவிப்பதில் 2006 இலிருந்து இன்றும் எனது ஆசான் திரு.ஜோன் மார்டினுடன் தொடர்ந்து
பணிபுரிகின்றேன்.

இதுவரை அனுராதபுரம், புத்தளம், குருனாகல்,பொலனறுவை,மட்டக்களப்பு, வன்னிமாவட்டம், மலையகம், மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச்சேர்ந்த பல தமிழ், சிங்கள விவாத அரங்க ஆற்றுகைக் குழுக்களைப் பயிற்றுவித்துஇ நெறிப்படுத்திவருகின்றேன். இதன் பேறாக 2010ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்திலுள்ள பிரித்தானிய சபையின் அழைப்பின் பேரில் நானும் எனது சகபயிற்றுவிப்பாளர்களாயிருந்த திரு. நளிந்த பிரேமரத்ன, திருமதி. ரதிவாணி ஆகியோர் இணைந்து பயிற்றுவித்த விவாத அரங்கக்குழுவுடன் ஜெனீவாவுக்குச் சென்று அங்கேயுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் ‘Act to Cultural Relation and Conflict ' என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டு மண்டபத்திலும், இலண்டனிலும் ஆற்றுகை செய்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அண்மையில் பாக்கிஸ்தானில் PAN Intercultural Arts மற்றும் பிரித்தானிய சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிற்சி நிகழ்வொன்றிற்காகவும் பயணம் மேற்கொண்டிருந்தேன். பாக்கிஸ்தானை சேர்ந்த 20 பேருடன் இலங்கையைச் சேர்ந்த பயிலுனர்களையும் கொண்ட குழுவிற்கு தற்போது சர்வோதயம் எனும் அமைப்பு ஒழுங்குசெய்த பயிற்சிநெறியின் பயிற்றுவிப்பாளராக அரங்க வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன்.

04. உங்களுக்குள் ஒரு கலைஞனை நீங்கள் எப்போது கண்டுகொண்டீர்கள்?
நான் கலைஞனாக என்னைக் கண்டுகொண்டேன் என்பதைவிட மற்றையவர்களால் நான் கலைஞனாகக் கண்டுபிடிக்கப்பட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். சிறுவயதில் ஒவ்வொரு திரைப்படத்தையும் நான் பார்த்துவிட்டு அதை அப்படியே பள்ளி நண்பர்களுக்கு நடித்துக்காட்டி,சுவாரஸ்யமாக கதைகள் கூறியும் அவர்களை மகிழ்விக்கும் ஒவ்வொருகணமும்; வானொலியில் கேட்கும் ஒவ்வொரு பாடலையும் அதே பாடகர்கள் பாடியது போன்றே நான் பாடுவதாக எனக்குள் பாடியனுபவிக்கும்போதும்; பயிற்சிப்புத்தகங்களிலும், வகுப்பின் கரும்பலகைகளிலும், பரீட்சை வினாத்தாள்களின் பின்புறத்தேயும் எதையேனும் வரைகின்ற ஒவ்வொரு கணத்திலும் என்னை நான் ஓர் பிஞசுக்கலைஞனாக உணர்ந்திருக்கின்றேன். ஆயினும் முதற்தடவையாக மேடைநாடகத்தில் நடித்த அனுபத்தைப் பகிரலாம் என எண்ணுகின்றேன்.

1999 இல் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கான நிதி திரட்டுவதற்காக பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் பிரபாகரன் அவர்களின் இயக்கத்தில் 'எரிமலை' எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. அதற்கான நடிகர் தெரிவுடன், ஒத்திகை ஆரம்பிக்கும் நாட்களில் அந்நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவில் ஒருவராகவும், பல்கலைக்கழக மாணவியாகவும் இருந்த எனது தங்கை புஷ்பதீபாவும், திருமலை திருமறைக்கலாமன்ற உறுப்பினரும்,எனது பள்ளிக்கால சகமாணவ நண்பனுமான அபிராம் என்பவரும் என்னை உற்சாகமூட்டி அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினர். நான் தயங்கித்தயங்கி சிறிய பாத்திரம் என்றால் நடிப்பேன் எனக்கூறி, பின் நாடகத்தைப் பயின்று மேடையேறினேன். நாடகம் முடிந்ததும் அரங்கம் அதிர கைதட்டி வாழ்த்திய பார்வையாளர்களில் அனேகமானோர் என்னை மிகையாக தோள்தட்டி வாழ்த்திச்சென்றனர். அத்துடன்,அந்நாடகத்தில் நடித்திருந்த எனது நண்பர் திரு. ச.ந. அபிராமும்,அதில் நடித்த திருமறைக்கலாமன்றத்தைச் சேர்ந்த திரு. வே. கேங்கேஸ்வரனும்,மன்ற இணைப்பாளர் திரு. ந.து.ரகுராம் ஆகியோர் கலைஞனாக என்னை இனங்கண்டு திருமறைக்கலாமன்றத்தில் இணையும்படி அழைத்தனர். அன்றைய நாளில் எனக்குள்ளும் குஞ்சுக் கலைஞன் ஒருவன் ஒளிந்திருக்கின்றான் என்பதை உறுதிசெய்துகொண்டு எனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

Warigapojja - the CLAN, interview with pratheepan

05. எவ்வகையான பிரிவினர்கட்கெல்லாம் நீங்கள் நாடக அரங்கியல் பயிற்சியை வழங்குகிறீர்கள்?
சிறார்கள்,இளையோர்,கலைத்துறையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர்கள்,நாடக மற்றும் திரையுலக நடிகர்கள்,பாடகர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள்,கலையை ஊடகமாகப் பயன்படுத்த முனைகின்ற அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் குழுக்கள், ஊடகவியலாளர்கள், உளவளம் பாதிப்புற்றோர், மாற்றுத்திறனாளிகள், உள்நாட்டவர், வெளிநாட்டவர் என மொழிப்பாகுபாடின்றி பல்நிலைப்பட்ட பிரிவினர்கட்கும் பயிற்சிகளை வழங்குவதுடன்,அரங்காற்றுகை விடயங்களிலும் ஈடுபட்டுவருகின்றேன்.

பிரதீபன் அவர்களே! உங்களுடைய இக்கலைத்துறையூடாக நீங்கள் ஈட்டிக்கொண்டவையாக உங்கள் இதயத்தில் பதிந்துவைத்திருப்பதை எம்முடன் பகிர்ந்துகொள்வீர்களா?
இலங்கையைப் பொறுத்தவரை கலைத்துறையினை வாழ்க்கையோடிணைந்த தன் தொழிற் துறையாகக் கொண்டு தொடர்வதென்பதே எம் தேசத்துக் கலைஞர்கள் ஒவ்வொருவரதும் சாதனைதான். அந்தவகையில் நான் கலைஞர்கள், கலைத்துறை நண்பர்கள்,வளவாளர்கள், மற்றும் இலங்கையின் அனைத்து திசைகளிலுமிருந்து பயிலுனர்களாக எனது அரங்கப்பயிற்சிக் களத்தில் அறிமுகமான பல்லாயிரம் நண்பர்கள், ஆர்வலர்கள் என எத்தனையோ மனிதர்களைச் சம்பாதித்திருக்கின்றேன் என்றே கூறலாம்.

06. மனநோயாளர்களுடனும், மாற்றுவலுவுள்ளோர்களுடனும் பணிபுரியும்போது பெற்ற அனுபவம்?
சாதாரணமாக உயிரற்ற இயந்திரங்கள், உபகரணங்களுடன் தொடர்புடைய பணியை நோக்கினால் அதன் தேவையும், வளமும்,சக்தியும், இன்றியமையாததுதான். ஆனாலும் பொதுவாக அத்துறைசார்ந்த அசைவியக்கத்திலும், அனுபவத்திலும் உயிரோட்டம் இன்மையை உணரலாம். மாறாக பல்வேறு ஊர்கள், நாடுகளைச் சார்ந்த வவ்வேறு மொழி, கலை,கலாச்சார,பண்பாடுடைய பல்வேறு பிரச்சனைகள், அழுத்தங்கள், உளப்பாதிப்புக்குள்ளாகிய பலவித சமுதாயத்தைச் சேர்ந்த உயிருள்ள, உணர்வுள்ள மனிதர்களுடனும்,அவர்களின் மனங்களுடனும் கலையூடான பணிபுரிதலின்போது மகிழ்வூட்டல்,திறணூட்டல், குணப்படுத்துகை போன்ற விடயங்கள் இடம்பெறுவது திருப்தியானதும், பெறுமதியானதும், முக்கியமானதும் ஆகும்.

அதற்கும் மேலாக மாற்றுத்திறணாளிகளுடன் வேலை செய்யும்போது அவர்களிடமிருந்து பல விடயங்களை சாதாரண மனிதர்களாகிய நாம் கற்கவேண்டியிருக்கின்ற நிலைமையைக் காணலாம். தன்னம்பிக்கை, மெய்யன்பு, கள்ளம் கபடமின்மை, சாதிக்கவேண்டுமென்ற ஆர்வமும், ஈடுபாடும் என பலவிடயங்களைக் கூறலாம். மனநோயாளர்களுடன் பணிபுரிதலினூடாக பலவித மனநோய்களின் நிலையினையும், அதனால் ஏற்படும் விளைவுகள்,உள ஆற்றுப்படுத்தலுக்காக கலைத்துறையூடான குணப்படுத்தல் முறைமைகள்,யுத்திகள், அவர்களுடன் நடந்துகொள்ள வேண்டிய விதம்,பொறுமையைக் கடைப்பிடித்தல் மற்றும் நோயாளர்களின் மனநிலைக்கும் ஏனையோரது மனநிலைக்கும் இடையான தொடர்பு, வேறுபாடு என்பவற்றை உணர்தல் எனப் பலவிடயங்கள் சார்ந்த அனுபவத்தைப் பெறுவதுடன், உடலுள ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட மனவிழிப்பையும், வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய தத்துவார்த்தமான விடயங்களையும் பெற்றுக்கொண்ட அனுபவம் இன்றியமையாததாகும்.

07. பிரதீபன் எனும் கலைஞனுக்குப் பின்புலமானவர்கள்?
அன்றிலிருந்து இன்றும் எனது ஊக்குவிப்பாளர்களாக, இரசிகர்களாக இருந்துவரும் என்சக தோழர்களும்,கலையுலக நண்பர்களும், பயிற்றுவிப்பாளர்களாகவும்,வழிகாட்டிகளாகவும் இருக்கின்ற ஆசிரியர்களுமாவர்.

Warigapojja - the CLAN, interview with pratheepan

நேர்காணல்   -யோ.புரட்சி



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றி ஜீவன்......ஆனாலும் ஏதோ ஓரிரண்டு கேள்விகள் விடுபட்டுள்ளது தெரிகிறது....பிரசாந்த் இணைத்ததில் விடுபட்டிருக்கலாம்.....பரவாயில்லை ....பின்னர் மீளினைப்பு செய்யக்கூடும் .......நன்றிகள்.....

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி ஜீவன். நேர்காணலைப் படிக்கையில் படத்தைப் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் வந்திருக்கிறது. பார்க்கக்தான் கிடைக்குமோ தெரியவில்லை.

    திரு. பிரதீபன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. I know that Pratheepan is a real artist. Wish him success in every walk of life. Thanks to Dr. Jeeva
    Kernipiththan

    ReplyDelete
  4. I know that Pratheepan is a real artist. Wish him success in every walk of life. Thanks to Dr. Jeeva
    Kernipiththan

    ReplyDelete