அந்தப் பையன் எதிர்பார்த்திருந்தபடியே பாடசாலை முடிவதைக்குறிக்கும் மணி அடித்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் பள்ளிக்கூடம் விட்டது. காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் இரண்டுமணிவரை அந்தப்பாடசாலைக் கட்டிடத்திற்குள் அடைபட்டுக் கிடந்த தங்களிடம் ‘கணக்கென்றும்’ என்றும் ‘வாசிப்பு’ என்றும் ‘சுற்றாடல்’ என்றும் ஆசிரியர்கள் இடையிடையே வந்து அதிகாரத்தோரணையில் கஸ்டம் கொடுத்ததெல்லாம் நின்று இப்போது வீட்டுக்குப் போகிறோம் என்ற ஆனந்த உணர்வுடன் மாணவர்களும் மாணவிகளும் வீடுகளை நோக்கி வீதியில் துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களில் தரம் நான்கில் கற்கும் சரவணன் என்ற ஒன்பது வயதுச் சிறுவன் பசியால் வாடிய முகத்துடன் விரைவாக நடந்து வீட்டுக்கு வந்தான். ‘அம்மா’ என்று உற்சாகமாகக் கூப்பிட்டான். பதிலில்லை. ‘எங்கே போயிருப்பா?’ என்று எண்ணியவனாகப் புத்தகங்களைக் கொண்டுபோய் உரிய இடத்தில் வைத்துவிட்டு சாத்தியிருந்த சமயல் அறைக்கதவைத் தள்ளினான். அங்கே அம்மாவும் இருந்தார், அப்பாவும் இருந்தார். அப்பா ஏதோ பேசியபடி அம்மாவின் கன்னங்களில் ‘பளார் பளார்’ என்று அறைந்து விட்டு பேசிக்கொண்டே வெளியே சென்றார். இந்தக் காட்சியை நேருக்கு நேர் கண்ட சரவணன் அதிர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாது அப்படியே நின்றான்.
மகனின் தலையைக்கண்ட தாய் ஓடிப்போய் மகனை வாரி அரவணைத்துக் கொண்டு ‘வா அப்பா சாப்பிட’ என்று அன்பொழுகக் கூறி உணவு பரிமாறினாள். சரவணன் தாயைப் பரிதாபமாகப் பார்த்தான். ‘சாப்பிடுவதிருக்கட்டும் உனக்கு அப்பா ஏன் அடித்தார் என்று சொன்னால்தான் சாப்பிடுவேன்’ என்று பிடிவாதமாகக் கூறினான். ‘நீ முதலில் சாப்பிடு அது ஒரு பெரிய கதை. நாளைக்குக் கட்டாயம் சொல்கிறேன்’ என்று கெஞ்சி வேண்டிக் கொண்டு மகனை சாப்பிட வைத்தாள்.
மறுநாள் சரவணன் உற்சாகமாக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது பாடசாலைக் கடிதங்களை அஞ்சல் அலுவலகத்தில் சேர்பிக்க அதிபரால் அனுப்பப்பட்ட மாணவன் வகுப்பறைக்குள் வரும்பொழுதே சிரித்துக் கொண்டு “அடே!சரவணா உன் அப்பா நன்றாகக் குடித்து விட்டு றோட்டுக்கானில் விழுந்து கிடந்தாரா? உன் அம்மா நாலைந்து பேருடன் வண்டி கொண்டு வந்து ஏற்றிக்கொண்டு போறாடா” என்று பெருஞ்சத்தமாக நாடகபாணியில் சொல்லிச் சிரித்தான். மாணவ மாணவிகள் சரவணனைப் பார்த்துக் கேலியாக ‘கொல்’ எனச்சிரித்தனர். அவர்களது சிரிப்பை அடக்க ஒரு ஆசிரியர் பிரம்பால் மேசையில் தட்டி சத்தம் போடாதீர்கள் என்று சொல்லவேண்டியிருந்தது.
சரவணன் படிப்பில் கெட்டிக்காரன். ஒவ்வொரு பாடத்திலும் நூறு தொண்ணூறு என்று புள்ளிகள் பெற்று எல்லா ஆசிரியர்களிடமும் ஏன் அதிபரிடமும் கூட நல்ல பெயர் வாங்கியிருந்தான். இதனால் அவன் வகுப்பு மாணவர்களுக்கு இயல்பாகவே பொறாமையாக இருந்தது. அவன் தந்தையின் குடியைப்பற்றி அவன் முன்னாலேயே பேசிப்பேசி மகிழ்வார்கள். இதனால் சரவணனின் பிஞ்சு இதயத்தில் ‘நாம் ஏன் பிறந்தோம்?’ என்ற விரக்தி தோன்றி வளர்ந்து வந்தது. படிப்பை விட மனமில்லாத சரவணன் தந்தையால் ஏற்படும் பழிப்புரைகளைச் சகித்துக் கொண்டு பாடசாலை சென்று வந்தான். இரண்டு மூன்று தினங்களாக எந்தவொரு கிண்டல்களும் இல்லாமல் இருந்தது. அவனும் மனஅமைதியடைந்து கற்றலில் முழு மூச்சாக ஈடுபடத் தொடங்கினான்.
பாடசாலை ஆரம்பித்து கடவுள் வணக்கம் முடிந்ததும் மாணவ மாணவிகள் அனைவரும் நாடக அரங்குக்கு அழைக்கப்பட்டனர். சமீப காலத்தில் மாற்றலாகி வந்தவரும் இந்த குறுகிய காலத்தில் நல்லவர் என்று சக ஆசியர்களாலும் மாணவ சமூகத்தாலும் மதிகப்படும் கணித ஆசிரியர் திரு.க.சிவப்பிரகாசம் நற்சிந்தனை ஆற்றினார். தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் தலத்தில் உறையும் உமா பாங்கரான கோணேஸ்வரப்பெருமான் அருட்சக்தி மிக்கவர் என்று அறிகிறேன். இந்த ஊரின் இயற்கை அழகு என்னைமிகவும் கவர்ந்துள்ளது.மனித வளமும் குறைசொல்லாத அளவில் உள்ளது. ஆனால் இவ்வளவு இருந்தும் என்ன பயன்? அமைதியான அழகான இந்த ஊருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு வெறிபிடித்த மிருகமும் இருப்பதைக் கண்டேன். என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது எல்லாமாணவர்களும் சரவணனைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினர். அச்சமயம் அதிபர் வந்து ஆசிரியரிடம் இரகசியமாக ஏதோ சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்பள்ளி வைத்தார்.
மாணவ மாணவிகள் உடனடியாக வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர். அன்று பாடசாலை முடிந்ததம் ஆசிரியர் சிவப்பிரகாசம் சரவணனுக்குச் சமீபமாக அவன் வீடு வரைவந்து திரும்பிச் சென்றார். புத்திக்கூர்மையுள்ள சரவணன் தனக்குக் காப்பாக ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தெரிந்து கொணடிருந்தான். ‘எல்லாம் தன் குடிகாரத்தந்தையால் ஏற்பட்ட அவமானம்’ என்று எண்ணியபோது அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.
சோர்ந்து வரும் மகனை அழைத்துச் செல்லவந்த தாயைக்கண்டதும் ‘கோ’ என்று குரல் எழப்பிக் கதறி அழுதுவிட்டான் சரவணன். தாய் ஓடி வந்து அவனைக்கட்டிக்கொண்டு அணைத்து ஆதரவாக “அழாதே அப்பா. நீ படித்து முன்னுக்கு வந்தால்தான் நம்முடைய துன்பங்கள் தீரும்” என்றாள் அவனுடைய தாய்.
“அம்மா நான் இனி பள்ளிக்கூடம் போகமாட்டேன் அப்பாவின் குடியால் பள்ளியில் நான் ஒரு அவமானப் பொருளாகப் பார்க்கப் படுகிறேன். இன்று நாடக அரங்குக் கட்டிடத்தில் நடந்த நற்சிந்தனை கூட்டத்தில் கணக்கு ஆசிரியர் பேசும் பொழுது வளம்நிறைந்த இந்தக் கிராமக்கில் ஒரு மதுவெறியரையும் கண்டு மனம் நொந்தேன் என்றார். எல்லா மாணாக்கர்களும் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள் எனக்கு சாகலாம் போல இருந்தது.” என்று பெரிய மனுசத்தோரணையில் கூறி தாயை தழுவிக்கொண்டு அழுதான்.
“அப்படிச் சொல்லாதே அப்பா. உன் தந்தை தங்கமானவர். என்னை மிக உயர் நிலையில் வைத்திருந்தவர். என்னைக் கட்டிக் கொண்ட பிறகே அவருக்குத் துன்பம் வந்தது. நான் ஒரு பாவி. என்னை மணந்ததால் தன் தந்தையை விட்டுப் பிரிந்து என்னையும் கூட்டிக்கொண்டு இந்த ஊருக்கு வந்தார். பொருள் கஸ்டத்தை சமாளிக்கவே ஒரு நாளும் கூலி வேலைக்குச் செல்லாத அவர் பலருடன் சேர்ந்து கூலிவேலைக்குச் சென்றார். அப்பொழுதுதான் இந்த நல்லவரும் குடிக்கப் பழகிவிட்டார். நமக்கும் நல்ல காலம் வரும். அவசரப்பட்டு நல்லவரான உன் தந்தையைப் பிழையாக எண்ணாதே. சாப்பிட வா” என்று பாசத்துடன் அழைத்தாள்.
சரவணனின் தந்தையான கதிரேசன் திடீரென அவர்கள் இருவரும் கதைத்துக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தார். இதை சற்றும் எதிர்பாராத தாயும் மகனும் என்ன நடக்கப்போகிறதோ? எனப் பீதியடைந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக மகன் சரவணனை வாரியணைத்து “வளர்ந்து வரும் இளங்குருத்தான உனக்கு இளம் வயதிலேயே அவமானங்களை சந்தித்து வருந்தச் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு” என்றார் கதிரேசன்.
தனது மனைவியின் பக்கமாகத் திரும்பி “மலர் நான் குடிவெறியில் உனக்குச் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல இருந்தும் நீ என்னை நல்லவன் என்று மகனுக்கு புத்திமதி சொல்கிறாய். தாயும் மகனும் என் குடிகார நிலைக்காக வருந்திச் சஞ்சலப்பட்டதை எல்லாம் வீட்டு விறாந்தையின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இன்றிலிருந்து நான் புதிய கதிரேசனாக மாறிவிட்டேன்.இனி மது என்ற சொல்லைக்கூட உச்சரிக்க மாட்டேன். இது சத்தியம்” என்று கூறித் தனது சத்தியத்தைக் கடைசிவரை காப்பாற்றினார்.
தம்பலகாமம் க.வேலாயுதம்.
கதிரேசன் போல பல உள்ளங்கள் திருந்த வேண்டும்...
ReplyDeleteதிருந்தினால் தான் மனிதனே...
மிக்க நன்றி
Deleteமனம் தொட்ட நிக்ழ்வு பதிவு
ReplyDeleteஅருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
ReplyDeleteபடங்கள் நான் கற்பித்த பாடசாலைகளையெல்லாம் வரிசையாக ஒரு முறை கண்முன் கொண்டு வந்தது.
ReplyDeleteஅருமையான கதை. வேலாயுதம் ஐயாவின் இந்தக் கதைகள் முன்பு பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றனவா? அறிந்து கொள்ள ஆவல்.
முதல் வெளிவந்த இரண்டு கதைகளும் சிந்தாமணியில் பிரசுரமாகியவை. இந்தக்கதை எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை. நன்றி இமா அவர்களே.
DeleteYes! Finally someone writes about Сialis.
ReplyDelete