Sunday, August 26, 2012

நாடகக்கலைஞர் இராமலிங்கம் இரத்தினசிங்கம்

Ramalingam Ratnasingam


திருகோணமலை மாவட்டத்தில் சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திரு.இ.இரத்தினசிங்கம் என்னும் நாடகக் கலைஞர்.  தி.சேனையூர் மத்தியகல்லூரியில் ஆரம்ப வகுப்புமுதல் க.பொ.த.சாதாரண தரக்கல்வியையும் மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரக்கல்வியையும் யாழ்.கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சியையும் முடித்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமானிப் பட்டத்தையும் பெற்றவராவர்.

கல்வி கற்கும்காலத்தில் நாடகத்துறை,கவிதை,சிறுகதை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். நாடகத்துறையில் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு.எஸ்.அருளானந்தம் அவர்களும், எழுத்துத் துறையில் திரு.வ.அ.அவர்களும் இவருடைய மதிப்பிற்குரிய குருமாராவார்கள்.
பாடசாலையில் கற்கும்பொழுது பல நாடகங்களில் இவர் நடித்துள்ளார். மாவட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த வகையில் இவரது நினைவில் கனிந்த நாடகங்களாக சங்கிலியன், பழிக்குப்பழி, இராவணேஸ்வரன்  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற காலத்தில் அகளங்கன் எழுதிய ‘அமரேந்திரா’ இவரது படைப்பான ‘நக்கீரன்’ என்பன குறிப்பிடத்தக்கவை. யாழ்.கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயின்ற காலத்தில் சிவஸ்ரீ.வீரமணி ஐயர் நெறிப்படுத்திய ‘ராஜ ராஜ சோழன்’ ‘உதயகுமாரன்’ ‘இளையான்குடிமாற நாயனார்’ போன்ற குறிப்பிடத்தக்க நாடகங்களில் நடித்தப் புகழ் பெற்றுள்ளார்.

1993ஆம் ஆண்டு தி.சேனையூர் மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமை ஏற்ற காலம் தொடக்கம் தொடர்ந்து தமிழ்த்திறன் போட்டிக்கு சமூக , பொருளாதார, இலக்கிய நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி வந்துள்ளார். இவ்வகையில் 1993இல் ‘விருந்தோம்பல்’ என்னும் சமூக நாடகமும், ‘மார்க்கண்டேயர்’ என்னும் புராண இலக்கிய நாடகமும் இவரால் எழுதி நெறிப்படுத்தி தமிழ்த்தினப் போட்டியில் கலந்து கொண்டவையாகும்.

இதில் மார்க்கண்டேயர் என்னும் நாடகம் கோட்ட மட்டத்திலும்,மாவட்ட மட்டத்திலும் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. 1994ஆம் ஆண்டு ‘பாஞ்சாலி சபதம்’ என்னும் இலக்கிய நாடகம் பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், மாவட்ட மட்டம்,மாகாண மட்டம் என்பவற்றில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்தில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதற்கான சான்றிதழும் தங்கப்பதக்கமும் இந்நாடகத்திற்கு வழங்கப்பட்டது.

1995இல்’புத்திரசோகம்’ என்னும் நாடகம் கோட்டமட்டத்திலும், மாவட்டமட்டத்திலும் தெரிவு பெற்று மாகாண மட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. இதே போல 1996ஆம் ஆண்டு ‘விதியின் சோதனை’ என்னும்’இலக்கிய நாடகம் கோட்டமட்டத்திலும், மாவட்டமட்டத்திலும் தெரிவு பெற்று மாகாண மட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.

இவர் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடாதிபதி திரு.மௌனகுரு அவர்களால் திருகோணமலை மாவட்டத்தில் நடத்தப்பெற்ற ‘நாடகப்பட்டறையில்’ கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளார். சர்வதேசரீதியில் முகங்கொடுக்கக்கூடிய வகையில் நாடகங்களை உருவாக்கி தமிழ் நாடகத்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே இவரது பேரவாவாகும். அவ்வப்போது ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் அன்புள்ளங்களும், மாணவச் செல்வங்களுமே தனது ஆக்கங்களின் அங்கங்களாகும் என இவர் அடக்கத்துடன் கூறுகிறார். இவரது கலைப்பணி வளர்க என வாழ்த்துவோம். தற்பொழுது இவர் தி.சேனையூர் மத்திய கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி வருகிறார் என்பது குறிபிபிடத்தக்கது.

வே.தங்கராசா
1997 மித்திரன் வாரமலர்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. அறியாத தகவல்கள்....

    பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete