Wednesday, September 08, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 3



தீடீரென்று பாடலை நிறுத்தியவள், வலக்கையை ஊன்றியவாறே திரும்பி ஒலிவந்த திசைநோக்கிப் பார்த்தாள். அவள் கண்கள் படபடவென அடித்துக்கொண்டன. முகத்தில் பூரணமாக வியப்பின் சாயல். அவள் கேட்டதோ குதிரையின் கனைப்பு, அருகில் காண்பதோ ஒரு கம்பீரமான காளை! அவள் பார்வை அவனினின்றும் விடுபட்டு குதிரைக்காகத் தேடியது. அவன் புரிந்து கொண்டான்.~~




மன்னிக்கவேண்டும். தங்கள் பாடலை இடையூறு செய்து குழப்பியது என் குதிரைதான். இதோ... என்றவன், சற்று நகர்ந்து பின்னால் புதரண்டை ஒன்றுமே அறியாததுபோல நின்று கொண்டிருந்த குதிரையைக் காட்டியபோது, அது தன் முன்காலொன்றால் நிலத்தைத் தட்டி தலையை மேலும் கீழும் ஒருமுறை ஆட்டியது.


குதிரையைக் கண்டுவிட்ட திருப்தியில் தன் பார்வையை அவனுக்காகத் திருப்பினாள். வசீகரமான முகம், ராஜகளை சொட்டும் தோற்றம், விஷமம் சொரியும் கண்கள், குறும்புப் பார்வை. அரும்பி மேலுதட்டின் மேலாக கோடிழுத்தது போல வளரும் மீசை - அகன்ற மார்பு, உரமேறிய தோள் தசைகள், அவன் மார்பின் குறுக்காக இருந்த கரங்களின் புடைப்பு அவனது பலத்தை எடுத்துக் காட்டின. நீண்ட கால்கள் மணல்பரப்பில் உறுதியாக நின்ற விதம் - எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காத ஆண்மையின் உருவாக அவன் இருந்தான். அவனை அணுஅணுவாக இரசிக்கும் தன் செயலை அவளால் தடுக்கமுடியவில்லை.


மீண்டும் அவன் கண்களுக்காக, பார்வையைக் கொண்டு சென்றபோதுதான், அவனது விஷமம் நிறைந்த பார்வை தன்னை அவதானிப்பதையும், தன்னை அங்கம் அங்கமாக அலசுவதையும் கண்டு நாணிப்போய், சரேலென எழுந்து நின்றுகொண்டு, வலது கால் பெருவிரலால் மணலில் கிளறிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஒரு அச்சம் எழவே செய்தது. தனித்த இந்த சூழலில்.. அவள் தலை கவிழ்ந்து நின்றது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது.

இது பெண்ணா இல்லை தங்கச்
சிலையா என்ற அவனது ஆராய்ச்சி தடையின்றித் தொடர்ந்தது. சங்குக் கழுத்திற்குக் கீழே அடங்காமல் திமிறிக் கொண்டிருந்த அவளது அழகு யாரையும் மயக்கிப் போடும் போல இருந்தது. அவளது கைகளின் மினுக்கம் மேனியெல்லாம் பரவிக் கிடந்தது. கடைந்தெடுத்த சிற்பம் போல அவள்......... நான் சவாரி கிளம்பிய வேளை நல்ல முகூர்த்தம் போலிருக்கிறது, என்று தனக்குள் மெச்சிக் கொண்டான். தனிமையிலிருக்கும் பெண்ணை இப்படி ரசிப்பது பண்பாகாது என்று
தனக்குத்தானே கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தபோதுதான்,அவள் பாடல் நின்றுவிட்ட வெறுமையை அவனால் உணரக்கூடியதாக இருந்தது.


அவள் வாயினின்று புறப்பட்டுக் கொண்டிருந்த இனிய ராக ஆலாபணை திடீரென்று நின்று போனது, மகுடியின் ஓசையால் மயங்கி ஆடிக்கொண்டிருந்த நாகசர்ப்பம் திடீரென குழலோசை நின்றால் எப்படித்தவிக்குமோ, அப்படியொரு தவிப்பில் தன் உள்ளம் இருப்பதை உணர்ந்தான். இதற்கெல்லாம் இந்தப் புரவிதான் காரணம் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன்,

மன்னிக்கவும் உங்கள் பாட்டைக் குழப்பி விட்டமையைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். பாட்டைத் தொடருங்கள்... நிறுத்தி விட்டீர்களே பாடுங்கள்... எல்லாம் இந்தப் புரவியால் வந்தவினை அவன் அவளது பதற்றத்தை நீக்கமுயல்வது அவளுக்குத் தெரிந்தது.

அவன் காணாதபடி புன்னகைத்துக் கொண்டாள்.
பாடவே மாட்டீர்களா?................. சரி நான் நின்றால் பாட மாட்டீர்கள் போலிருக்கிறது. உங்களைக் குழப்பி விட்டேன் போலிருக்கிறது


அவன் குரலில் இருந்த ஏக்கம் அவளைத் தொட்டது. இல்லை என்று சொல்வது போல் தலையை வெட்டித் தூக்கினாள். மறுகணம் அவனது பார்வையை சந்திக்க வெட்கித் தலை குனிந்து கொண்டாள். அவளது மனவோட்டம் அவனுக்குப் புரிந்தது. திருப்தியாகவும் இருந்தது. அவளைச் சீண்டுமாப்போல,
சரி.. பார்க்கலாமே. நான் போன பிறகு பாடுங்கள். என்றபடி அஸ்வத்தை நோக்கிச் சென்று கடிவாளத்தை கையிலெடுத்துக் கொண்டு, பாய்ந்தேறினான். அவன் நகரத்தொடங்கியது அவளது உணர்வுக்குத் தெரிந்தது தலை நிமிர்ந்தாள்.


இன்றில்லாவிட்டாலும் மீண்டும் உங்கள் இனிய கானத்தை
கேட்கவே செய்வேன், வரட்டுமா?
என்று அவளைப் பார்த்து கூறி
புன்னகைத்துவிட்டு அஸ்வத்தை மேற்குத் திசையால் செலுத்திச் சென்றான். அதுவும் அவன் உள்ளத்தின் துள்ளலுக்கு ஈடுகொடுத்துப் போய்க் கொண்டிருந்தது.


அவன் தன்பார்வையினின்றும், பாதையினின்றும் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றவள், வீட்டுக்குப் போக முனைந்தாள். அவன் பார்வைக்கு மறைந்தாலும், அவன் நினைவில் அகலமாட்டான் போலிருந்தது. அவனது எண்ணம் மனதுக்குள் எழுந்து அலையாடியது. யார் அந்த கம்பீரமான வாலிபன்...? ஊருக்குப் புதியவனாக தென்படுகின்றானே! யாராக இருக்கலாம். குதிரையில் போகும் மிடுக்கையும் ஆளின் தோற்றத்தையும் பார்த்தால், இவன்
தம்பன் கோட்டை வீரர்களின் ஒருவனாக இருக்கலாம் என்று தெரிகிறது.. யாரும் புதிதாக வந்திருக்கலாம்.. என்று ஒரு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாலும், சிந்தனை அதற்கு இடம் தரவில்லை. ஆள் கவர்ச்சியானவன்தான். இளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள். தொடரும்......





ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: