கத்தி கொண்டு களங்கள் பல
கண்ட காலம் போச்சு
புத்தி இன்று போரிலே
புதுமை காண லாச்சு.
தாவுகின்ற மனதை வென்று
தடுத்து ஆய்வில் விடுத்து
ஏவு கணைகள் செய்து
ஏற்றம் கொண்டு வாழ்வோம்.
புதிய கலைகள் உலகில்
புரியும் ஆற்றல் அறிந்து
விதிகள் செய்து வாழ்வோம்
வெற்றி நமக்கு உண்டு.
ஆற்றல் நமக்குள் உண்டு-இதை
அறிய வேண்டும் தம்பி –பிறர்
தூற்ற வாழ்தல் நலமோ? -நீ
துணிவு கொள்ளு தம்பி.
வீறு கொண்டு எழுந்தால்
வெற்றியுண்டு மகனே!
நூறு ஆண்டு வாழ்வோம்
நோய் நொடிகள் எதுவுமின்றி.
நமது மொழியைப் போற்றி
நாம் வாழவேண்டும் மகனே!
எமது வாழ்வும் ஓங்கும்
ஏற்றம் வாழ்வில் தோன்றும்.
விஞ்ஞானம் கற்று நாம்
வீறு கொண்டு எழுவோம்
அஞ்ஞானம் அழியும் நல்
ஆற்றல் பெற்று மகிழலாம்.
மனதில் உறுதி இருந்தால்
வாழ்வு சிறக்கும் மகனே!
மனதில் உறுதி கொண்டு
வாழ்ந்து காட்டு மகனே!
மனதை வெற்றி கொண்டவர்
வாழ்வை வெற்றி கொள்வரே!
மனதை வெற்றி கொண்டு நீ
வாழ்ந்து காட்டு உலகிலே.
முயச்சி ஒன்றே மனிதனை
முழுமை யாக்கும் கண்மணி
தயக்கம் இன்றி எழுந்து வா!
தரணி போற்ற வாழலாம்.
வே.தங்கராசா
கருத்துள்ள வரிகள் சார்...
ReplyDeleteமிகவும் பிடித்தவை :
/// மனதை வெற்றி கொண்டவர்
வாழ்வை வெற்றி கொள்பவரே...///
நன்றி திரு தனபாலன் அவர்களே.
ReplyDelete