மண்ணாசை பொன்னாசை மயக்கம் வந்தால்
மனிதனின் பகுத்தறிவு மழுங்கிப் போகும்
எண்ணாத செயல்களையும் எண்ணும் நெஞ்சு
இழிசெயல்கள் புரிவதற்கும் துணிவுண்டாகும்
கண்ணாக தினம்போற்றி மதித்துவந்த
காரியங்கள் அடிசாய்ந்து தலைகீழாகும்
பண்ணாத தவறுகளைச் செய்யத் தூண்டும்
பாபத்தின் அடிசேர்க்கும் பண்பு நீங்கும்
ஆசைகளை வேலியிட்டுத் தடுக்காவிட்டால்
அனர்த்தம் தான்பிறர் சுகத்தைச் சூறையாடும்
யோசனையே மிகுந்துவிடும் மனுப் படைப்பின்
நோக்கங்கள் கெட்டுவிடும் நொந்தவர்க்கு
நேசத்தைக் காட்டியவர்க்;குதவி செய்யும்
நினைவெல்லாம் அகன்றுவிடும் நிஸ்டூரமாய்
பாசமற்று மனுக் குலத்தோர் அரக்கராகிப்
பரதவிக்கும் ஓர் காலம் வந்தேதீரும்.
அழிவொருநாள் அணுகி வரும் அதனை நீக்க
யாராலும் ஆகாது என்றறிந்தும்
பழிபாவம் எது என்று பார்த்திடாமல்
படு கொடுமை காண்பதிலே இன்பம் காண்போர்
இழிவு வரும் புகழ்நீங்கும் இரக்கம் குன்றி
இணையில்லா மனுப்பிறவி வீணேயாகும்
தெளிவுபெறு மானிடனே சிந்தித்துப்பார்
திரவியத்தைச் சதம் என்று நம்பிடாதே
இந்த நிலைகண்ட எம் முன்னோர்கள்
ஏற்றமுடன் மக்கள் குலம் வாழ்வதானால்
சிந்தையிலே கருணைதனை நிறைத்துத் தேக்கி
செயல்களுக்கு நேர்மை என்னும் வேலியிட்டு
பந்தமாய்ப் பாசமாய் பற்றுடனே
பல விதத்தில் உதவி செய்து பரிவுகாட்டி
நொந்தவர்கள் துயர் துடைத்து வாழ்வொன்றே
நோக்காகக் கொள்வதே இன்பம் என்றார்.
தம்பலகாமம்.க.வேலாயுதம்
இன்றைய சூழலுக்கு
ReplyDeleteஅவசியம் தேவையான கவிதை
மன்ம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி திரு.றமணி அவர்களே
Delete