Tuesday, August 21, 2012

சதிபதிகள் ஒற்றுமையாய் வாழலானார்

குடும்பம்

திருமணம் செய்து கொண்டால் வாழ்விலுள்ள
சிரமங்கள் குறைந்து விடும் என்று எண்ணி
முருகேசன் வள்ளியம்மை கரம் பிடித்து
முழுசாக ஒரு வருடம் ஆகு முன்பே
தீராத மனக்கவலை சதிபதிக்குள்
சிறு சண்டை சச்சரவு வாக்கு வாதம்
வாராத நாட்களில்லை அக்கம் பக்க
மக்களெலாம் கூடிநின்று புதினம் பார்ப்பார்.


பெண்டாட்டி கிடைத்து விட்டால் வாழ்க்கை ஓடும்
பேசாமல் குடித்துண்டு வாழ்வோமென்று
என்றந்த முருகேசன் எண்ணினானோ?
எப்பொழுதும் மது வெறியில் தடம்மாற
நன்றாகச் சமைக்கவில்லை சோறுமில்லை
நாசமாய்ப் போவாளைக் காணவில்லை
என்றவன் பேசாத நாட்கள் இல்லை
ஏழை அந்த வள்ளிப்பிள்ளை என்ன செய்வாள்?

சோறாக்க வீட்டிலே ஒன்றுமில்லை
சொற்பமாக இவர்தரும் பணத்தைக் கொண்டு
கறிவகைகள் வாங்கவும் முடியவில்லை
கஸ்டம்தான் வாழ்க்கையிலே கண்டதென்று
ஆறாகக் கண்ணீரைச் சிந்தி வள்ளியம்மாள்
அறிவித்தாள் அங்கு அருகுநின்றோர்
தேறுதல்கள் பல சொல்லி முருகேசனைச்
சிறப்பாக நடக்குமாறு புத்தி சொன்னார்.

உழைப்பதிலே பாதியைக் கசிப்பு வாங்கி
உறிஞ்சுதற்கு செலவிட்டு வந்த அவன்
விழிப்படைந்தான் மனைவியை நன்றாய்க் காத்து
வாழ்தலே சிறப்பென்றும், கள்ளருந்தல்
இழிவென்றும் அன்றோடு குடியை விட்டு
இரவு பகல் பாராமல் என்னேரமும்
பிழைப் பொன்றே குறியாகப் பாடுபட்டான்
பிறந்தது அவர்களிடம் அமைதி வாழ்க்கை.

உழைப்பை முற்றும் மனைவியிடம் கொடுத்துவிட்டு
ஓய்வாக முருகேசன் படுத்திருப்பான்
களைப்புற்ற கணவன்மேல் கனிவு கொண்டு
காரியங்கள் ஆற்றுவாள் வள்ளிப்பிள்ளை
விழுமிய குறள் தந்த வள்ளுவரும்
வாசுகி அம்மையும் போல் அவர்கள் வாழ்க்கை
தழைத்தது இல்லறத்தில் வெற்றி கண்டு
சதிபதிகள் மகிழ்சியிலே திளைத்து வாழ்ந்தார்.

தம்பலகாமம க.வேலாயுதம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. அயராத உழைப்பே உயர்வைத் தரும்... பிறகு அமைதிக்கு பஞ்சமேது...

    நாங்களும் மகிழ்ச்சியில் திளைத்தோம்...

    வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.தனபாலன் அவர்களே.

      Delete
  2. கருத்துள்ள கவிதை.
    ஜீவன், எந்த ஆண்டு எழுதப்பட்ட படைப்பு என்பதையும் குறிப்பிடலாமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி இமா அவர்களே. அனேகமாக இக்கவிதைகள் 90 களில் எழுதப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறோம்.

      Delete