ஆலங்கேணி என்னும்
அழகிய கிராமத்தில்
கோல மயிலான அந்தக்
கோமளத்தைக் கண்டேன்.
வாலைப் பருவம் அவள்
வதனம் அழகின் பிறப்பிடம்
சாலை ஓரத்தில்
சடுதியாச் சந்தித்தேன்.
முத்துப் பல் வரிசை
மோகனப் புன்னகையாள்.
சித்தம் தடுமாற என்
சிந்தையில் சரண் புகுந்தாள்
பித்துப் பிடித்தலைந்தேன்
பெண் மயிலே! தஞ்சமென
நித்தம் தவமிருந்தேன்
நெஞ்சில் நிறைந்து விட்டாள்.
விநாயகர் ஆலயம் அமைந்த
வீதியில் ஓர் நாள் அந்த
வேல்விழி விரைந்து செல்ல
நேரெது நின்ற நானும்
நெருங்கிய போது மெல்ல
பேரென்ன? என்று கேட்டேன்
‘தேன்மொழி’என்று சொல்லி
தென்றலாய் மறைந்து போனாள்.
என் பெயர் ‘அமுதன் என்றேன்
எழில் கொஞ்சும் பேராதனையில்
பல்கலைக் கழகத்தில் பீ.ஏ.
படிக்கிறேன் என்றும் சொன்னேன்.
புன்னகை அரசி மெல்ல
பொன்முகம் காட்டிச் சென்று
தென்புறம் தெரிந்த வீட்டில்
தீடீரென மறைந்து விட்டாள்.
‘இலக்கியத்தில் காதல் என்ற
இயல்பான தலைப்பில் ஓர் நாள்
கலைப்பிரிவில் கற்கும்
கணக்கற்ற மாணவர் முன்
ஆற்றினேன் உரை ஓர் நாள்
அவளுந்தான் அங்கிருந்தாள்.
போற்றினர் என்னுரையை
புன்னகைத்தாள் அவளும்.
சிறிது சிறிதாக
சிற்றிடையாள் சினேகிதத்தைப்
பெற்று விட்டேன் இருவரும்
பேசும் வாய்ப்புகளும்
அடிக்கடி வாய்த்ததினால்
அன்பினால் கட்டுண்டோம்.
இதயங்கள் இடம் மாறி
இருவரும் ஒருவரானோம்.
வே.தங்கராசா
அருமை அருமை
ReplyDeleteவார்த்தைகளும் பொருளும் கலந்து
தேனாக இனித்தது கவிதை
தொடர வாழ்த்துக்கள்
Thangaq kavinga Thanka!
ReplyDeleteArumai kavithai- thodaraddum padikk inikkirathu
Kernipiththan
தங்கள் வாழ்த்துக்கள் எனது எழுத்துக்கு வளமூட்டும்.நன்றி.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துகளுக்கு எனது இதயம் கலந்த நன்றிகள் ஐயா.
ReplyDelete