Tuesday, August 07, 2012

பல்துறை கலைஞராக விளங்கிய திரு.வே.மகாலிங்கம்


எண்ணூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பெருமையுடையது தம்பலகாமம். தொல் பொருள் திணைக்களத்தால் “மைப்படி” எடுக்கப்பட்டுள்ள 13ஆம் நூற்றாண்டுக்குரியதான தம்பலகாமத்துக் கல்வெட்டால் இதனை நாம் அறியக் கூடியதாக உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தம்பலகாமத்தில் பழமையில் சங்கீதத் கலையும் ஆயுள் வேத வைத்தியக் கலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.


பிரபல சுதேச ஆயுள் வேத வைத்தியர்களில் பெரும்பாலானோர் நாடக நடிகர்களாகவும் நாட்டுக் கூத்து அண்ணாவிமார்களாகவும் விளங்கினார்கள். இவர்களில் நாயன்மார் திடலில் வாழ்ந்த திரு.பத்தினியார் வேலுப்பிள்ளை அண்ணாவியார் சிறந்த நடிகராகவும் நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றுபவராகவும் விளங்கினார். கண்ணகி நாடகத்தில் கோவலனாகவும் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் யமனாகவும் நடித்து தம்பலகாமம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த “கைராசிக்கார” ஆயுள் வேத வைத்தியராகிய இவரை இவரது நடிப்பாற்றலை மெச்சி அன்றைய மக்கள் “யமன்” என்றே அன்பாக அழைத்து மகிழ்ந்தனர். ஆர்மோனியம் வாசிப்பதிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.

நாயன்மார் கோயில் அமைந்த இடம் நாயன்மார்திடல் என அழைக்கப்படுகிறது. இக் கோயில் அமைந்துள்ள காணியை தென்னைமரவாடியைச் சேர்ந்த “நமச்சிவாயம்” என்பவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் பழமையில் பேணப்பட்ட அருவ வழிபாட்டுத் தலங்களில் இது அதி முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். வருடத்திற்கு ஒரு முறை இத்தலத்திலே “மங்கலர்களால்” “மடை” வைக்கப்படுகிறது. பன்னிரு மறிகாரர்களும் ஒன்று கூடி சம்பூரிலுள்ள தங்கள் பெருமைக்குரிய பூசகர் “கட்டாடியாரை” நீலப்பாவாடை விரித்து பல்லக்கில் தூக்கி மூதூர் கிண்ணியா ஊடாக இக் கோயிலுக்கு வரவழைத்து அவருக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் தங்க வைத்துஇ இம் மடையை விமரிசையாகக் கொண்டாடுவர். பூசையில் வைக்கப்பட்ட “கயிறை” மந்திரித்து கட்டாடியார் மறிகாறத் தலைவனிடம் வழங்குவார். மந்திரிக்கப்பட்ட இந்தக் கயிறு கழுத்தில் விழுந்தவுடன் அடங்காத எந்த மாடும் அடங்கி விடும் என்பது பன்னிரு மறிகாறரின் அனுபவமாகும். பின்னர் பிடிபட்ட குழு மாட்டை இங்கே கொண்டு வந்து அதற்கென நாட்டப்பட்ட பெரிய மரத்தில் கட்டி வைத்து மடையை ஆரம்பிப்பர். இம் மடையின் போது பொன்னாலை அடப்பனார் திரு. அருணாசலம் அவர்கள் “காவியம்” பாடுவார். கேட்பதற்கு இது மிகவும் இரம்மியமாக இருக்கும். தற்பொழுது அப்பதவியை அவரது பேரன் திரு.க.சுந்தரலிங்கம் செய்து வருகிறார். பொங்கலுடன் இம் மடை நிறைவு பெறும். இம் மடைக்கான சகல காரியங்களும் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் கங்காணம் மேற்பார்வையில் இடம்பெறும். இம் மடைக்கு வைராவியாரும் அவரது பங்குதாரர்களும் தானத்தாரும் அவரது பங்குதாரர்களும் ஏவி அடப்பன் பொன்னாலை அடப்பன் பன்னிரு மறிகாரர்களும் கோயில் தர்மகர்த்தா சபை தலைவர் உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் எல்லாரும் திரண்டு வருவர். இது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பத்தினியார் வேலுப்பிள்ளை அண்ணாவியாருக்கும் அவரது தர்ம பத்தினி பசுபதிப்பிள்ளைக்கும் மூன்று பிள்ளைகள் . அவர்களில் இருவர் பெண்கள் மற்றவர் நமது கட்டுரை நாயகனாகிய திரு. வே. மகாலிங்கம் அவர்கள்.

“வளரும் பயிரை முளையிலே தெரியும்.” என்பார்கள். தந்தையாகிய வேலுப்பிள்ளை அண்ணாவியாருடன் சதா காலமும் பிரியாமல் திரியும் மகாலிங்கம் நாடகங்களில் நடித்தும் பாட்டுப் பாடியும் மிருதங்கம் தபேலா போன்ற வாத்திய இசைக்கருவிகளை வாசித்தும் அவற்றில் தேர்ச்சி பெற்றும் வந்தார். இந்தக் காலப்பகுதியிலேயே அவர் தந்தையாரிடமிருந்து ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். “கண் கண்டால் கை செய்யும்” என அடிக்கடி கூறிக்கொள்ளும் திரு.மகாலிங்கம் அவர்கள் “எவருடைய உதவியும் இல்லாமலேயே “கண்ட சித்தியாக மிருதங்கம் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.

இந்தியக் கலைஞர் திரு.வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரிடம் நாலு வருடங்களக்கு மேலாக “மோர்சிங்” பயின்றார். பின்னாட்களில் இவர் ஒரு தலை சிறந்த மோர்சிங் கலைஞராக விளங்கினார்.

நல்ல குரல் வளம் உள்ள இவர் தந்தை நெறிப்படுத்திய நாடகங்களுக்கு பாடியதுமில்லாமல் சிறிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கவும் செய்தார். “தூக்கு தூக்கி” என்னும் நாடகம் கள்ளிமேட்டிலுள்ள ஆலயடிப்பிள்ளையார் முன்றலில் மேடையேறிய பொழுது பெண் பாத்திரம் ஒன்றில் நடித்துப் பெரிதும் பாராட்டுக்குரியவரானார். “கோகுலன் சரிதம்” என்னும் நாடகத்தில் கோகுலனாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

“ஆசை” என்பவரிடம் “கஞ்சரா” மீட்கக் கற்றுக் கொண்டார். இக் காலப்பகுதியில் திருகோணமலையில் இடம் பெற்ற பல இசைக் கச்சேரிகளுக்குச் சென்று அங்கும் பாராட்டுப் பெற்றார்.

பழமையில் தம்பலகாமம் ஆலையடிப் பிள்ளையார் முன்றலில் நாடகங்கள் மேடையேற இதற்கான அனுமதிச் சீட்டுக்கள் கோயில் குடியிருப்பில் விற்பனை செய்யப்பட்டுவந்ததாகவும் தெரிகிறது

இலங்கைப் போக்குவரத்து சபையில் சாரதியாகவும் இறுதிக் காலத்தில் சாரதிபயிற்றுனராகவும் கடமையாற்றிய இவர் கொழும்பு விளம்பரம் ஒன்றுக்கு விண்ணப்பித்ததின் பேரில் இலங்கையில் தயாராகிய “சமுதாயம்” என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். துரதிஷ்டவசமாக பாதியில் இப்படம் நின்றுவிட்டதால் இவரது நடிப்பாற்றலை திரைப்படம் மூலமாக காணக் கிடைக்கவில்லை.

இடம் பெயர்ந்து முல்லைத்தீவில் இவர் வாழ்ந்த பொழுது “கோவிந்த பிள்ளை” என்பவரிடம் மிருதங்கம் கட்டும் கலையைப் பயின்றதால் இ இவரது வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தில் மிருதங்கம் கட்டி விற்பனை செய்து வந்தார்.

இவரது மகன் கண்ணன் “டோல்கி” அடிப்பதில் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பேரன் “தர்சன்”ஒரு சிறந்த “கமரா மேனாக”வர வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசை. இவரது பேரன் தர்சன் அவர்கள் “தர்சன் இசைக்குழு” ஒன்றை நிறுவி சிறப்பாக நடத்தி வருகிறார். “வீடியோ” படம் எடுப்பதிலும் இவர் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார் என அறியக் கூடியதாக உள்ளது.

  வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. 4 ம் பந்தியில் சொல்லப்பட்ட விடயங்கள், விழுமியங்கள் - கேள்விப்படாதவை, அன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு சிறப்பாகப் பாரம்பரியம் பேணப்பட்டுள்ளது. இனியும் தொடருமா?
    தம்பலகாமம் - ஆதி கோணேசரைத் தரிசித்துள்ளேன்.; அதன் பின்ணணியில் இவ்வளவு கலாச்சாரத் தொன்மையுண்டென்பது அப்போ தெரியவில்லை.
    இவற்றை பார்க்க வேண்டும் போல் உள்ளது.

    ReplyDelete
  2. பழமையில் பேணப்பட்ட பாரம்பரியங்கள் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனும் கருத்து மக்களிடையே மேலோங்கி வருகிறது

    ReplyDelete