Sunday, September 02, 2012

திருகோணமலை மாவட்டத்தின் ஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது.  “ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.

தொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
Alenkerny

இங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர்.  இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.
”கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற ஒளவைப்பிராட்டியாரின் அறிவுரையைத் தமிழர்கள் கடைப்பிடிப்பவர்களல்லவா? அதனைக் கட்டியங்கூறுவதுபோல ஆலங்கேணியின் முகப்பில் ஒரு விநாயகர் ஆலயம் வழிபாட்டுத் தலமாக உள்ளது.

ஆலங்கேணி ,தாமரைக்கேணி,ஈச்சந்தீவு என மூன்று பிரிவாக இந்தக் கிராமம் அமைந்துள்ளது. ஆலங்கேணியின் பிரதான வீதியில்  விநாயகர் அரசினர் தமிழ் மகா வித்தியாலயமும்  ஈச்சந்தீவில்  விபுலானந்தர் வித்தியாலயமும் அமைந்துள்ளன.மற்றும் உப அஞ்சல் நிலையம், கூட்டுறவுச் சங்கம், சனசமூகநிலையம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.

ஆலங்கேணியைச் சுற்றிச் சூழ முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களே காணப்படுகின்றன. ஆலங்கேணிக்கு வடக்கே பெருந்தொகையாக முஸ்லிம் மக்கள் வாழும் கிண்ணியாப் பட்டினமும் கிழக்கே உப்பாறு தென்மேற்குத்திசையில் பூவரசந்தீவு, நெடுந்தீவு ,சமாவைத்த தீவு மேற்கே முனையிற்சேனை ,கச்சைகொடித்தீவு ,காக்காமுனை ,சூரங்கல் போன்ற இடங்கள் காணப்படுகின்றன.

ஆலங்கேணிக்கு தென்மேற்கே ஏழு மைல் தூரத்தில் தமிழ்ச் சைவர்கள் அடர்த்தியாக வாழ்ந்த திருநகரில் ''பாண்டியனூற்றுச் சிவாலயம்'' அதற்கண்மையில் “பாவநாசத் தீர்த்தம்” போன்றவைகள் இன்று அழிந்த நிலையில் காணப்படுகின்றன.பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புடைய மாரி வயல்களை தன்னகத்தே கொண்ட இந்தத் திருநகர் இன்று திரிபடைந்து “தீனேரி” என அழைக்கப்படுகிறது அந்த திருநகர் அழிந்தபோது அங்கு வாழ்ந்தவர்களில் ஒரு சிறு தொகையினரே ஆலங்கேணியில் குடியேறி வாழ்ந்து வருவதாக ஐதிகம்.

ஆலங்கேணியில் வாழும் ஆண்கள் ஆஜானுபாகுவாக நல்ல திடகாத்திரமான தேக அமைப்பு உடையவர்களாகவும் காணப்படகின்றனர். பெண்கள் மெல்லியராயினும் சுறு சுறுப்புடையவர்கள்.தங்கள் வாழ்விடம் கடல் நீரால் சூழப்பட்டு பயிரிட்டுத் தொழில் செய்ய வாய்ப்பற்றதாக இருக்கிறதே என்று இம்மக்கள் சோம்பியிராமல் “முயற்சி திருவினையாக்கும்”என்ற வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழியைக் கருத்தில் கொண்டு ஆலங்கேணி மக்கள் தமக்கென ஒரு தொழிலை சிருஷ்டித்துக் கொண்டனர். அந்தத் தொழில் அபாயம் நிறைந்த கஷ்டமான தொழிலாயினும் அவர்கள் தயங்கவில்லை. தொடர்ந்து செய்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டனர்.

தெற்கே ‘கொய்யாம்புளி’ என்ற கடலாற்றைத் தோணியில் கடந்து ‘கண்டக்காடு’என்ற மாரி வயல் வெளிகளையும் கடந்து ‘சாந்தப்பணிக்கன்’ என்னும் கானக நுழை வாயிலூடாக வானைத்தொட்டு நிற்கும் மராமரங்கள் அடர்ந்த காட்டில் எட்டுமைல் தூரம் நடந்து மகாவலிகங்கைக் கருகில் ‘வாளைமடு’’வண்ணாத்திபாலம்” போன்ற காட்டுப்பிரதேசங்களைக் கடந்து கங்கையோரம் உள்ள ‘பொன்னாங்கேணி’ப் பிரதேசத்தில் எருமை பசு மந்தைகளை வைத்துப் பாதுகாக்கும் வருவாய் மிக்க தொழிலை உருவாக்கிக் கொண்டனர்.

புத்திசாலிகளான இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுபோய் பால் விநியோகம் செய்யும் வியாபாரத்தை தொடங்கியதும் இத்தொழில் பெரும் இலாபகரமாக மாறியது.‘காவு’தடிகளில் பாற்குடங்களை வைத்துச் சுமந்து நடந்து கிண்ணியாவுக்கூடாக ‘நீரோட்டுமுனை’ என்னும் கடலாற்றைக் கடந்து ‘வெள்ளைமணல்’சீனன்வாடிக்கூடாக திருகோணமலை நகருக்குச் சென்று அங்குள்ள கடைகளுக்கு பால் தயிர் நெய் போன்ற பொருட்களை விற்றுவந்தனர்.

இந்தக் கடினதொழில் தினமும் தவறாமல் நடந்தது. இன்று வாகனங்கள் மூலமாக இலாபகரமாக நடக்கும் பால் வியாபாரத்தை திருகோணமலை மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆலங்கேணி மக்களேயாவர். இந்தக் கடினதொழில் மூலம் ஆலங்கேணியில் வாழும் சிலர் மாட்டு மந்தைகளின் சொந்தக்காரம்களாகவும் செல்வந்தர்களாகவும் விளங்கி வந்தனர். காலப் பொக்கில் கங்கையோரக் காடுகளை அழித்து நெல் வயல்களாகவும் கத்தரி மிளகாய் பயிரிடும் காணிகளாகவும் பயன்படத்தினர். இயந்திரங்களால் நீர் இறைத்து தோட்டப்பயிர்களும் நெல்லும் அமோகமாக விளையச் செய்தனர்.

ஆலங்கேணியில் பாடசாலைகள் குறைவாக இருந்த போதிலும் இம்மக்கள் கற்றலிலும் அரிய சாதனைகளைப் புரிந்துள்ளனர். அரச திணைக்களங்களில் இம்மக்களில் கணிசமான தொகையினர் பொறுப்பான பதவிகளை வகித்து வருகின்றனர். கலை கலாச்சார நிகழ்ச்சிகளிலும் ஈடுபாடு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். புகழ் பெற்ற காவியமாகிய இராமாயணத்தை ‘இராமநாடகம்’ என்ற பெயரில் பழக்கி நாட்டுக் கூத்தாக மேடையேற்றியுள்ளனர். ‘அல்லி அர்ச்சுனா' போன்ற நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன,

குமாரவேல் போன்ற பிரசித்த ஆயுள்வேத வைத்தியர்களும் சோதிட சாஸ்திர வல்லுனர்களும் தேர்ந்த அண்ணாவிமார்களும் ,கவிஞர்களும் ஆலங்கேணியில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தாமரைத்தீவான், கேணிப்பித்தன் ,கௌரிதாசன் ,தங்கராசா ,தவராசா, யோகேஸ்வரன், சுந்தரம் போன்றோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.

‘ஆலையூரான்’என்ற புனைப்பெயரில் எழுதிய அமரர் திரு.க.தங்கராசா அவர்கள் திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளராக் கடமையாற்றியவர். நாடறிந்த நல்ல எழுத்தாளர்.இதே போல ‘கேணிப்பித்தன்’ என்ற புனைப்பெயரில் எழுதும் திரு.எஸ்.அருளானந்தம் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். சிறுவர் இலக்கிய முன்னோடியாகத் திகழ்பவர். இதுவரை எழுபது நூல்களுக்கு மேல் வெளியீடு செய்துள்ளார்.


திருபத்தினியர், திரு.தாமோதரம்பிள்ளை போன்ற அண்ணாவிமார்கள் இங்கே நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி மக்களின் அமோக ஆதரவைப் பெற்றனர். தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாபெருங் கலைஞரான திரு.க.கணபதிப்பிள்ளை அண்ணாவியார் இங்கு வந்து நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றி பெரும் புகழ் பெற்றதை இங்குள்ள பெரியார்கள் நினைவுபடுத்திக் கூறுகின்றனர்.

சீனடி விளையாட்டு என்னும் தற்காப்புக் கலையை பயின்றவர்களும் இங்கு அதிகமாக உள்ளனர். தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரப் பெருமானிடம் நீங்காத பத்திகொண்ட ஆலங்கேணிமக்கள் ஆலயத்தில் கொடியேற்றவிழா தொடங்கிய நாளிலிருந்து பெரும்பாலோர் புலால் உணவை நீக்கி விரதம் இருந்து ஒவ்வொரு விழாவுக்கும் வண்டிச் சவாரியாக மனைவி மக்களுடன் சென்று திரும்புவார்கள். பதினாலாம் நாள் கதிர்காம ஸ்வாமி எழுந்தருளும் விழாவன்று மேள தாளசீர்களுடன் எட்டு மைல்களையும் கால் நடையாக நடந்து நேர்கடன் செலுத்துவது ஆலங்கேணி மக்களின் பக்திச் சிறப்புக்குச் சான்றாகவுள்ளது.

இப்படி ஆலங்கேணி மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னெறிக் கொண்டிருந்த வேளையில் ‘வெண்ணை திரளும்போது தாழி உடைந்தது போல’ 1990 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட கலகங்களின் உச்சநிலையால் உயிரிழப்பு பொருள் இழப்பு என்று எல்லா நலன்களும் அழிந்து இழந்து அகதிகளாகி ஐந்தாண்டுகாலம் வரை ‘கிளப்பன் வேக்’என்ற அகதிமுகாமில் தங்கியிருந்து, உடைந்து தகர்ந்து கிடந்த தங்கள் ஊரான ஆலங்கேணியில் மீளக்குடியேறினர்.

தம்பலகாமம் க.வேலாயுதம்.
(1997)



 தொடர்புடைய பதிவுகள் 

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்   -   த.ஜீவராஜ்
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

தம்பலகாமம்       -     தம்பலகாமம்.க.வேலாயுதம் 
கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கூறுகின்றது. திருக்கோணேசலப்புராணம் தம்பை நகர்ப்படலத்திலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:-

இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை     - த.ஜீவராஜ்
திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. இறுதிப் பந்தி மிக வேதனை தந்தது. இப்படி எத்தனை எழில் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.

    ஆலம்கேணி கிராமம் பற்றி தெரிந்துகொண்டோம்.

    ReplyDelete
  3. Dear Dr
    Its a pleasure to read about my village written by The Great Author Velautham. Thank you so much
    Kernipiththan

    ReplyDelete
  4. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete