உலகிலுள்ள இயற்கையில்
உயர்ந்த பண்பு உண்டு பார்!
உணர்ந்து நீயும் கைக்கொண்டால்
உயர்ந்த மனிதன் ஆகலாம்.
கதிரவனைப் பாருங்கள்
காலை மாலை வருகிறான்
அனைவருக்கும் ஒளியினை
அள்ளிப் பெருக்கித் தருகிறான்.
வெட்டிக் கொத்திக் கிளறினும்
வெட்கம் சிறிதும் இன்றியே
பெட்டி நிறையக் கனிகளை
பூமி அன்னை தருகிறாள்.
உயிர்கள் அனைத்தும் வாழவே
உயரப் பறக்கும் மேகங்கள்
மழையைத் தந்து எங்களை
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துமே!
கரைந்து உண்ணும் காக்கையார்
கருத்து ஒன்றை நமக்குத்தான்
விரைந்து சொல்ல முயல்கிறார்
விரும்பி அதனை ஏற்போமே!
பகுத்து உண்டு வாழ்வதே
பார் புகழும் அறமன்றோ?
கொடுத்து உண்டு வாழ்கின்ற
கொள்கையாலே உயருவோம்.
நீர் குமிழி போன்ற இந்த
நீடிக்காத வாழ்க்கையின்
தார்ப்பரியம் அறிந்து நாம்
தர்ம சீலர் ஆகுவோம்.
பகைமை தன்னை அழித்து நாம்
பண்புடனே வாழுவோம்
தகமை பெற்ற சான்றோராகித்
தரணி போற்ற வாழுவோம்.
தீமை புரியும் கொடியோரின்
செயலை ஒறுத்து நீக்குவோம்
நன்மை புரிந்து அனைவரையும்
நல்லவராய் மாற்றுவோம்.
அறிவும் தெளிவும் ஆற்றலும்
ஆண்மைத் திறனும் கொண்டு நாம்
நெறியில் சிறந்த மனிதராய்
நிற்க வேண்டும் பிள்ளைகாள்.!
வே.தங்கராசா
அருமையான கருத்துக்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
Delete