Thursday, November 01, 2012

கப்பல் துறை

கப்பல் துறை,திருகோணமலை

உலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறைக் கிராமம் அமைந்துள்ளது. இது மிகப்பழங்காலத்தில் இக்கிராமத்திற்கு வழங்கப்பட்ட காரணப் பெயராகும்.

தம்பலகாமம் இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் ‘தம்பை நகர்’ என்ற பெயருடன் வணிகப்பெரு நகராக விளங்கியிருக்க வேண்டும் என்றும், அங்கு வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் கடல் துறையான கப்பல் துறையிலிருந்து கப்பல் ஊர்ந்து ‘திரைகடல் ஓடியும் திரைவியம் தேடினர்’ என்றும் , எப்பொழுதும் கப்பல்கள் வருவதும் போவதுமாக இருந்த இடம் ‘கப்பல்துறை’ எனப் பெயர்பெற்றது எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இங்குள்ள காடுகளில் ஆங்காங்கே காணப்படும் சிதைவுற்ற கட்டடங்களும் செதுக்கப்பட்ட கற்தூண்களும் இக்கருத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.

குளக்கோட்டு மன்னன் தம்பலகாமத்தில் அமைத்த கோணேஸ்வரத்திற்குத் தீர்த்தமாகக் கப்பல்துறையில் அமைந்த ‘பாவநாச ஏரி’ப் பிரதேசம் காலஓட்டத்தில் கரைந்து காடாகி இன்று இலைமறை காயாக உள்ளதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் அற்புத உண்மையாகும்.
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரிப்பத்து வைராவியார் குடும்பத்தினர் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இத்தீர்த்தத் தடாகத்திற்குச் சென்று பொற்கல்லிட்டு வழிபாடியற்றி வருவதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிங்க விஜயபாகுவின் படையெடுப்புக்குப் பயந்து மூன்றாம் பராக்கிரமபாகு பாதுகாப்புக் கருதி இலங்கையின் கிழக்குப் பகுதியில் ‘தம்பை நகரில்’ கரந்துறைந்து தங்கியிருந்தான் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அறிஞர் தெல்லியூர் செ.நடராசா அவர்கள். மூன்றாம் பராக்கிமபாகு தம்பலகாமத்தில் பல வருடங்கள் கரந்துறைந்து வாழ்ந்தான் என்பதற்கு ‘சூளவம்சம்’ இரண்டாம் பகுதியை ஆதாரம் காட்டியுள்ளார்.

தம்பலகாமம் ஒரு அரசனும் அவனது படைகளும் கரந்துறைவதற்கு ஏற்ற இடமில்லை என்பதை கற்றறிந்தோர் சந்தேகத்திற் கிடமில்லாமல் ஏற்றுக் கொள்வர்.அடர்ந்த காடுகளும் மலைகளும் கடலும் சூழ்ந்த கப்பல்துறையே இதற்கு மிகப் பொருத்தமான இடமாகும் முன்பு குறிப்பிட்டது போல ஒரு அரசன் வாழ்ந்ததற்கான அழிபாடுகள் இங்கேயே காணப்படுகின்றன.

‘சரசோதிமாலை’ என்னுஞ் சோதிடநூலின் ஆசிரியரான தேநுவரைப் பெருமாள் என்னும் போசராசன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரச சபையிலே இந்நூலின் அரங்கேற்றம் நடைபெற்றது எனக் கூறுகிறார். தம்பலகாமம் அக்காலத்தில் மிகச்செழிப்போடு விளங்கிய வணிகப்பெருநகர் என்றும் அங்கு பாதுகாப்பாக இருந்த மூன்றாம் பராக்கிரமபாகு பாண்டிநாடு சென்று மாறவர்மன் குலசேகர பாண்டியனோடு சமரசம் செய்து கொண்டு  கி.பி.1302 இல் அரசனானான் எனவும் வரலாறு கூறுகிறது.

திருகோணமலை துறைமுகத்தைப் போல சுற்றிவர மலையரண்கள் கப்பல்துறைக்கு இல்லையாயினும் கப்பல்துறையைச் சுற்றிவர தென்னந்தோப்புக்கள் அணிசெய்கின்றன. கிழக்கே கிண்ணியா தெற்கில் முனைச்சேனை ,கச்சைக்கொடித்தீவு ,காக்காமுனை, மயில்தீவு,சூரங்கல் மேற்கே தம்பலகாமம் ஸ்வாமிமலை என்று சுற்றிவர ஊர்கள் உள்ளதால் தென்னந்தோப்புகளுக்குள் ஒழித்துக்கொண்டிருக்கும் அழகிய கடலேரியாகவே கப்பல்துறை காட்சியளிக்கிறது.

இக்கிராம மக்கள் 1985 ஆம் ஆண்டு மீளக்குடியமர்த்தப் பட்டனர். அமரர் அஸ்ரப் அவர்களும் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.அ.தங்கத்துரை ,திரு.இரா.சம்பந்தன் அவர்களும் இப்புதிய குடியேற்றக் கிராமத்திற்குக் காரணர்களாக இருந்தனர். இங்கு குடியேறியுள்ள மக்களில் பெருந்தொகையானோர் மலை நாட்டைச் சேர்ந்தவர்களாகும்.
இந்துக்கோயில்கள் நாலும் பள்ளிவாசல்கள் இரண்டும் கிறுஸ்தவக் கோயில்கள் இரண்டும் இக்கிராமத்தில் அமைந்துள்ளன. இந்துக் கோயில்களில் திருக்காளத்தீஸ்வரர் கோயில் குறிப்பிடத்தக்க பலஅ ம்சங்கள் நிறைந்த கோயிலாகக் காணப்படுகிறது.

திருக்காளத்தீஸ்வரர் கோயில்


கடல் மட்டத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்தில் காட்சிதரும் இக்கோயிலில் திருக்காளகஸ்தீஸ்வரரும் பூங்கோதை அம்மையாரும் பூசிக்கப்படுகின்றனர். இக்கோயிலிலுள்ள தியான மண்டபம் அனைத்து அடியார்களினதும் மனங்களை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தியான மண்டபத்தில் வீற்றிருக்கும் மௌலீஸ்வரரை தரிசிக்கப் பத்தர்கள் அடிக்கடி இக்கோயிலுக்கு செல்லுகின்றனர். தொண்டர் சண்முகராசா ஐயா அவர்கள் இக்கோயிலின் தர்மகர்த்தாவாகவும் பூசகராகவும் அரும்பணியாற்றி வருகிறார்.

இக்கிராமத்தில் வாழ்பவர்களில் பெரும்பான்மையோர் விவசாயிகள். கப்பல்துறைக் கடலில் மீன், நண்டு, இறால் ஆகியன பிடிக்கப்படுகின்றன. இஸ்லாமிய மக்களே இதையொரு தொழிலாகக் கொண்டுள்ளனர்.  கப்பல்துறையில் ஒரு தமிழ்க்கலவன் பாடசாலை உண்டு. சரஸ்வதி வித்தியாலயம் என்ற பெயரில் இப்பாடசாலை இயங்கி வருகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் இப்பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர். பாடசாலைக்கு அண்மையில் ஆச்சரியம் தரும் வகையில் ஒரு நீரூற்றுக் காணப்படுகிறது. மழையில்லாத காலத்திலும் இந்நீரூற்றிலிருந்து நீர் கசிந்து ஓடுவதை இன்றும் காணலாம்.இப்பகுதி மக்கள் பெரிதும் இந்நீரூற்றைப் பாவித்து வருகின்றனர்.

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. அறியாத பல தகவல்கள்...

    மிக்க நன்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.தனபாலன் அவர்களே.

      Delete
  2. கப்பல் துறை பற்றி இத்தனை விபரங்களா! பகிர்வு அருமை.

    என் கணவர் தங்கையும் சிலகாலம் கப்பல்துறை பாடசாலையில் கடமையாற்றியிருக்கிறார்.

    ReplyDelete
  3. நன்றி இமா அவர்களே.

    ReplyDelete