தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது........
தொன்மைமிக்க தமிழ்பட்டணத்தில் கலிங்க விஐயபாகு கட்டிய கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கு மலையாள வீரனான தம்பன் தளபதியாக இருந்து கிழக்கிலிருந்து வந்த படைகளை முறியடித்து மன்னனின் நோக்கத்தை நிறைவேற்றினார்.
அவனது வீரத்திற்கு அடையாளமாகத் தம்பன் கோட்டை என்று அழைக்கப்பட்ட கோட்டைமீது அந்த இராப்பொழுதில் குமரன் வானை அண்ணாந்து பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிர்மலமான வானில் விண்மீன்கள் கண்சிமிட்டி அவனுக்கு உற்சாகம் ஊட்டின. கோட்டைச்சுவரில் சொருகியிருந்த பந்தங்களின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து அவனது கம்பீரத்தை கூட்டிக்காட்டின.
என்னால் தளபதி தம்பன்போல இந்தக் கோட்டையைக் கட்டிக்காக்க முடியுமா? புகழ்பெற்ற அவர் எங்கே... நான் எங்கே...?
அவன் தன்பார்வையை கோட்டைச் சுவர்கள் மீது ஓடவிட்டான். என்னால் முடியுமென்றபடியால்தானே மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கின்றார்?.... சந்தர்ப்பம் வரும்போது திறமையைக் காட்டவேண்டியதுதான்.....ஆனாலும் கேள்விப்படுகின்றதைப் பார்த்தால் கிழக்கிலிருந்து இந்த ஜென்மத்திற்கே மோதல் வராது போலிருக்கிறதே.... தம்பன் தளபதி கிழக்கு எதிரிகளின் முது கெலும்பை உடைத்துவிட்டார் என்றல்லவா கூறுகின்றார்கள்.
உண்மையில் அவர் பெரும் வீரர்தான்... அவரது ஆற்றலுக்கு முன் நான் ஒரு பொருட்டே அல்ல. அவனது சிந்தனை நீண்டு கொண்டே போனது. இத்தனை பெருமைக்குரிய தளபதி நோய்வாய்ப்பட்டார் என்ற செய்தி எல்லோருக்கும் பெருந்துயரத்தை கொடுக்கவே செய்தது.
தம்பன் தளபதி நோய்க்காளானபோது அரச மருத்துவர்கள் அவருக்கு ஓய்வும், சிறந்த மருத்துவ வசதிகளும் தேவை என்றபடியால், அவர் தாயகம் திரும்புவதே சாலவும் சிறந்தது என்று கடுமையான ஆலோசனைகளைக் கூறியிருந்தார்கள். மன்னனும் அப்படிச் செய்வது தனது கடமையென்று தளபதியை தாயகம் அனுப்பிவைத்தார். முதலில் கோட்டையை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ள மறுத்த தளபதி தம்பன், தனக்குப் பிறகு தளபதியாக நியமிக்கப்படுவது யாரென்று அறிந்தபிறகுதான் தாயகம் திரும்ப சம்மதித்தார். தனது சிபாரிசை மன்னர் ஏற்றதையிட்டு அவர் சந்தோஷப்பட்டார்.
உதயகுமரன் சக்கரவர்த்தியின் ராணியின் மூத்தசகோதரி ரத்தினாவதிதேவியின் மகன், போரில் ஆற்றல் மிக்கவன், இளைஞன், நல்லபுத்திசாலி, திறமைசாலி, அவனை விட்டால் தளபதி தம்பனின் இடத்திற்கு வேறு பொருத்தமானவன் கிடைக்கமாட்டான் என்ற உறுதி மன்னனுக்கு இருந்தது.
புதிய தளபதியாக வந்து பொறுப்புக்களைப் பாரம் எடுத்து இரண்டு மூன்று நாட்களில் ஊரை அறிந்துகொள்ள அவன் புரவிப்பயணத்தை மாலை வேளைகளில் மேற்கொள்ள தலைப்பட்டான். இப்படியான ஒரு பயணத்தில்தான் அவன் ரங்கநாயகியை ஆற்றுமணலில் ராகம் பாடிக்கொண்டிருந்த நிலையில் சந்தித்தான்.
அவளது நினைப்பு மனதில் பட்டதுமே அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் அந்தக் கோட்டை, அதன்பொறுப்பு காவல்நின்ற வீரர்கள், முறைக்காவல் அழைப்பொலிகள் எல்லாமே மறந்துபோயின. இதை அவன் உணர்ந்து கொள்ளாமலில்லை மெல்லச்சிரித்துவிட்டு தலையை அசைத்தவன் ரங்கநாயகியின் நினைப்பில் மூழ்கிப்போனான்.
அவளது குரலில்தான் எத்தனை இனிமை. அவள் வாயினின்று புறப்படும் இனிமையான ராக ஆலாபனை உயர்ந்ததா? இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்ததா? தாமரை மொட்டு முகத்தில் வெட்டிச் செல்லும் வண்டுகள் போன்ற அந்தக் கண்கள், அவளிடம் உள்ள ஆற்றல், அழகு என்ற இரண்டு மேன்மைகளுமே அவனைப் பெரிதும் கவர்ந்தன.
அவனுக்குத் தெரியும், அவன் அவளுக்கு அடிமையாகிவிட்டான். ஆற்றல் மிக்க வீரன் ஒரு சாதாரண பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து விட்டான்! அவள் எனக்கு மனைவியாவாளா? அப்படி அவள்கிடைத்து விட்டால் என்னைப்போல பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது?
தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.
தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.
உயிரைத் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் நுழைந்து வாளைச்சுழற்றி எதிரியைப் பந்தாட அவன் தயங்கியதில்லை. அஞ்சியதில்லை. ஆனாலும் அவளை இழப்பதென்பது அவனுக்கு வாழ்வே இல்லைப்போலிருந்தது. நாளை அல்லது மறுநாளாவது அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.
தொடரும்......
{ படங்கள் இணையத்தில் இருந்து }
No comments:
Post a Comment