கல்விச் சிறப்பால் மிக உயர்ந்து
கலைகள் வளரும் யாழ்ப்பாண
நல்லூர்ப் பதியில் உறைகின்ற
ஞானக் கொழுந்தே அடியார்கள்
அல்லல் போக்கி அருள் சுரக்கும்
நல்ல புகழை எடுத்தோத
நாவிற் கருள்வாய் விநாயகனே.
குன்று தோறும் விளையாடும்
குமரா அமரர் குறை தீர்க்க
சென்று அமரர் செருக்கழித்த
செவ்வேள் என்னும் திறலோனே!
மன்றுள் ஆடும் மகாதேவர்
மனதைக் கவரும் பேரழகா
என்று என்றன் துயர் போக்கி
இன்பம் அருள்வாய் இறையோனே.
எந்தாய் உமையாள் மகனான
ஏற்றமுடைய நெடு வேலா
கந்தா உன்றன் புகழ் பாட
கருத்தில் வளத்தை அருள்வாய் நீ
பந்தம் போக்கி பயம் நீக்கி
பழைய வினைகள் தொடராமல்
வந்தாழ் குகனே மயிலேறி
வள்ளிக் குறத்தி மணவாளா.
கார்த்திகைப் பேர் கன்னியர்கள்
கருத்தைக் கவரும் அருளாளா
ஆர்த்து நின்ற அவுணர்களை
அடியோடழித்த அடல் வீரா!
கார்த்திகேயா கடம்ப மலர்
கதம்ப மணிந்த திரு மார்பா
கீர்த்தி மிகுந்த சீமானே
கிருபை செய்ய வேண்டுமையா.
பிரணவத்தின் பொருள் கூறாப்
பிரமன் தன்னைச் சிறைசெய்தாய்
அரனுக் கன்று உபதேசம்
ஆற்றி அப்பன் குருவானாய்
திருமால்க் குகந்த மருமகனாய்
திகழ்தாய் உன்றன் தாள் போற்றி
சரணம் சரணம் சரணம்மையா
சாமி சரணம் சரணமையா.
சரவணப் பேர் பொய்கையிலே
தாவி வளர்ந்தாய் ஆறுருவாய்
அரவணைத்த அம்மையர்கள்
அனைவருக்கும் மகனானாய்
பெருமை மிக்க சண்முகனே
பேசப் பேச உன் புகழை
உருகும் மனது உள்ளவரை
உன்றன் அடியார் என்றருள்செய்
அவ்வைப் பாட்டிக் கருள் புரிய
அன்று சின்னஞ் சிறு உருவில்
கொவ்வைச் செவ்வாய் அழகுடனே
குறும்பு செய்த குமரேசா
கைவேலுடனே அவ்வைக்கு
காட்சி தந்து கதியீந்த
செவ்வேள் என்னும் திருநாம
சிறப்பைப் பெற்ற தேசிகனே!
வானோர்க் கரசன் மகளான
மனையாள் இருக்க மற்றுமொரு
கானக் குறவர் திருமகளாம்
கன்னி இருக்கும் இடம் நாடி
மானைத் தேடி வருபவர்போல்
வந்தாய் வள்ளி கரம் பற்ற
ஞானச் சுடரே வடிவேலா
நல்லூர்ப் பதியிலஉறைவோனே.
பைந்தேன் தமிழின் உருவாகப்
பரமன் ஈன்ற கதிர்வேலா
கந்தா உன்றன் புகழ்கூறி
காலம் எல்லாம் மகிழ்வாக
செந்தேன் தமிழில் கவிபாட
திறனை அருளைத் தருவாயேல்
உன்றன் நினைவை மறவாமல்
உரைப்பேன் கவிதை மலர் மாலை.
தொல்லை சூழ்ந்த இவ்வுலகில்
துன்பம் அடையும் அடியார்கள்
அல்லல் நீக்கி அகத்தினிலே
அருளைப் பாய்ச்சும் திறலோனே
வல்லமையின் முழு உருவே
வானோர்க் கன்று அருள் செய்த
நல்லூர்ப் பதியில் உறைகிள்ற
நாதா உன்றன் தாழ் போற்றி.
தம்பலகாமம்.க.வேலாயுதம்
நெடுநாட்களின் பின் சந்தமும், பொருளும் நிறைந்த அருட்கவிதை!!
ReplyDeleteமிக அருமை!!இப்போது யார் இப்படி எழுதுகிறார்கள்?? யார் இயற்றியது என்றபோது , உங்கள் பாட்டனார் பெயர்.
பிறவிக் கவிஞரல்லவா? தமிழ் விளையாடியுள்ளது. மனதுக்கு நிறைவாக உள்ளது.
நீங்கள் எல்லோரும் நலமுடன் உள்ளீர்களா?
நன்றி!!!
நன்றி யோகன் பாரிஸ் அவர்களே! நாங்கள் அனைவரும் நலமுடன் உள்ளோம்.
Deleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான கவிதை.. :)
ReplyDeleteநன்றி டிலக்சன் அவர்களே.
Delete