01.
இலங்கையின் திரைப்படத்துறையிலிருந்து அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் 'வரிகபொஜ்ஜ ' Warigapojja - the CLAN என்ற பெயரில் வெளியாகவிருக்கின்ற திரைப்படத்தில் உங்களின் பங்கு என்ன?
1950களை நெருங்கிய ஆண்டு காலம்வரை வாழ்ந்து, அழிந்துபோனதாகக் கூறப்படும் 'நிட்டாவோ' என்றழைக்கப்பட்ட குரங்கு உருவை ஒத்த குள்ளமனிதர் அல்லது
நிட்டர்கள் எனும் இனத்தை மக்களுக்கு மீளுருநிலைப்படுத்திக்காட்டுவதுடன்,அவ்வினத்தின் தாக்கத்துடன் வேடர்குல மனிதரின் வாழ்க்கையினையும் சித்தரிக்கும் இத்திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாகிய குள்ளக்குரங்குமனித இனத்தின் ஒரு பிரதான வேடத்தை ஏற்று நடிக்கின்றேன்.
02.
அப்படியா? இத்திரைப்படத்தில் உங்கள் பாத்திரத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களைக் கூறுவீர்களா?
சிறப்பம்சம் எனும்போது இப்பாத்திரத்தின் தோற்றம், நடத்தை, உணர்வு வெளிப்பாடு,மற்றும் மனநிலையுடனான அசைவியக்கம் அனைத்திலும் மனிதனதும் குரங்கினதும் கலவையினைக் காணலாம். அடுத்ததாக ((Animation)) தொழிநுட்ப வேலைப்பாடு எதுவுமற்ற நேரடியான சொந்த ஆற்றுகைத்திறண் வெளிப்படும். குறிப்பாகச் சொன்னால் எனது இப்பாத்திரத்திற்கான ஒப்பனை 6 அல்லது 6.5 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அடுத்ததாக எமது நாட்டின் திரைப்படத் துறையின் படைப்பாக்கங்களில் ஒப்பனைக்கலை மற்றும் ஏனைய கலைநுட்பம் சார்ந்த அதீத வளர்ச்சியின்மையை உணரமுடிவது எவ்வாறெனில் 1956ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் Hollywood இல் பயன்படுத்தப்பட்ட ஒப்பனை முறையினையும்,வளங்களையும் கொண்டே இலங்கையில் இன்று இத்திரைப்படத்தில் ஒப்பனை மேற்கொள்ளப்படுகிறது. ஜேர்மன் போன்ற நாடுகளில் முறையாக ஒப்பனைக்கலையைக் கற்றும்,பணிபுரிந்தும் 30 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட திரு.ஜயந்தா ரணவக்க அவர்களே இத்திரைப்படத்தின் ஒப்பனைக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.