Wednesday, September 15, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6






இனி...

உண்மையில் ஓரிரண்டு கிழமையிலேயே இருவரும் தயக்கமின்றி பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர். அபின் உண்டு பழகிய மயில் போல கோட்டைவாலிபன் அவன்தான் உதயகுமரன் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பிற்கு நாளும் வரலானான். ஒரு நாள் ரங்கநாயகி வெண்மணல் பரப்பில் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,

உங்களால் கல்யாணி ராகத்தைப் பாடமுடியுமா? என்று கேட்டான்.

ஓ ... பேஷாக ! என்றவள் தயக்கமின்றி ஆரம்பித்தாள்.என்ன ஆச்சரியம்! கூடவே ஒரு ஆண் குரலும் அவளோடு இணைந்து கொண்டது. தன் பாடலை நிறுத்தாமலே தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். சாட்சாத் அவனேதான் பாடிக்கொண்டிருந்தான். சாதாரணமாக அல்ல, ஒரு தேர்ந்த பாடகன்போல அழகாகப் பாடினான். அவன் குரல்கூட கரகரப்பில்லாமல் மதுரமாக ஒலித்தது.


இது கண்டு போர்க்களங்களில் வாள் சுழட்டும் இவரும் நன்றாகப்பாடுகிறாரே... பாடலுக்கேற்றபடி குரலும் ஒன்றிப்போவது சிறப்பாக இருக்கிறது. என்று அதிசயித்தது மட்டுமல்ல, வாய்விட்டு பாராட்டவும் செய்தாள்.


அமர்க்களமாகப் பாடுகிறீர்கள்... இதுவரை என்னிடம் சொல்லவில்லையே.... எங்கே கற்றீர்கள் இந்த வித்தையெல்லாம்? என்று கேட்டு வைத்தாள்.


கலைவாணி போன்ற அவள், தன்பாடலைப் பாராட்டியதைப் பெரும்பேறாக எண்ணி மட்டில்லா மகிழ்ச்சியடைந்த அவன், தான் சிறிய தந்தையாருடன் தென்னிந்தியாவில் சில காலம் வாழ்ந்தபோது சிறு வயதில் சங்கீதம் கற்றுக் கொண்டதாகச் சொன்னான்.


சங்கீதத்தில் நல்ல ஆர்வம் போலிருக்கிறது...


இல்லாது போனால் இப்படியொரு அழகு தேவதையை நான் சந்தித்திருக்கமாட்டேன். சந்தித்திருந்தாலும் பழக வாய்ப்புக் கிடைத்திருக்குமோ தெரியாது


அவன் தன் உறவை எந்தளவு விரும்புகிறான் என்றறிந்த போது, மனம் அலைபாய்ந்தது. அவனே அவள் மன ஓட்டத்தை நிறுத்தினான்.


தங்களது தந்தையின் பெயர் என்ன....? தங்களின் பெயர் போன்ற விபரங்களை நான் அறிந்து கொள்ளலாமா? கேட்டு வைத்தான் குமரன்.




ஓ.... அறியலாமே! என்னுடைய பெயர் ரங்கநாயகி. எனது தகப்பனார் பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை. எனது தாயாரின் மறைவுக்குப் பிறகு அவர் நாதஸ்வரம் வாசிப்பதே யில்லை...... என்று நிறுத்தினாள்.


நாதஸ்வர வித்துவானின் மகளா நீங்கள்?.... அதுதானே பார்த்தேன்... இராகங்கள் எப்படியடா உங்களோடு இத்தனை சரளமாக உறவாடுகிறது என்று எனக்குள் நானே யோசித்ததுண்டு....காரணம் இப்போதுதான் தெரிகிறது... அவனை இடைமறித்தாள் ரங்கநாயகி.


உங்களின் எல்லாத் திறமைகளும், பண்புகளும் எனக்கு இரட்டிப்பாய்ப் பிடிக்கிறது.... ஆனால்....


ஆனால் ஆனால் என்று ஏதோ என்னில் பிடிக்காத எதையோ ஒன்றைப்பற்றி சொல்ல வந்தீர்களே..?. அதை ஒளிவு மறைவின்றிக் கூறிவிடுங்கள் என்றான் அவன். அவனுக்குள் ஒரு கேள்விக்குறி. அவன் புத்திக் கூர்மையை உள்ளூர மெச்சிக் கொண்டவள்,


சாதாரண சிறு பெண்ணாகிய என்னை பெரிய போர்வீரராகிய தாங்கள்... நீங்கள்... நீங்கள் என்று பெரும் கௌரவம் கொடுத்து அழைப்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்கும்போது கூச்சமாக இருக்கிறது. சிணுங்கிக் கொண்டாள்.



நீங்கள் உங்களை சிறியவள் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாம். கலைவாணியின் அருளால் பெரிய சங்கீதப் பொக்கிஷமே உங்களிடம் இருக்கிறது...சரி...சரி முறைக்கவேண்டாம்... உன்னை... இப்போது சம்மதம்தானே... உன்னை ரங்கநாயகி என்றே அழைக்கின்றேன்... சரிதானே?



இருவரும் சிரிப்பில் கலந்தனர்.சிறிதுநேரத்தின் பின் அவன் கேட்டான்.


அதுசரி... நான் ஏதோ அரையும் குறையுமாகத்தான் இராகங்களைப் பாட கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போதுமட்டும் வாய்ப்புக் கிடைக்குமாக இருந்தால் உன் தந்தையாரிடம் சங்கீதம் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அந்த பெரியாரைச் சந்திக்க நான் வீட்டுக்கு வரலாமா...? உன்னால் ஏற்பாடு செய்து தரமுடியுமா?


அவள் பதிலுக்கு மௌனம் சாதித்தாள்... மனம்தான் பேசியது


இதுக்குத்தான் நாளும் என்னைத் தேடிவந்ததும்... பாடச் சொல்லிக் கேட்டதும் போலிருக்கிறது அவள் உற்சாகத்தில் பாதி போய்விட்டது. அவள் சிந்தனையைக் கலைத்தது அவன் கேள்வி.


ஏன் மௌனம் சாதிக்கிறாய்?

அதற்கு என்னை காக்காய் பிடிக்கத்தேவையுமில்லை... அதற்குரிய அவசியமுமில்லை. நீங்களே நேரடியாக தகப்பனாரைக் கேட்பதுதானே அவள் தூக்கலாகச் சொன்னாள்.



அவள் குரல் அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. சிரித்துக் கொண்டே சொன்னான்...


அப்பா...போதுமே கோபம்...இங்கே இரகசியமாக சந்திப்பதைவிட வீட்டில் பெரியவர்களின் அனுமதியுடன் சந்திக்கலாமே என்றுதான் கேட்டேன்... இதற்குப்போய்... அவளுக்கு அசடு வழிந்தது. இருவரும் ஒருவரையொருவர் தெளிவாகத் தெரிந்து கொண்டாலும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படையாகப் பேசத்தயங்கினர்.





இதற்கிடையில் அவர்களது சந்திப்பொன்றும் இரகசியமான தாக இருந்து விடவில்லை. கோட்டை வாலிபன் நெடுகிலும் அங்கு வருவதைக் கண்ட ஊரவர்கள் அந்த நேரத்தில் அந்த இடத்திற்குப் போவதை தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் ஓரிருபேர் சிலவேளைகளில் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதையும், பாடிக்கொண்டு இருப்பதையும் கேட்கவும் செய்தனர், காணவும் செய்தனர். அதுவும் ஆளையாள் மாறிமாறிப் பாடும்போதுகேட்கக் காதுகள் கோடி வேண்டும் போல இருக்கும்.




மத்தியமாவதி, அடானா, ஆரபி, பைரவி, தேசிகம், செஞ்சுருட்டி, சுருட்டி, மோகனம், காம்போதி, ஆனந்தபைரவி போன்ற மேளகர்த்தா ராகங்களையும் ஜன்னிய ராகங்களையும், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று கீர்த்தனைகளையும் பாடி மகிழ்ந்தனர்.



இவர்களை அறியாமல் இவர்களது பாட்டுக்கு செவி கொடுத்தவர்கள் நாதஸ்வரக்காரரின் மகள் நல்ல பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.




தொடரும்......






ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment