ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 3
இளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள்.
வேகமாக வந்தவள் தந்தை முற்றத்தில் நிற்கக் கண்டாள். தனக்காக அவர் பார்த்து நிற்பது புரிந்தது.
என்னம்மா எங்கே போயிருந்தாய்? இன்னும் சற்றே பொழுது தாமதித்திருந்தால் உன்னைத்தேடி எங்கெல்லாம் அலைந்திருப் பேனோ? என்றார் பிள்ளை ஆதங்கத்துடன்.
என்னப்பாநீங்க! உங்களுக்கு என்னைப் பற்றிப் பயம் வரலாமா? இன்றைக்கு பாடிக்காட்டிய இராகத்தை தனிமையில் பாடிப் பழகிச், சரிபார்க்க நீங்கள் முன்னம் அழைத்துப் போய் காட்டியிருந்த குடமுருட்டியாறு மணல் பரப்புக்குத்தான் போயிருந்தேன். என்னை குடமுருட்டியாறு ஒன்றும் உருட்டிக் கொண்டு போய்விடாது அப்பா.
என்ன! இராகத்தைப் பாடிச் சரிபார்த்தாயா...? அதற்காக, மணல் பரப்புக்கா போனாய்? ... இராகம் சரி வந்ததா? எங்கே பாடு பார்க்கலாம். என்றார் அவள் தந்தை.
அவ்வளவுதான்! அடுத்த கணமே தனது குயில் குரலில் தந்தையின் நாதஸ்வர சுளிவு நெளிவுகளுடன் தனக்கேயுரிய லாவகத்துடன் கரகரப்பிரியா இராகத்தைப் பாட ஆரம்பித்து தொடர்ந்தாள். தாம் பாடிக்காட்டியதிலும் மேலாக மகள் படிப்படியாக இராகத்தை உச்சஸ்தாயியிக்கு ஏற்றிச் செல்வதையும், அதற்கு இசைவாக அவளின் இனிய குரல் தடங்கலின்றி இராக ஆலாபனைக்கு துணை போவதையும் கண்டு பெருமைப்பட்டார்.
அதுமட்டுமல்லாது, அவளது இராக ஆலாபனையிலும், பல்லவி எடுப்பிலும், தான் நாதஸ்வரத்தில் கையாளும் பாணி மிளிர்வதையும் கண்டு குளிர்ந்துபோன பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை, மீன் குஞ்சுக்கு நீந்தவும் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்று தனக்குள் மகிழ்ந்ததுடன் நில்லாது வாய்விட்டு, ஆகா ... அபூர்வம், அபூர்வம் என்று மகளைப் பாராட்டவும் செய்தார்.
சிறு பராயத்திலே தகப்பனை இழந்துவிட்டார் வைத்திலிங்கம் பிள்ளை. அவர் தாய்மாமன் பரசுராமன் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று நாதஸ்வர மாமேதை பொன்னுச்சாமி பிள்ளையிடம், பையனின் ஆதரவற்றநிலையைக் கூறி, குரு - சீடன் முறையில் நாதஸ்வரம் கற்க ஏற்பாடு செய்திருந்தார். வைத்திலிங்கம், பக்தியுடன் குருவுக்கும், அவர் பத்தினிக்கும் அவர்களது மனம்குளிர சிருஷைகள், தொண்டுகள் செய்து அவர்களின் பரிபூரண ஆசியுடன் நாதஸ்வரம் கற்று வித்துவானாக ஊர் திரும்பினார்.
ஊர் திரும்பிய அவருக்கு அவரது திறமை, ஈழத்தின் தம்பலகாமத்தில் கோணேஸ்வரர் ஆலயத்தில் சேவகம் புரியும் வாய்ப்பைத் தேடித்தந்தது. நாளடைவில் அவருக்கு நாட்டு வைத்தியரின் அறிமுகம் கிட்டியது. அந்த நாட்களில் பெரும்பாலும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளைக் கற்றுத் தேர்ந்திருப்பது என்பது சாதாரணம். வைத்தியரும் இதற்கு விதிவிலக்கில்லை. அவருக்கு கர்நாடக இசை கைவந்த கலை. நன்கு பாடுவார். அவரது திறமை வைத்திலிங்கத்தை கவர்ந்தது. அவர் வீட்டுக்குப் போய் இருவருமாக சங்கீதத்தை உருப்போடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
வைத்தியருக்கு ஹம்சாம்பிகா என்றொரு மகள். வைத்திலிங்கம் பிள்ளையின் ஆற்றல்களால் கவரப்பட்டு, அவரைக் காதலித்து மணந்து கொண்டாள். ஊரெல்லாம் தம்பதியை மெச்சிப் போற்றுமளவுக்கு அவர்களது வாழ்க்கை இருந்தது. இதோ வள்ளுவனும் வாசுகியும் என்றே சொல்வது வழக்கமாக இருந்தது. தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தில் ஆனி உத்திர தினத்தில் தொடங்கும் உற்சவ விழாக்களுக்கு உபயக்காரர்கள் போட்டி மனப்பான்மையுடன் இந்தியாவினின்றும், இலங்கையின் யாழ்ப்பாணம் போன்ற பல இடங்களிலிருந்தும் நாதஸ்வரம், பாட்டு, சங்கீதக் கச்சேரி என்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணித் தூள் கிளப்பிவிடுவார்கள். சுவாமி எழுந்தருளலுக்கு முன் இரவு பதினொரு மணிக்கு அப்பாலும் நாதஸ்வரக் கச்சேரிகள் தொடரும். அவ்வாறான கச்சேரிகளில் கலந்து கொண்ட வித்துவான்கள் எவரிடமும் தோல்வி காணாத ஒரு வித்துவானாக வைத்திலிங்கம் பிள்ளை புகழ்பரப்பிக் கொண்டிருந்தார். என் வெற்றிக்கெல்லாம் என் கம்சாதான் காரணம் என்று மனைவியின் புகழ்பாடுவார் வைத்திலிங்கம்பிள்ளை.
அவரது வாழ்க்கையின் எதிர்பாராத இழப்பு மின்னாமல் முழங்காமல் அவரைத் தேடிவந்தது. இரண்டொரு நாட்கள்தான் சோர்வாகக் காணப்பட்ட அவரது மனைவி, தந்தை கற்றுக் கொடுத்திருந்த அறிவைக் கொண்டு கசாயம் அது இது என்று குடித்துப் பார்த்து சமாளிக்க முயற்சித்தாள். ஒரு நாள் நெஞ்சடைப் பில் போயே விட்டாள். இடிந்து போனார் வைத்திலிங்கம் பிள்ளை. மனைவியின் பிரிவு அவரை பைத்தியமாக மாற்றியடித்துவிடும்போல் இருந்தது. அவரது நிலை கண்டு ஊரே கலங்கியது. நாதஸ்வரத்தை கிடப்பில் போட்டுவிட்டார். அவருக்குப் பைத்தியம் பிடிக்காமல் தவிர்த்தது அவரது கடைசி மகளான ரங்கநாயகிதான். தந்தைக்கு அப்படியேதும் அவல நிலை வராது தடுக்கும் ஆதாரமாக அவள் இருந்தாள். காலம் அவரை மாற்றும் என்று அவள் நம்பினாள். நாளானபோது அவர் கோயில் சேவையைச் செய்ய தனது மகன் கணபதிப்பிள்ளையை ஏற்பாடு பண்ணிக் கொடுத்துவிட்டு, கடைக்குட்டி ரங்கநாயகியுடன் ஒன்றிக் கொண்டார். நாதஸ்வரத்தை உயிரிலும் மேலாக மதித்தவர் அவர். இப்போதோவென்றால் அதை ஏறிட்டுப் பார்ப்பதே சிரமமாக இருந்தது.
தொடக்கத்தில் தன் தனிமையில் ஆறுதல் தேடிக்கொள்ள குடமுருட்டியாற்று மணல் பரப்புக்குப் போய்வருவார். பிறகு ஓரிரு சந்தர்ப்பங்களில் ரங்கநாயகியையும் அழைத்துச் சென்றிருக்கின்றார். இந்த பயணங்களின் போது மகளுக்கு இராகங்கள் பற்றி எதையாவது சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவளது கிரகிக்கும் சக்தி அவரையே அசத்தியது. படிப்படியாக அவளுக்கு இராகங்களைப் பாடிக்காட்டலானார். மனமும் தேறுதல் கண்டது. அவரது பயிற்சிகளால் ரங்கநாயகியும் இசைத்துறைக்குள் படிப்படியாக நுழைந்து கொண்டிருந்தாள்.
பிரபலமான நாதஸ்வர வித்துவானாகப் புகழ் பெற்ற மனிதர் அவர். நாதஸ்வரத்தை அவர் கையிலெடுக்காவிட்டாலென்ன அவரைத் தேடிக்கொண்டு சந்திக்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தந்தையிடம் கற்றதை உருப்போட்டுப் பார்க்கத் தனிமையான சூழல் இல்லா நிலையில் அவளாகத் தேடிக் கொண்ட மேடைதான் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பு. அப்படி போயிருந்த வேளையில்தான் ரங்கநாயகி அந்த புரவி வாலிபனைக் கண்டாள்.
தகப்பன் ஆகா... ஆகா... அபூர்வம் என்று பாராட்டியபோது அவளுக்கு ஏனோ குதிரை மீது கம்பீரமாக சென்ற வாலிபனது எண்ணம் தோன்றியது. அந்த வாலிபன் இந்த இராகத்தைப் பாடச் சொல்லிக் கெஞ்சியது நினைவில் தோன்றி உடல்முழுவதும் ஒரு இன்பக் கிளர்ச்சியை ஓடவிட்டது. முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம்? தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.
தொடரும்......
{ படங்கள் இணையத்தில் இருந்து }
No comments:
Post a Comment