திருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெருமதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்களேயாகும்.
வரலாற்றை ஆராய்ந்த பல பேராசிரியர்களுக்கு இவர் பெரும் உதவியாக இருந்தார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தாயாருடன் இணைந்து தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை ஆவணப்படுத்தும் பெருங்கைங்கரியத்தில் ஈடுபட்டார். வரலாற்று ஆய்வை தனது மூச்சாகக் கருதியவர் திரு.நா.தம்பிராசா அவர்கள்.
கந்தளாய்க்கல்வெட்டு, பெரியகுளம் கல்வெட்டு, மாங்கனாய்க்கல்வெட்டு ,புல்மோட்டைக்கல்வெட்டு, பத்திரகாளியம்மன் கல்வெட்டு ,நிலாவெளிப்பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலிக்கல்வெட்டு ,தம்பலகாமம் ஐயனார்திடல் கல்வெட்டு, வில்லூண்டிக்கந்தசாமி கோயில் கல்வெட்டு ஆகியவை இவரது பெருமுயற்சி காரணமாக வரலாற்றுத்துறை நிபுணர்களான கலாநிதி.செ.குணசிங்கம் ,பேராசிரியர்.சி.பத்மநாதன் ,பேராசிரியர்.கா.இந்திரபாலா ஆகியோர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அரிய பல வரலாற்றுத் தடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்தன.
பத்தாம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் நிலாவெளிக்கல்வெட்டிலேயே ‘திருகோணமலை’ என்ற சொல் முதன் முதலாக அறியப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கலாநிதி திரு.கா.சரவணபவன் அவர்கள் ‘வரலாற்றுத் திருகோணமலை’ தொடர்பான ஆய்வுகளைச் செய்தபோது திரு.நா.தம்பிராசா அவர்களின் உதவி பெரிதும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.
வரலாற்றுத்துறை மட்டுமில்லாது தனது மனைவி மகேஸ்வரியுடன் இணைந்து திருகோணமலை ஆத்திமோட்டைத் தமிழ் வித்தியாலயத்தை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவரைச் சார்ந்தது. திருகோணமலையின் வரலாறு பற்றிய அவரது தேடல் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாட்டவர்களாலும் போற்றிப் பேசப்பட்ட ஒரு விடயமாகும்.
தான் பிறந்த மண்ணை தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்தப் பெருமகன் கடந்த 17.01.2013 இல் இயற்கை எய்தினார். அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.
வே.தங்கராசா.
திரு.வே.தங்கராசா அவர்களால் அமரர்.நா.தம்பிராசாவினது நினைவைச் சுட்டிக்காட்டியது உலகுக்கு உதவியான செய்தியாகும். என்னையும் பல ஆய்வினைச் செய்வதற்கு அமரர் உதவினார். காடுகளுக்குள் மறைந்து கிடக்கும் வரலாறு என்று கட்டுரைகளை எழுதி பேராசிரியர் இந்திரபாலாவுக்கும். கலாநிதி.குணசிங்கத்துக்கும் கொடுத்தேன். தீனேரி, கற்சுனை, சாவாறு. நசாந்தாப்பணிக்கன். வைராவெளி போன்ற தமிழ் பிரதேசங்களின் தடயங்கள் இன்று கிடைக்க வழியில்லாது செய்து விட்டனர். பொலநறுவை இராச்சியத்தினுள் சோழர்கால கலாசாரம் பரவியிருந்தது. அப்போது இராஜேந்திர சோழனால் பல தமிழ்மக்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டார்கள். இந்த வரலாறு இன்றைய நமது சமூகத்துக்குத் தெரியாது. -கேணிப்பித்தன் ச.அருளானந்தம்.
ReplyDeleteஉங்கள் கட்டுரைகள் மூலம் முன்பு அறிந்திராத பல தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது ஜீவன்.
ReplyDeleteதொடருங்கள்