Monday, February 25, 2013

தங்கம்

தங்கம்

அத்தை மகள் தங்கமும் அவனும் சேர்ந்து
அன்பாகப் பழகி வந்த நாளில்
சித்திரையில் ஓர்நாள் செய்தியொன்று
செவிகளிலே செந் தீயாய்ப்பாய
செத்னே!என்று தங்கமும்
திசை தெரியா நிலையிலே கனகனும்
பித்தரெனப் ‘பேயறைந்தோர்’ முகத்தோர் போல
பிற றறியா வண்ணம் பிதற்றி நின்றார்


சைவர்கள் பெருந்தொகையாய் வாழுகின்ற
தம்பலகாமம் என்னும் தமிழ்ப் பதியில்
ஆதியாம் கோண நாயகர் ஆலயத்தில்
அதிகாரியாகத் தொழும்பு செய்த
வித்தகராம் வீரக்குட்டி என்பார்
விழிபோலப் பேணி வளர்த்த மகள்
தங்கமெனும் நல்லாள் கனிமொழியாள்
தவிப்புடனே தனியாகத் தவித்து நின்றாள்.

குடமுருட்டி ஆற்றங் கரையருகே!
குறட்டங்குடா என்னும் வயல் நடுவே
படபடக்கும் மனத்துடனே பன்னிடுங்கி
பக்கத்தே நின்ற கனகு மீது
‘விட்டெறிந்து விளையாடி மகிழ்ந்த நாளை’
மின்னிடையாள் மனத்திடையே எண்ணி ஏங்கி
‘மொட்டவிழ்ந்த மலர் போல’ முகமும் வாட
முத்து முத்தாய்க் கண்ணீர் சிந்த லானாள்.

ஆரம்பத்தில் கனகு இதை ஏற்கவில்லை
அறியாத பிள்ளை நீ வேண்டா மென்று
ஓராயிரம் தடவை உரைத்திருப்பான்
உறுதியாய்த் தங்கமதை உதறிவிட்டாள்
மாற்றுவழி தெரியாத கனகசபையும்
மனத்தை அவள் மீது பதித்து விட்டான்
போற்றுகின்ற அவர்கள் காதல் வாழ்வு
பொழுதொரு வண்ணமாய் வளர்ந்த போது

மகளுக்கு வரன் தேடும் படலத்தில்
மாண்புமிகு வீரக்குட்டியாரும்
முயற்சிகளை மேற்கொள்ளும் செய்தி கேட்டு
மூர்ச்சித்தாள் தங்கம் அந்தச் செய்தி
காற்றினும் கடிதாக கனகன் காதில்
கணீரென ஒலிக்க அவனும் சோர்ந்து
செய்வது அறியாது திகைத்த வேளை
செய்தி ஒன்று அவன் காதில் ஒலித்ததம்மா.

படிக்காத மூடனுக்கு எந்தன் பெண்ணை
பக்குவமாய் வளர்த்தவளை என்னுயிரை
எப்படித்தான் கொடுப்பதற்கு இயலுமென்று
வீரக்குட்டியார் விளங்காமல் விதைத்த வார்த்தை
கனகசபையின் காதுகளில் தணலாய்ப்பாய
கவலையுடன் அவனும் செவி மடுத்து
கல்வியின் சிறப்பை உணர்ந்து கொண்டு
கடுமையாய் உழைத்து வெற்றி கண்டான்.

அன்றெடுத்த முடிவுதான் அல்லும் பகலும்
அயராதுழைத்து ஆற்றல் பெற்று
வென்று விட்டான் கனகசபை தமிழ் மொழியில்
விரிவுரைகள் ஆற்றுதற்கும் புலமை பெற்றான்
திசைதோறும் புகழோங்க வாழ்ந்த அவன்
செந்தமிழ் பயிலுதலில் வேட்கையுற்று
வசைபாடும் மாமனின் வாயடைக்க
வழிதேடி முயன்று வெற்றி கண்டான்.

‘கனகத்தை கணவனாய் மனதிருத்திக்
கற்பனையில் சில காலம் கழித்துவிட்டேன்
கனகமே! எனக்கு எல்லாம்’என்றாள்
‘கண்ணழகி’ தங்கம் தந்தையிடம்
படிக்காத கனகசபை உனக்கெதற்கு?
பண்பாடு இல்லாமல் பேச வேண்டாம்
முடியாது ஒருகாலும் ஒப்பமாட்டேன்
முறைக்காதே! தங்கம் என்றார் தந்தை.

படிக்காதவர் என்று சொல்வ துண்மை
படிக்காத போதிலுமவர் மேதையப்பா
படித்தவர்பால் இல்லாத பண்பு மேன்மை
பயபத்தி மற்றவரை மதிக்கும் மாண்பு
நடிக்காது சத்தியத்தைக் கடைப்பிடிக்கும்
நல்லவராய் மிளிர்கின்ற அவர் மேலோர்
பிடிக்காத வேறொருவர் கரம் பற்றல்
பெண்மைக்கு அழகல்ல நானும் ஒப்பேன்.

தங்கம் சிறிதேனும் தயக்கமின்றித்
தந்தையிடம் சொன்ன செய்தி கேட்டு
பங்கம்தான் வந்ததா?நமக்கு என்று
பரதவித்து தந்தை பின்பு சொல்வார்.
என்னதான் நீ சொன்ன போதும் தங்கம்
ஏற்கேன் நான் அந்தப் ‘பொடியன்’ வேண்டாம்
‘சொன்னதைச் சொல்லும் கிளியைப் போல’
சொல்ல நீ வெண்டாம் நிறுத்து என்றார்.

தங்கமோ தவித்தாள் கொதித் தெழுந்தாள்
தந்தையைப் பார்த்து மேலும் சொல்வாள்
நல்லது தந்தையே உங்கள் சொல்லை
நானும் ஏற்கிறேன் எனக்கு இனி
வாழ்வென்ற ஒன்று வேண்டாம் என்றாள்
வலிந்து நீங்கள் செய்வித்தால் மாய்வேன் என்றாள்.
வெலவெலத்துப் போனார் வீரக்குட்டி
வியர்த்தது உடலெல்லாம் நடுங்கிச் சொல்வார்.

தங்கமே!நாங்கள் பெற்ற தவக்கொழுந்தே
தகாத வார்த்தைகள் பேச வேண்டாம்
பங்கமாய் எதனையும் செய்யவேண்டாம்
பார்க்கலாம் காலந்தான் பதிசொல்லு மென்றார்.
ஏக்கமாய்த் தந்தையைப் பார்த்த தங்கம்
எப்படிப் பேசுவது என்றறியாது
துக்கமாய் வீட்டுக்குள் நுளைந்து தாயின்
மடியிலே துவண்டு அழுது தீர்த்தாள்.

கனகசபை மாமனின் கதையைக் கேட்டு
கலங்காது மனத்திலே உறுதி பூண்டான்
வசையெதையும் ஏற்காத மறவர் நெஞ்சம்
வற்றாத ஊக்கமும் துணிவும் கொண்டு
திசைதோறும் புகழ் படைத்த கனகசபை
செந்தமிழைப் பயிலுவதில் நாட்டமுற்றான்
வசைபாடும் மாமனின் வாயடைக்க
வழி தேடி முயன்று வெற்றி கண்டான்.

ஐயனார் கோயிலிலே அமுது வைத்து
ஐங்கரன் விரதத்தைப் பூண்டு மக்கள்
பக்தி வெள்ளத்தில் மூழ்கி இறைவன்
பண்ணிசைகள் பாடி மகிழ்ந்த வேளை
தற்செயலாய் அந்தப் பக்கமாக
தனியாக வந்த வீரக்குட்டி
செயற்கரிய செயலொன்றைக் கண்டதாலே
திகைப்புற்று நின்றார் வியப்போடு.

பண்ணிசைக் குழுவின் தலைவனாக
பார்ப்பவர்கள் பரவசப்படும் நிலையில்
கனகசபை கணீரென்ற குரலொலியில்
கட்சிதமாய்ப் பாடுகின்ற காட்சி கண்டார்
பண்ணிசைத்துப் பக்குவமாய்ப் பாடி அவன்
பயன் சொல்லும் அழகையும் கேட்டு நின்றார்
எப்படி இது என்று தெரியாதாராய்
ஏக்கமுற்று நின்ற அந்த வேளை

படிக்காதவன் என்று நீ சொன்ன
பழிச் சொல்லை ஏற்காத கனகசபை
துடிதுடித்துப் போய் விட்டான் துயரத்தோடு
துறைபோகக் கற்றான் தமிழ் மொழியை
நடிக்காதவன் இவன் நல்ல பிள்ளை
நம் தங்கத்துக் கேற்ற துணைவனாவான்
பிடிவாதம் பிடிக்காதே! கனகுவுக்குப்
பிள்ளையைக் கொடு என்றவர் தந்தை சொன்னார்.

 வே.தங்கராசா.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment