
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 4
முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம்? தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.
பாடுவதற்கு மனம் வராத நிலையில் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கினாள். பாவாடையைச் சற்று உயர்த்தி நனையாமல் பார்த்துக் கொண்டாள். திடீரென்று நீர்மட்டம் கூடுவதுபோல் தோன்றியது. உடனே ஊரில் கூறப்படும் காரணம் நினைவுக்கு வரவே கரைக்கு ஓடி வந்துவிட்டாள். திரும்பவும் ஆற்றைப்பார்த்தாள் நீர் மட்டம் கூடியதாகத் தெரியவில்லை. வீண் பிரமை என்றவாறு, ஊர்க் கதையை நினைத்துப்பார்த்தாள். அந்த ஆற்றுக்கு குடமுருட்டியாறு என்று பெயர் வந்த கதையது.
காலை வேளையில் ஊர்ப்பெண்கள் தண்ணீர் அள்ளக் குடங்களுடன் ஆற்றுக்கு வந்து கரையில் குடங்களை வைத்து விட்டுப் பல்துலக்கிக் கொண்டும், பராக்குப் பார்த்துக் கொண்டும், ஊர்க்கதைகளை அலசிக் கொண்டும் நிற்கின்றபோது, வினாடிக்கு வினாடி நீர்மட்டம் கூடிக் குறைந்து ஓடும் அந்த ஆறு, அருகிலிருக்கும் குடங்களையும் உருட்டிக்கொண்டோடுமாம். இதனால்தான் குடமுருட்டியாறு என்று பெயர் வந்தது என்று ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள்.
அந்தக்காலகட்டத்தில் பெரிய வாழைத்தோட்டம் இங்கே இருந்திருக்கின்றது. இப்போது வாழைகள் அங்கு இல்லை ஆனாலும் அது வாழைத்தோட்டம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் குடமுருட்டியாறு வடதிசை திரும்பி பால் துறைக்கடலை நோக்கிப் பாய்கிறது. இந்த ஆற்றுப் பிரதேசம் பதிவான தரைப்பிரதேசமாக இருப்பதால் மாரிவெள்ளம் மணலை வார்த்துச் சென்றுள்ளது.
( தற்போது குடமுருட்டியாறு, மழைக்காலங்களில் நீர்பாயும்
ஓடையாகத் தூர்ந்துபோய் இருக்கிறது.)
ரங்கநாயகி இந்த நினைவினின்றும் விடுபட்டுத் தான் நின்று கொண்டிருக்கும் மணல்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிராகி வளர்ந்து நின்ற மருத மரங்களை கவனித்தாள். நான்கு திசைகளிலும் கிளைபரப்பி விதானம்போல் ஆகாயத்தை மறைத் திருந்ததால் இயற்கை அன்னை சிருஷ்டித்த தூண்களாலான மண்டபம் போலத்தெரிந்தது. ~ஊர் மக்கள் பொழுதுபோக்க எவ்வளவு அழகான இடம்.... அமைதியான இடம் இது என்று நினைத்துக் கொண்டாள்.
உண்மைதான்! இந்த இடத்தை ஒரு உல்லாசமான பொழுது போக்கு இடமாக ஊரவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனோ அதில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக தம்பலகாமம் தெற்கு நெற் செய்கையாளர்கள்தான் அந்த இடத்தை உணவு உட்கொள்ளும் இடமாகத் தண்ணீர், நிழல் ஆகியவற்றை முன்வைத்து பயன்படுத்துவதுண்டு. அறுவடையான பிறகு அந்தப்பயன்பாடும் இல்லை. அதனால்தான் இந்த இடம் ஏகாந்தமாக மனித சஞ்சாரமில்லாது இருக்கிறது. ஏதோ இதுகூட நமக்கு அனுகூலம்தான்.

ரங்கநாயகி சிந்தனைகளில் இருந்து விடுபட்டாள். அவளுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கம் போல மனதில் பட்டது. தந்தையோடு வந்த முதல் நாளே அவளுக்கு இந்த இடம் பிடித்துப்போய் விட்டது. அந்த மணல் சோலையைக் கண்டதும் என்ன அழகான இடம் என்று அவள் பரவசப்பட்டவள் அல்லவா? அவளுக்கு பாடல்களைத் தனிமையில் பாடிப்பழக இதைவிடச் சிறந்த இடம் இருக்குமா?
திடீரென்று கேட்ட குதிரைக் குழம்பொலி அவளைத் திடுக்கிடப் பண்ணியது. சாலையை நோக்கிய கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. ஒரு கணம்தான்! தனது அவசரம் குறித்துத் தன்னைக் கடிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவளாகத் திரும்பி ஆற்றை நோக்கினாள்.
அந்த வாலிபன் அருகில் வந்து என்ன இன்றைக்குப் பாடவில்லையா? என்று கேட்கும் வரை அவள் திரும்பவில்லை.
அவள் புன்னகைத்தாள்.
நான் உங்கள் ரசிகன்..... நம்புங்கள்
அவள் சிரித்தாள்.
ஏன்? சிரிக்கிறீர்கள்
ஒரு நாள் ரசிகனா?
ஏன் இனி நீங்கள் பாடமாட்டீர்களா?
மனம் சொன்னால் பாடுவேன்
நான் சொன்னால் பாடமாட்டீர்களாக்கும்
முன்பின் தெரியாதவர் சொல்லப்பாடுவது எங்கள்
ஊர்பழக்கமில்லை
அப்பா! பெரிய பழக்கம்தான்
இப்படியாக அந்த வாழைத்தோட்டம் அவர்களது சந்திப்புக்கான தளமாக அமைந்துவிட்டது. நாளாக ஆக ரங்கநாயகியின் மனதில் இருந்த அச்சமும் தயக்கமும் அகன்று விட்டது. அவன் தனக்கொரு பாதுகாவலன் என்பதாக உணரத் தலைப்பட்டாள்.
அவன் அருகில் வந்து பாடச்சொல்லிக் கெஞ்சுவான். அப்படிக் கெஞ்ச வைப்பதில் அவளுக்கொரு ஆனந்தம். அவனது உயர்வான பண்புகளும், நல்ல நடத்தைகளும் அவளை அவன் நம்பத்தகுந்தவன் என்று எண்ணவைத்தன. அவன் வரத் தாமதமாகிவிட்டாலோ என்னவோ? ஏதோ? வென்ற பதைப்பு எழுந்து, என்ன காரணம்? என்று தேடிக் குழம்பியது அவள் உள்ளம்.
அவனும் அவள், தான் கேட்டுக் கொண்டபோது பாடாதது கண்டு சினக்கவில்லை. அவளை விளங்கிக் கொண்டான்.
அந்நியனான நான் அப்படிக்கேட்டதே தவறு என்று சமாதானம் சொல்லிக் கொண்டான். இந்த நிலை கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது. இப்போதெல்லாம் அவள் அவனை ஏமாற்றவும், சீண்டவும் விரும்பவில்லை. இசைமீது அவனுக்கிருந்த ஆவலை அவன் சொல்லிக்கேட்டு ஏற்றுக்கொண்டு பாடலானாள். அவனும் அவளது இராக ஆலாபனைகளை எத்தனையோ ஆகாக்கள் போட்டு ரசிக்கலானான்.
ஒரு நாள் அவனே சொன்னான். நான் தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவன். பெயர் குமரன். என்னைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.நான் ஊருக்குப் புதியவன்தான் என்று அவள் கேளாமலே தன்னை வெளிப்படுத்தத் தொடங்கினான்.
முதல் நாள் ஊகம் ஊர்ஜிதமானது. தன் கணிப்பு சரியாக அமைந்தது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவன் தோரணை எல்லாம் அவன் சாதாரண வீரனல்ல என்ற எச்சரிக்கை உணர்வை அவளுக்கு கொடுக்காமலில்லை. அப்படித் தான் இருந்தாலும் அவ்வாறான ஒருவன் தன்னோடு சமனாகப் பழகி, பேசி, ஏன்? பாடச் சொல்லிக்கேட்டு ... ஒரு பக்கம் எண்ணும்போது பெருமையாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரையிலும் அவன் அவள் பெயரைக் கேட்டதேயில்லை. தொடரும்......
{ படங்கள் இணையத்தில் இருந்து }
எழுத்தோட்டம் அருமை.
ReplyDeleteபடங்கள் 'இணையத்திலிருந்து' என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும்... பொறுமையாக, பொருத்தமாகத் தேடிப் பிடித்திருக்கிறீர்கள் ஜீவன். அருமையான ஓவியங்கள், பாராட்டுக்கள்.
கதை நடுவே குடமுருட்டி ஆற்றின் பெயர்க் காரணமும் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDelete