சத்தியகாமனின் ஞானோதயம். பகுதி.1
சீடனாய்ச் சேர்ந்த காமனுக்குச்
சிறப்புடன் ‘உபநயனம்’ செய்து வைத்து
வித்தைகளைப் பயில்வதற்கு தகுதியான
‘பிரமச் சரியம்’நோற்கின்ற பிராமணனாய்
பெருமை பெறும் சான்றோனாய் ஆக்கிப்
‘பிரம்ம’ உபதேசத்திற்குத் தொடக்கமான
‘பூணூல்’ கல்யாணத்தையும்
பொறுப்பாகச் செய்து வைத்தார்.
இனி நமக்கு உபதேசம் கிடைக்கு மென்று
எதிர் பார்த்திருந்த காமனிடம் குரு சொல்வார்
‘அன்பான சீடனே! சத்யகாமா
இந்த நானூறு பசுக்களை மேய்த்து வா’
என்று கட்டளை இட்டார் காமன்
எதிர் வார்த்தை பேசாது பணியை ஏற்றான்
சினைப்படும் தகுதி அற்றதாய்ப் பசுக்கள்
தென்பட்ட போதிலும் சீடன் சொல்வான்.
“தங்களின் பணிதனைத் தலைமேல் ஏற்று
தயங்காது செல்கிறேன் குருவே இந்த
நானூறு பசுக்களும் ஆயிரமாய்
நன்றாகப் பெருகிய பின் வந்து சேர்வேன்”
‘ஏமாதார்’ மந்தைகள் என்றறிந்தும்
இதயத்தில் சிறிதேனும் ஐயமின்றி
குரு சொன்ன கட்டளையைத் தலையில் ஏற்று
குதூகலமாய்ப் புறப்பட்டான் சத்தியகாமன்.
“நல்லது மகனே! சென்று நீ வா!
நல்லதே நடக்கும் ‘நலம் பெறுவாய் நீ’
செல்கின்ற திசையெலாம் உனக்கு அங்கே!
சிறப்புகள் கிடைக்கும் ஆசி” என்றார்.
சத்திய காமனும் அவர் தாழ் பணிந்து
தனக்கிட்ட பணியைப் பொறுப்பாய்ச் செய்தல்
தவமென மனதில் பதித்துக் கொண்டு
கானகம் புகுந்தான் பசுக்களோடு.
‘ஏமாதார்’ மாடுகளை ஏற்றுச் சென்ற
இணையற்ற சீடனும் சோர்வு இன்றி
பசும் புல் படர்ந்த கானகத்தில்
பசுக்களை மேய்த்து வலுவும் ஊட்டி
சினைப் பிடிக்கச் செய்து கன்றுகள் பெருகி
சிறு தொகையாய் இருந்த பசுக் கூட்டம்
சிலவருட காலத்துள் பெருகச் செய்து
ஆயிரமாய் ஆன பின்பு அங்கு வந்தான்.
அவன் கொண்டு வந்த மாடுகள் போல்
அவனும் செழிப்போடு காணப்பட்டான்
புலனடக்கம் பொய்மையற்ற புத்திக்கூர்மை
புன்னகைத்த ‘முக அழகும்’ கவலையற்ற
மன இயல்பும் உடையவனாய்
பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும்
பாங்குடனே வந்து நின்ற சத்தியனை
பார்த்தவுடன் கௌதமர் புரிந்து கொண்டார்.
‘என் அன்பான சீடனே! சத்தியகாமா
இறைவனைக்கண்டவன் போல் தோன்றுகிறாய்!
உனக்கந்த அறிவினைப் புகட்டியவர்
உண்மையில் யார் என்று சொல்லு’? என்றார்
சத்தியனும் குருவின் தாள் பணிந்து
தனக்குப் பிரம ஞானத்தைப் புகட்டியவர்
தரணியில் எவருமில்லை தாங்கள் தாமே
தந்தருள்க ‘உபதேசம்’ என்று சொன்னான்.
மனமொப்பிப் ‘பிரமத்தை’ அறிந்து கொள்ள
வழிதனைக்கண்ட சத்திய காமன்
தினமும் மாடுகளை மேய்க்கும் பணியை
திறமையுடன் செய்தான் அதன் பலனாய்
உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து
உயர்வான அறிவினை அவனுள் தந்து
இயற்கையின் கூறுகள் அவனிடத்தில்
இறைவனின் இயல்பினை எடுத்துரைத்தன.
ஆயிரமாய்ப் பசுக்கூட்டம் ஆன பின்பு
அவைகளை ஓட்டி ஆசையோடு
வருகின்ற போது ‘ரிஷபம்’ ஒன்று
வாய் திறந்து பிரமத்தின் கால் பங்கை
வளமாக எடுத்துரைக்கக் காமன் கேட்டான்
மாலையில் குளிர் அதிகமென்று
மனத்தினில் தோன்றிடத் தீ வளர்த்து
கிழக்காக முகம் காட்டி இருந்தபோது
தீப்பொறியிலிருந்து ஒரு குரல் கேட்கும்
‘தீதற்ற சத்திய காமா கேட்பாய்!
மண் வான் ரிஷபம் கடல் நான்கும்
பிரமத்தின் மறு கால் பங்கு’ என
கம்சப்பறவை மேலும் ஒரு கால்பங்கை
கச்சிதமாய்க் காமனுக்கு எடுத்துச் சொல்ல
நீர்க்கோழி அங்கு ஓடி வந்து
பிரமத்தின் கால் பங்கை நிறைவு செய்ய
பிரம உபதேசம் கேட்ட பின்னர்
சத்திய காமனும் உவகையுற்று
சரியான பாதையெது எனத்தெளிந்து
ஆச்சிரமம் நோக்கி விரைந்து வந்தான்.
கௌதமரும் சீடனை அருகணைத்து
கற்பனைக்கும் எட்டாத பிரமம் பற்றி
ஆதியோ டந்தமாய் எடுத்துரைத்தார்
அரிதான “ஞானத்தை” அவனும் பெற்றான்.
வேலாயுதம் தங்கராசா
No comments:
Post a Comment