Friday, October 05, 2012

அவனும் அவளும்

அவனும் ,அவளும்

அவன் பெயர் அமுதன் நல்ல
அழகிய இளங் கலைஞன்
தமிழினில் இனிமை கொஞ்சும்
தரமிக்க கவிதை செய்வோன்!
தம்பை மா நகரம் தந்த
தனித்துவம் மிக்க நல்ல
குடும்பத்தின் இளையோனாக
குதூகலமாக வாழ்வோன்.



தமிழின் இனிமை யெல்லாம்
தரும் அவன் கவிதை வெள்ளம்
அமிழ்தமாய்ப் படிப்போர் நெஞ்சை
அள்ளும் ஆற்றல் கண்டு
இவனொரு கம்பன் என்று
இயம்புவோர் நிறைய உண்டு
அவனோ! சிறிதும் கர்வம்
அல்லாத நெறியில் வாழ்வோன்.

கல்வி மேடு என்னும்
கலைஞர்கள் வாழ் விடத்தில்
வல்ல தோர் குடியில் பிறந்த
வனிதையாம் வேல்விழியாள்
செல்லமாய் வாழும்போது
திடீரென இவனை ஓர்நாள்
கண்டதால் மோக முற்றுக்
காதலில் வீழ்ந்தாள் அன்றோ!

பொன்னுத்துரை என்னும்
போடியார் மகளாய்ப் பிறந்த
வேல்விழி என்னும் நங்கை
வெண்ணிலா நிகர்த்த பெண்ணாள்
நளினமாய்த் தமிழில் நல்ல
நயவுரை ஆற்ற வல்லாள்
விழிகளால் புன்னகைக்கும்
வேல்விழி என்னும் நங்கை.

அமுதனும் அவளும் சேர்ந்து
அழகாகப் பழகும் நாளில்
திடீரென ஓர் நாள் அந்தச்
செய்தியைக் கேட்டு மாய்ந்தாள்
வேல்விழி அமுதனோடு
விருப்பமாய்ப் பழகு மாற்றை
தகாதென மறுத்த தந்தை
தலைவனாய் வேறாள் பார்த்தார்.

இடிதனைக் கேட்ட நாகம்
இடருற்று மாய்வதைப் போல்
நொடிதனில் மாய்ந்த நல்லாள்
நோக்கத்தைப் புரிந்து கொண்டு
அமுதனே என்றன் துணைவன்
அதற்கிடை யூறு நேர்ந்தால்
இணங்கிடேன்! இல்லை யென்றால்
இறப்பினை ஏற்பேன் என்றாள்.

என்றவள் துணிந்து பேச
எதிரியாய் வெகுண் டெழுந்து!
பொன்னுத் துரை என்னும்
போடியார் சொல்லு கின்றார்
வேல்விழி என்றன் கண்ணே!
விதர்ப்பமாய்ப் பேச வேண்டாம்
திரண்ட என் சொத்தும் நல்ல
திரவியக் குவியல்களும்

வளவுகள் வயல்கள் என்று
வளமுறு முதுச மெல்லாம்
உனக் கெனத் தருவேன் அந்த
உதவாத அமுதன் வேண்டாம்
திரண்ட என் செல்வ மெல்லாம்
சேர்த்து நீ புதிய வாழ்வை
தோடங்கிடு அமுதன் உறவைத்
தொலைத்திடு என்று சொன்னார்.

அன்பினால் இணைந்த எங்கள்
அருமையாம் காதல் வாழ்வை
பொன் பொருள் ஆசை காட்டிப்
புதைத்திடச் சொல்லு கின்றீர்
அன்பினால் இணைந்த வாழ்வை
அழித்திடல் பாவம் அப்பா!
அமுதனைக் கரம் பிடித்து
வாழ்தலே அறமு மாகும்!

என்றவள் இயம்பி விட்டு
எழுந்தனள் அமைதியாக
பொன் பொருள் எல்லாம் விட்டு
புகுந்தனள் அமுதன் இல்லம்
அண்ணலும் அவளும் அங்கே
அனைவரும் போற்றும் வண்ணம்
பொன் மயமான வாழ்வைப்
புரிந்தனர் புவியோர் போற்ற.

வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. வரிகள் அருமை... ஒரு கதையே சொல்லி விட்டீர்கள்...

    முடிவில் சுபம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான வரிகள்.
    இப்படியான எழுத்தை இப்போது காண்பது அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இமா அவர்களே.

      Delete
  3. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

    ReplyDelete
  4. "அன்பினால் இணைந்த வாழ்வை
    அழித்திடல் பாவம்..."
    அருமையான வரிகள்

    ReplyDelete