இன்றைய நாகரிக மனிதன் பல இலட்சம் ரூபா செலவு செய்து மாடிவீடுகளைக்கட்டிக் குபேர வாழ்க்கை வாழ்ந்தபோதிலும் மனித குலத்தின் காட்டுவாழ்க்கைச் சகாக்களான மிருகங்கள் பறவைகள் மரம் ,செடி ,கொடி வகைகளை மறந்து விடவில்லை.
மனிதன் மிருகங்களையும் பறவைகளையும் மிகச்சிரமப்பட்டு வளர்த்து அன்பு பாராட்டுவதுடன் நமது முன்னோர்கள் காட்டு மிராண்டிகளாகக் கானகத்தில் வாழ்ந்த காலங்களில் நிழல் தந்து குடில் அமைத்துக் கொள்ள உதவிய தாவரவர்க்கங்களையும் மறந்து விடவில்லை.வீட்டு வராந்தாக்களில் பூஞ்செடிகளை வளர்த்தும் கொடிகளை வளர்த்துப் படரவிட்டும் அழகு செய்வதைக் காணலாம். மனிதனின் நன்றி உணர்வு இவ்வளவுடன் நின்று விடவில்லை. காட்டுவிலங்குகளை மையமாக வைத்துப் பழமொழிகளை உருவாக்கி மிருகங்களின் நினைவையும் என்றும் நினைக்கச் செய்துள்ளது.
காட்டு விலங்குகளில் யானைகள் என்றுமே மனிதனுக்கு உபயோகமான மிருகமாகும். மனிதன் யானைகள் பற்றிய பழமொழிகளை உருவாக்கி நினைவு கூர்ந்து வருவது வரவேற்கத்தக்கதே.எனினும் மனிதனை மோப்பம் பிடித்து வந்து கடித்துக் குதறும் கொடிய விலங்கான கரடிகள் பற்றியுமல்லவா பழமொழிகள் ஆக்கியுள்ளான். அப்பழமொழிகள் எல்லாம் ஏதாவது ஒரு முறையில் மனித குலத்தின் நல்வாழ்வுக்கு ஏற்ற புத்திமதிகளாகவே அமைந்துள்ளன.
‘கரடி காணாப் பொல் நல்ல பொல்’ இப்படி ஒரு பழமொழி உண்டு.மெலியோர் மத்தியிலிருந்து ஒருவன் தன்னைவிட வீரன் யாருமில்லை என்று அகங்காரமாகப் பேசும் தோரணையில் இப்பழமொழி அமைந்திருக்கிறது. கரடிகள் இயற்கையாகவே மூர்க்கமுள்ளவை. நித்திரை கொண்டு எழும் சமயம் கரடியின் கோபம் உச்சகட்ட நிலையிலிருக்கும் அவ்வேளை எதிர்ப்படும் மரம், செடி எதுவானாலும் கடித்து நொறுக்கும்.அதுபோல ஒரு தடியன் வாய்வீரம் பேசிக்கொண்டிருக்கும் சமயம் கோபத்தில் கொதிக்கும் ஒரு முரடன் வந்துவிட்டால் என்ன நடக்கும்? வீரம் பேசியவனின் பாடு திண்டாட்டமாகி விடும். உலகத்தில் ஒன்றுக்கு மேல் இன்னொன்று உண்டு. ஒருவனை அடக்க இன்னொருவன் இருப்பான் என்பதையே ‘கரடிகாணாப் பொல் நல்ல பொல்’ என்ற பழமொழி சுட்டிக்காட்டுகிறது.
‘கரடியாகக் கத்தியும் பயனொன்றும் இல்லை’என்பது இன்னொரு பழமொழி. கரடி பல யானைகளின் சத்தத்தையும் ஒரு ஆள் பலத்தையுமே உடையது என்று வேட்டைக்காரர்கள் கூறுவர். முதலை பிராணிகளை தனது பலம் கொண்ட வாலால் அடித்து மடக்கி உணவாக்குவது போல கரடி பெரிதாகச் சத்தமிட்டே மனிதனையும் மிருகங்களையும் நடு நடுங்கச் செய்து வெற்றிவாகை சூடுகிறது.சிங்கத்தின் கர்ச்சனைக்கு அடுத்ததான பயங்கரக் கர்ச்சனை கரடியினுடையது எனின் அது மிகையாகாது. பெருங்குரல் எடுத்துக் கரடியாகக் கத்தியும் பலன் கிடைக்கவில்லை என்பதையே இப்பழமொழி உணர்த்துகிறது.
‘கரடியனார் பிறை கண்ட மாதிரி’ இப்படியும் ஒரு பழமொழி வழக்கிலுள்ளது. கரடிகள் பகலில் உணவு தேடி இரவில் கும்பகர்ணத்தூக்கம் தூங்கும் இயல்பின.எப்போதோ ஒரு சமயம் கரடிகள் அபூர்வமாக விளித்துக் கொள்வதுமுண்டு. அப்போதெல்லாம் ஆகாயத்தை நோக்கும் கரடிகள் பிறைச்சந்திரனைக் காண்பதுமுண்டு. இதே போலத்தான் மிக விரும்பும் நண்பர் ஒருவரை எதிர்பாராத வகையில் சந்திக்க நேர்ந்தால் ‘என்ன கரடியனார் பிறைகண்டமாதிரி இருக்கிறதே’எனச் சொல்வது வழக்கமாக உள்ளது.
‘சிவ பூசையில் கரடி புகுந்த மாதிரி’ கரடிப் பழமொழிகளில் இப்பழமொழி பிரசித்தமானது. பெரும்பாலான மக்களால் எச்சமயத்திலும் உபயோகிக்கப்படும் ஒரு பழமொழியாக இது உள்ளது. குறிப்பாகச் சிவபூசையில் ஈடுபடும் பக்தர்கள் பூசையை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்த மாட்டார்கள். ஆனால் சிவபூசை நடைபெறும் இடத்தில் கரடி புகுந்தால் என்ன நடக்கும்.அந்த இடம் அல்லோகலப்படும் பூசையும் தானாகவே நின்றுவிடும். இதே போல தீயவர்களின் வரவு நல்ல விசயங்களையும் பாதித்துவிடும் என்பதையே இப்பழமொழி
எடுத்துக் கூறுகிறது.
தம்பலகாமம் க.வேலாயுதம்
(1983) சிந்தாமணி
விளக்கங்கள் மனதில் புகுந்து விட்டது...
ReplyDeleteநன்றிங்க...
மிக்க நன்றி திரு.தனபாலன் அவர்களே.
Deleteஅருமையான விளக்கம்.
ReplyDeleteகட்டுரைகளைக் கவனமாகப் பாதுக்காத்து வைத்திருந்து மீண்டும் பார்வைக்கு விட்டிருக்கிறீகள். நன்றி ஐயா.
நன்றி இமா அவர்களே.
Deleteகரடிப்பழமொழிகள் --- சுவரஸ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா..
ReplyDelete