“கோகிலா வருகிறாயா திருவிழாவுக்குப் போகலாம்” என்று பக்கத்துக் குடிசைக்காரி கனகம்மா கேட்டாள்.
“போகலாம் தான் கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி கூட இல்லாமல் எப்படியக்கா அவ்வளவு சனக்கூட்டத்திற்குள் போவது?”என்று கேட்டாள் கோகிலா.
“நீ தங்கச்சங்கிலி போட்டு த் திருவிழா பார்க்க ஆசைப்படுகிறாயாக்கும்! அது இந்த ஜன்மத்தில் நிறைவேறும் என்று நான் நம்பவில்லை. சும்மா வா. சேலைத்தலைப்பால் கழுத்தை மூடிமறைத்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து கொண்டு கடைவீதிகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்து விடலாம்” என்றாள் கனகம்மா.
“ஏனக்கா ஆண்கள் சனம் கூடும் இடங்களுக்கு ஆபரணம் இல்லாமல் போவதுபோல் பெண்களும் போனால் நம்போன்ற பணவசதி குறைந்த பெண்களும் கூச்சமில்லாமல் திருவிழாவுக்குப் போகலாம் தானே! இது என்னடா என்றால் வீட்டில் அணிந்திருக்கிற நகைகள் போதாதென்று பெட்டியிலுள்ள நகைகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறார்கள். இப்படி அதிக நகைகள் அணிந்து பொன் காய்க்கும் மரங்களாகச் சனங்கள் கூடும் இடங்களுக்கு வரும் பணக்காரக் கர்விகளின் நகைகள் தயவு தாட்சண்ணியம் இன்றி கொள்ளையடிக்கப்பட வேண்டும்.இப்படி நடந்தால்தான் பணக்காரிகளின் கர்வம் அடங்கும்.” என்றாள் கோகிலா.
“ஆகா! ஆகா! நல்ல ஐடியாதான்.இது வெற்றி பெறும் நாளில் உனக்குப் பாராட்டுத் தெரிவிப்பவள் நானாகத்தான் இருக்கும். திருவிழா போன்ற சனங்கள் கூடும் இடங்களில் தங்களிடமுள்ள தங்கநகைகளை எல்லாம் போட்டு வந்து காட்டினால்தானே அவர்களைப் பெரிய பணக்காரர்கள் என்று எல்லோரும் மதிப்பார்கள்.”என்றாள் கனகம்.
“உண்மைதான் அக்கா. என் எண்ணமெல்லாம் ஆபரணங்கள் சுமந்து தங்களை உயர்ந்தவர்கள் என்று எண்ணும் இந்தப் பெண்களின் செருக்கு அழிய ஒரேவழி திருட்டுத்தான்.” என்றாள் கோகிலா.
“நான் அப்போதே சொன்னேனே. நல்ல யோசனை.இதை யார் செய்யப் போகிறார்கள் என்பதுதான் பிரச்சனை. இதைப்பிறகு யோசிப்போம். இப்போது வா. திருவிழாவுக்குப் போவோம்.” என்று கனகம் விடாமல் அழைத்தாள். கோகிலாவும் சம்மதித்தாள்.இருவரும் இருபத்தைந்து வயதுக்கு மேற்படாத இளம் வயதினர். நல்ல அழகிகள். திருமணம் செய்து கொண்டவர்கள். வறுமை அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி வாடுபவர்கள்.
வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்தில் கொடியேறி திருவிழா நடந்து கொண்டிருந்தது.இன்று பத்தாம் நாள்; திருவிழா.கோணேஸ்வரப்பெருமான் உமா சமேதராகப் பரிவாரத் தெய்வங்களுடன் சப்பறத்தில் வெளி வீதி பவனிவரும் விழா.இனவே அடுத்தடுத்துக் குடியிருக்கும் இப்பெண்கள் திருவிழாவுக்குப் போவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும்அந்த சனசமுத்திரத்தை கஷ்ரப்பட்டு ஊடறுத்து சப்பறம் நிறுத்தப்பட்டிருக்கும் கோபுர வாசலுக்கு வந்து விட்டனர். அந்தஇடத்தில் எங்கு பார்த்தாலும் பட்டுச்சேலை கட்டிநகையணிந்த நங்கையர்களும் வெள்ளை வேட்டி கட்டி மாறுகரைச் சால்வைகளை கரை தெரிய வடிவாக மடித்து இடுப்புக்கு மேலே கட்டிக் கொண்ட வாலிபர்களும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். திருவிழா உபயகாரர்கள் இராஜகோபுர வாசலுக்கு முன்னால் பெரியவழி விட்டு இரண்டுபக்கமும் முன்னோக்கி கம்புகள் நட்டு கயிறுகட்டி இடையிடையே குலையுடன் கூடிய வாழை மரங்களை நட்டு ஏனைய கயிற்றுப் பகுதிகளில் தோரணம் தாமரைப்பூ மாவிலைகள் தொங்கவிட்டு அழகாகச் சோடித்திருந்தனர்.
கோபுரத்திலுள்ள ‘மேகுரி’விளக்குகளின் ஒளியில் கோபுரவாயில் நீல மயமாகக் காட்சியளித்தது.கனகம்மா வேடிக்கை பார்க்க எங்கேயோ போயிருந்தாள். பட்டும் நகையும் பள பளக்கத் தேவதைப் பெண்கள் குழுமிய கோபுர வாசலில் கோகிலா அகப்பட்டுக் கொண்டாள். சேலைத்தலைப்பை இழுத்து இழுத்து கழுத்தை மூடினாலும் அவளால் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை. பக்கத்தில் இளநீர்க்குலையுடன் கட்டியிருக்கும் வாழை மரத்தின் இலை மறைவில் நின்று சிரசில் கைகூப்பி அம்மை அப்பனிடம் குறைகளையெல்லாம் கூறி மனமுருக வேண்டினாள் கோகிலா.
எங்கே திரும்பினாலும் நகை மயம். வந்திருக்கக் கூடாது என்று திரும்பியவள் அசந்தே போய்விட்டாள். புதிதாக அவ்விடத்திற்கு வந்த யுவதிகள் கூட்டம் சர்வாபரண பூசிதைகளாய் அவள் முன் தோன்றினர்.அவர்களுக்கு மத்தியில் சற்று உயரமான பேரழகி ஒருத்தி நின்றாள்.அவள் திருமணமானவள் என்று தெரிந்தது. அவள் கழுத்தில் பதினைந்து அல்லது இருபது பவுண் நிறையுள்ள பெரிய தாலிக்கொடி கயிறுபோல்த் தொங்கியது. தாலிக்கொடியின் உற்ற நண்பனைப் போல பெரிய சங்கிலியும் போதாக்குறைக்கு உட் கழுத்தில் பெரிய அட்டியல் கைகளில் காதுகளில் ஏன் கால்களிலும் கூட எங்கும் நகைகளாகவே தெரிந்தது. வாழைமர இலைமறைவில் நின்று அவளைப்பார்த்த கோகிலா மனமார நகைமயமாய் நிற்கும் அவளைச் சபித்தாள். ‘இவளுக்கேன் இத்தனை நகைகள். இறைவன் இவளுக்கு அளித்திருக்கும் பேரழகை நாள்முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாமே!’ என்று கோகிலா பொருமினாள்.
யாக பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுவாமிகள் சப்பறத்திற்கு எழுந்தருளும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால் அவ்விடத்தில் அதிகமான சனம் வந்து குவியத் தொடங்கினர். நிற்கமுடியாமல் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு அவஸ்த்தைப் பட்டனர். இந்த வேளைபார்த்து பறை மேளங்களுடன் காவடிகளும் பெரும் சனக்கூட்டமும் வந்தது. சன நெருசலால் நெருங்கியடித்துக் கொண்டு நிற்பவர்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். அவ்விடத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறிய முடியவில்லை. சனங்களின் அதிகரிப்பால்ஆலய கோபுரவாசல் அமளி துமளிப் பட்டது.
பயங்கர சன நெருசலான அவ்வேளையில் “ஐயோ! திருடன் திருடன்” என்றொரு கீச்சுக்குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. காவடிகளும் கூடவந்த சனங்களும் கோயிலுக்குள் போனபிறகுதான் அங்கு என்ன நடந்தது என்று தெரியவந்தது. பெரிய தாலிக்கொடியும் நகைகளும் போட்டிருந்த பெண்ணின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு திருடன் மாயமாக மறைந்து விட்டானாம் என்று அங்குள்ளவர்கள் கவலையோடு தெரிவித்தனர்.
திருவிழா பார்த்தது போதும் என்று கனகமும் கோகிலாவும் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தனர். “கோகிலா உன் புரட்சிக் கொள்கைக்கு கிடைத்த முதல் வெற்றி” என்றாள் கனகம்.“அப்படிச் சொல்லாதே அக்கா! அவளின் மங்கல நாணும் தாலியும் அல்லவா திருடுப்போய்விட்டது”என்று வேதனையுடன் சொன்னாள் கோகிலா. நகையைப் பறிகொடுத்த அந்தப் பெண்மணியின் முகம் அவள் மனதில் மீண்டு மீண்டும் தோன்றி என்னவோ செய்தது.
கோகிலா எதுவும் பேசாமல் மௌனமாகவே நடந்தாள்.கோயிலில் நடந்த சம்பவம் அவள் மனத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. என்னதான் அவள் பேசினாலும் காலம் காலமாகக் கண் போலக்காத்து வந்த கலாச்சாரப் பண்பாட்டை அவளால் விலக்கி வைக்க முடியவில்லை. நகையிழந்த பெண்ணின் மனம் எவ்வளவு பாடுபடும் என்று எண்ணி அவள் மிகுந்த கவலைப்பட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டே மெதுவாக வீடுநோக்கி நடந்தாள்.
தம்பலகாமம் க.வேலாயுதம்
( 1984 )
கோகிலாவிற்கு நல்ல மனது...
ReplyDeleteநன்றி...
கோகிலாவுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்ல மனதுதான் திரு.தனபாலன் அவர்களே
DeleteThe famous author Velautham is the guardian of our heritage and culture. I wonder the thoughts of Velautham. Actually vel is the arms(Autham) of God Murugan. The famous author V.K, in his book described the letter 'ahkanna' is the 'autham' of our Tamil Language. Our Velautham too is an Autham to safe gaurd our language and culture. Very beautiful picture captured our temple environment. Thank you Dr.
ReplyDeleteKernipiththan.
Thank you very much for your valuable comment Sir.
ReplyDelete