Tuesday, September 07, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 2


ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 1


இனி...


ஆற்றுக்குச் சமாந்தரமாக அமைத்திருந்த பாதை அவளுக்குப் பின்புறமாக இருந்தது. அந்தப்பாதையிலே தம்பலகாமத்தின் கிழக்குப்பக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி ஒரு ஆஜானுபாகுவான வாலிபன் வெண்புரவி ஒன்றிலமர்ந்து வந்துகொண்டிருந்தான். புரவியை அவன் விரட்டாமல் தன்போக்கில் விட்டிருந்ததால் துள்ளல் நடைபோட்டு அது நகர்ந்து கொண்டிருந்தது.



அதன் எடை காரணமாகவோ, மணல் பகுதியான பாதை காரணமாகவோ தெரியவில்லை குளம்பொலி எழவேயில்லை. அதன் நடையின் துள்ளலை வெகுவாக அனுபவித்துக் கொண்டு, பக்கத்தில் சுழல் விட்டு ஓடும் குடமுருட்டியாற்றின் எழில் ஓட்டத்தையும் ஆற்றின் வடபுறத்தில் சோலையாகச் சொரிந்து நின்ற தென்னை, கமுகு, மா, பலா, வாழை, கரும்பு போன்ற பயன்தரு விருட்சங்களையும், தம்பலகாமம் தெற்கில் தொடர்சங்கிலி போன்றிருந்த திடல்கள் எனப்பட்ட ஊர்களின் இயற்கை அழகையும் ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்.


செம்மூக்கன் மாங்காய்கள் ஆற்று நீருக்குமேல் ஆற்றைத் தொட்டுவிடுவது போல குலை குலையாய்த் தொங்கி நிற்கும் அழகை அவன் வேறெங்கும் கண்டதில்லை. அதுமட்டுமல்ல தெற்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரகதப் போர்வையால் போர்த்துவிட்ட காணி போன்று பசுமையாய்த் தோன்றிய நெல்வயல்களின் அழகு, அதைத் தொட்டுவரும் காற்று நாசியில் ஊட்டிவிடும் குடலைப்பருவத்து மணம், நாற்றுக்கள் காற்றில் அலை அலையாய் ஆடும் எழில்.... அந்த வயல் நடுவே குடில் ஒன்றைப் போட்டுக்கொண்டு ஆயுள் முழுவதும் தங்கிவிடலாம்போலத் தோன்றியது அந்த வாலிபனுக்கு.


அவனைத் தாங்கியிருந்த புரவிகூட தன் எஜமானனின்உணர்வில் இரண்டறக் கலந்ததுபோல தலையை நிமிர்த்தி அந்தக் காற்றின் சுவையை அனுபவித்துக் கொண்டே நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் குதிரையின் அழகே தனியாக இருந்தது. சுலபமாகக் கிடைத்துவிடக் கூடிய குதிரையல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரேபிய புரவி அது என்பதில் சந்தேகமேயில்லை.

முன்னங்கால்களை அது மாறி மாறி ஊன்றும் போது, அதன் புஜங்களின் தசைகள் அசைந்த விதமும், பின்னங்கால்களின் உதைப்பின் போது அதன் தொடைகளில் ஏற்பட்ட தசை அசைவுகள், அதன் கால் உதைப்பு விசை எவ்வளவு உந்துதலைத் தரக்கூடும் என்பதை ஊகித்துக்கொள்ள உதவின. பிடரி மயிர்களும், வால் மயிர்களும் நீவிவிட்ட பொலிவுடன் இருந்தன. நாளாந்தம் அதன் உடல் நீவி விடப்படுவது தெளிவாக இருந்தது.


துள்ளல் நடைபோட்டு அந்தக் குதிரை ஒரு புதர் முடக்கினைக் கடந்ததும் ஆற்றை அண்டிய மணல்பரப்பிலே ஒரு இளம் பெண் தனியே அமர்ந்திருப்பது கண்டு வியப்படைந்தான். அவன் அவளுக்கு நேர் அருகாக வந்தபோதுதான், அவள் இராகம் ஒன்றை பாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. எனவே அந்த வாலிபன் சந்தடி செய்யாமல் குதிரையிலிருந்து இறங்கி, அதன் கழுத்தில் தட்டிக்கொடுத்து சத்தம் போடாதே, என்று வாயில் விரல் வைத்து சைகை காண்பித்து விட்டு அருகிலிருந்த செடிக் கிளையில் வெறுமனே அதன் கடிவாளத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மெதுவாக நடந்து சத்தமின்றி அவளை நெருங்கி நின்று, புடைத்து நிமிர்ந்து நின்ற தன் நெஞ்சுக்குக் குறுக்காக கைகளை மடித்துக் கட்டிக்கொண்டு அவள் பாடும் அழகைக் கேட்டு ரசித்துக் கொண்டு நின்றான்.


அவன் ஒரு சங்கீதப் பிரியன். அவனே ராகங்கள் சிலவற்றைச் சுமாராக உருப்போடக்கூடியவன். பாராட்டக் கூடியவகையில் பாடக்கூடியவன் என்று சொல்ல முடியும். இப்போது இந்தப் பெண் சாதகம் செய்யும் கரகரப்பிரியா ராகம் அவனுக்குப் பழக்கப்பட்ட தொன்றுதான். ஆனால் இவள் பாட்டில் ஒரு புதுமை தெரிந்தது. நளினம் தெரிந்தது. இவள் பாடும் விதம் கூட வித்தியாசமாகத் தோன்றியது. அவன் மனதை அது கவரவே செய்தது. சுருள் சுருளாக - பூவானம் சொரிவதுபோல் இராகத்தைக் கொஞ்சங் கொஞ்சமாய் உச்சஸ்தாயிக்கு அவள் கொண்டு செல்லும் லாவகம், பின்னர் மலையிலிருந்து நெளிந்து வளைந்து கீழிறங்கும் அருவிபோல அவள் குரலில் அந்த இராகம் கீழிறங்கிய பாவம், அவனை வெகுவாகத் தொட்டது. ஒரு கைதேர்ந்த வித்துவானின் பாணியில் அவள் ஆலாபணம் செய்து கொண்டிருந்தாள் என்றே அவனுக்குப் பட்டது.


இப்படி அவளை நெருங்கி நின்று அவன் பாட்டை ரசிப்பது உணர்ந்து, அவள் குழம்பி பாட்டை நிறுத்திவிடப் போகிறாளே என்ற அச்சம் கூட அவனுக்குள் தலைதூக்காமல் இல்லை. தனது எந்தவொரு அசைவும், அப்படியொரு நிகழ்வுக்கு இடம் வைத்துவிடக் கூடாது என்பது போல, சிலைபோன்று அசையாமல் நின்றான். ஏதோ அவன் சிலைபோல நின்று கொண்டிருந்தாலும், அவனது உள்ளமும் சிந்தனையும் அசைவாடவே செய்தன.


அவனது போதாத காலம், அவனது குதிரை அந்த நேரம் பார்த்துத்தானா கனைக்க வேண்டும்?
தொடரும்......







ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment