ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 14
பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.
இனி...
தம்பன் கோட்டை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. கலிங்கவிஜயவாகு மன்னரின் எருதுக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கோட்டைக்கான கொடி அரைக்கம்பத்தில் ஏற்றிவிடப்பட்டது. கொம்பு, குழல், தப்பட்டை, தாரை, பறை போன்ற வாத்தியங்கள் சோகமாக ஒலித்துக் கொண்டிருந்தன.
அலங்கரிக்கப்பட்ட முன் மண்டபத்தில் தளபதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசருக்கு சேதி அனுப்பப்பட்டு பதில் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.
உதயனை, யானை போட்ட கல்லிலிருந்து விடிவதற்கு முன்னமே, தளபதியின் உடலை கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டான் இளஞ்செழியன்.
(கல் நெருக்கக் காட்டுப்பகுதியைத் தற்போதைய அரசுகள் வெடிவைத்து அழித்து குடியேற்றங்களை உருவாக்கி வயல்பூமிகளாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. காட்டில் இருந்த உதயனை யானை போட்ட கல் என்று காரணப்பெயராக அழைக்கப்பட்ட பகுதி இப்போதும் வயல்வெளிகளுக்கு மத்தியில் அதே பெயரோடு அறியப்பட்டு கிடக்கிறது
)
)
இளஞ்செழியன்தான் முதலில் சுயநினைவுக்கு வந்தவன். உடனடியாக பத்து வீரர்களை சதுர்வேதமங்கலம் நோக்கி அரசரிடம் எப்படியாவது சேதியைச் சொல்லி பதிலைக் கொண்டு வருமாறு பணித்துவிட்டு, இன்னும் பத்துப்பேரை கடும்விரைவில் கோட்டைக்குள் சென்று ஆயத்தங்கள் செய்யுமாறு பணித்து விட்டு, உதயகுமரனின் உடலை நன்கு போர்வையால் சுற்றி குதிரைமேல் கிடத்தி தம்பன் கோட்டை நோக்கி மீதி வீரர்களுடன் விரைந்தான்.
தளபதி பொறுப்பை ஏற்ற சொற்ப காலங்களிலேயே அனைவரது அன்பையும் தன் எளிமையான பண்புகளால் கவர்ந்திழுத்திருந்த தளபதியின் சாவு பற்றி அறிந்ததும் எல்லோரும் வாய்விட்டுக் கதறினர்.
ஊர் மத்தியில் சேதி பரவி சாரி சாரியாக வந்து மரியாதை செலுத்திச் சென்றனர் மக்கள். சோகத்தின் மத்தியிலும் கண்ணீர் தாரையாக வடிந்து நிற்க படைவீரர்கள்மரியாதை அணிவகுத்து நின்றனர்.
ரங்கநாயகி விடிந்ததும் விடியாததுமாக வீட்டு முற்றத்தில் வந்து நின்று கொண்டிருந்தாள்.... அவள் மனம் வெறுமையாகக் கிடந்தது உற்சாகம் உடலிலும் இருக்கவில்லை. அவள் உணர்விலும் இருக்கவில்லை.
தீடீரென்று தடதடவென்று குதிரைக்குளம்பொலி அவர்களது வீட்டுப்பக்கம் வந்து கொண்டிருந்தது. அவர் வருகிறாரோ என்று நினைத்த மாத்திரத்திலே அவள் இதயம் அவனைப் பார்த்துவிட தொண்டைக்குழிவரை வந்துவிட்டது போலிருந்தது. வந்தது உதயகுமரனில்லை. ஒரு போர்வீரன்! செய்தியை இளஞ்செழியன் அனுப்பியிருந்தான்.அவன் சொன்ன சேதியைக் கேட்டதும் அப்பா| என்ற ஒரு அலறல் அவள் அடித்தொண்டையில் இருந்து வந்தது. பிறகு கொஞ்ச நேரம் கோட்டை இருந்த பக்கம் திரும்பி சலனம் ஏதுமின்றி
நின்றவள் அப்படியே மயங்கி வீழ்ந்தாள்.
மதியத்திற்கு முன்னதாக அவளை மயக்கம் தெளியப் பண்ணி அத்தையும், சில பெண்களுமாக கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அவனைக் கடைசித் தடவையாகப் பார்க்க வேண்டும் என்று போராடத் தொடங்கிவிட்ட அவளை,அடக்கவேண்டுமானால் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை கண்டு அவளை அழைத்து வந்தனர்.
உதயகுமரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நெற்றித் திலகம் அவனது முகத்தின் கவர்ச்சியை தூக்கலாக்கியது. வயிற்றுப்பகுதி சேதத்தை மறைக்கவோ என்னவோ அவனது வாளும் கேடயமும் வைக்கப்பட்டிருந்தன. அவனது உயிரற்ற உடலைக் கண்டதும் அவள் அலறிக் கத்திக்கொண்டு விழுந்து மூர்ச்சையானாள். அவளுக்குள் ஒரு நரம்பு அறுந்தமாதிரி ஒரு உணர்வுடனேயே அவள் நினைவிழந்தாள்.
மாட்டுவண்டி எடுத்துவந்து பிரேதம் போல அவளை வீடு கொண்டு சென்றனர். அவளுக்கு நினைவு தெளிய ஒரு நாளாயிற்று. அதற்கிடையில் உதயகுமரனை அரசரின் ஆக்ஞைப்படி சதுர்வேத மங்கலத்திற்கு மங்கலத்தேரில் வைக்கப்பட்டு எடுத்துக் கொண்டு போகப்பட்டது. தம்பலகாமம் பிரதேசம் அடங்கிலும் ஒரே சோகமயம்தான்.
இதற்கிடையில் மரக்கட்டைபோல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மகளைக் கண்டதும் வைத்திலிங்கம் பிள்ளை சிறு பிள்ளை போல அரற்றத் தொடங்கிவிட்டார். அவரைத் தேற்றுவதே பெரும்பாடாயிற்று.தம்பை நகர் என்ற தம்பலகாமத்து இராஜ வைத்தியர் நமச்சிவாயப் பரியாரியாரின் உயிர் காக்கும் மிர்தி சஞ்சீவி மாத்திரைப் பிரயோகமே அவளைப் பிழைக்கச் செய்தது.ரங்கநாயகி இறந்துவிடுவாள் என்றே பலரும் நம்பினர். ஆயினும் பிழைத்துக் கொண்டாள். கொடிய கருநாக சர்ப்பத்தின் வாயில் அகப்பட்டுத் தப்பிய தேரைபோல சில காலம் ஒடுங்கிக் போயிருந்தாள்.
முன்னாள் தளபதி தம்பருக்கே மருத்துவம் செய்து வித்தைகாட்டிய இராஜாங்க வைத்தியரின் கைராசியால் ரங்கநாயகியும் சற்றுத் தேறலானாள். அவளது சங்கீதத் திறமை, அழகு இரண்டையும் கேள்விப்பட்டு எத்தனையோ பல ஊர்களிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். தன் அருமை மகளைத் தன் கண் மூட முன்னமே ஒரு நல்லவன் கையில் கொடுத்து அவளை ஒப்பேற்றி விடவேண்டும் என்ற நினைவிலேயே இருந்த வைத்திலிங்கம் பிள்ளை வரன்களை வரச்சொல்லி அவளது பதிலைக் கேட்டபோது, ரங்கநாயகி ஒரு தர்பாரே நடத்திவிட்டாள்.
அப்பா என் அன்பர் பயங்கர மரணம் அடைந்த சேதியைக் கேட்டதுமே நான் இறந்திருக்க வேண்டும். பாவி ஏன் உயிரோடு இருக்கிறேனோ தெரியவில்லை. அப்பா... நீங்கள் நான் இருக்கின்ற காலம் வரை இந்த நிம்மதியுடன் இருக்கவிடுவதாக இருந்தால் திருமணம் என்ற பேச்சை என் காது கேட்கச் சொல்லாதீர்களப்பா!
அவள் கேவிக் கேவி அழலானாள். அவரும் அவளுடன் சேர்ந்து அழுதார். இனி அவளிடம் இந்தப் பேச்சை எடுப்பதேயில்லை... அவளாக ஒரு முடிவுக்கு வந்தாலொழிய... நானாக அவளை நெருக்கக் கூடாது என்று அவள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்.
சின்ன வயதிலேயே வெள்ளை உடுத்து விதவைக்கோலம்பூண்ட ரங்கநாயகி, சமயங்களில் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பில் நின்று சத்தமாக ராகங்களை இசைப்பாள். அதை உதயகுமாரன் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டிருப்பான் என்ற உணர்வு அவளுக்குள் இருக்கும், அல்லாது போனால் கலிங்கத்து விஜயன் கட்டி கலகக்காரர்களால் அழிக்கப்பட்டுப் பின்னர் குளக்கோட்டன் மன்னனால் கட்டப்பட்ட தம்பலகாமம் கோணேச்வரர் ஆலய தெற்கு வாயிலுக்கு எப்போதாவது வருவாள். உள்ளே எழுந்தருளி இருக்கும் கோணேஸ்வரப் பெருமானை நோக்கி இரு கரங்களையும் சிரசில் கூப்பி
நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்
நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே
என்று தன் குயில்க் குரலால் பாடுவாள். அப்போது தானும் உதயகுமரனும் குடமுருட்டியாற்று வெண்மணற்பரப்பில் அமர்ந்து பாடிய நாட்கள் நினைவுக்கு வரும். அவள் கண்கள் இரண்டும் அருவியாய் மாறும்.
முற்றும்..
அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்