Friday, October 01, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 13




இனி...


ரங்கநாயகி இரண்டு மூன்றுநாட்கள் சரியாகச் சாப்பிடவும் இல்லை தூங்கவும் இல்லை. உதயகுமரன் சொன்னவைகளையே மனதுக்குள் இரைமீட்டு முடிவெடுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.


உதயகுமரன் தனக்காக, தன் பதவி, குடும்பம், உற்றார்உறவினர் ஏன் அவனுக்கு கிடைக்கக்கூடிய எதிர்காலத்தையே உதறித்தள்ள முன்வந்துவிட்டான் என்றால், அவனது அன்பு எவ்வளவு உறுதியானது உண்மையானது என்று எண்ண எண்ண அவன் மனதில் உயர்ந்து கொண்டே போனான்.


அதே நேரம் தானும் அதற்கீடாக சகலதையும் சகலரையும் துறந்து அவனே தஞ்சம் என்று அவன் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொண்டு அவனோடு சென்றுவிடவேண்டியதுதான். அதிலும் அவளுக்கு முடிவெடுக்கச் சிரமமாக இருந்தது.



தன்னை வளர்த்து ஆளாக்கி அறிவூட்டி... தன் கடைசிக் காலத்துக்கென தன்னையே நம்பியிருக்கும் தன் தந்தையை விட்டுச் செல்வது துரோகம் ஆகாதா? யாரோடும் அவளால் இதுபற்றி கலந்து பேச முடியவில்லை. அவளுக்கு நெருங்கிய சினேகிதி என்று யாரும் இருந்ததில்லை. குழப்பம் கூடக் கூட பசி குறைந்தது.


வயிறு வெறுமையாக நித்திரை தொலைந்தது. இதற்கிடையில் நாளை மறுநாள் அவர் என்னைச் சந்திக்கும்போது என்ன கூறப்போகிறாரோ... நான் என்ன சொல்லப்போகிறேனோ? என்ற பதைபதைப்பு அவளுக்குள் உருவாகத் தொடங்கிற்று.


இதுவரைக்கும் தன்னைப்பற்றியோ, தன்வாழ்க்கை எப்படி அமைந்திருக்கவேண்டும் என்பதைப் பற்றியோ கொஞ்சமும் கவலையின்றி திரிந்தவளுக்கு, எல்லாம் அப்பாவுக்கு தெரியும்... அவர் பார்த்துக் கொள்வார்... என்ற முனைப்பில் வாழ்ந்தவளுக்கு... இப்போது எல்லாம் ஒரே சுமையாகத் தெரிந்தது. இதைவிட குடமுருட்டியாற்று பக்கம் போகாமல் இருந்திருக்கலாம்.... அவரைக் காணாமல் இருந்திருக்கலாம்.... இந்த உறவை தொடங்காமலே இருந்திருக்கலாம் என்ற சிந்தனைகூட
களைத்துப்போன அவள் மனதில் இருந்து வந்தது.


கோணேஸ்வரா நான் சிறு பெண். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நீயே ஒரு வழிகாட்டு. அதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு, அத்தையை துணைக்கு கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போய்வந்தாள்.


சதுர்வேத மங்கலத்தில் படைவீரர்களுக்குள் ஒரு விவாதமே நடந்து கொண்டிருந்தது. நாளை சுட்டெரிக்கும் கோடை வெயில் பயணமா? இன்றேல் இதோ வெண்ணிலவு பகலாய்க் காயும் குளிரான இரவில் புறப்பட்டு தம்பன் கோட்டையில் ஆறுதலாக ஓய்வெடுப்பதா?
சதுர்வேத மங்கலத்தின் விழா பரபரப்பு, சந்தடி, இரைச்சல்கள் சரியாக ஓய்வெடுக்க அவர்களை அனுமதித்திருக்கவில்லை. எவ்வளவு விரைவாகத் தம்பலகாமம் செல்லமுடியுமோ அவ்ளவுக்கு அதிகமாக ஓய்வெடுக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் இறுதியில் வந்து சேர்ந்தார்கள்.


இதற்கு தளபதியின் ஒப்புதல் வேண்டுமே, இளஞ்செழியனைப் பார்த்தார்கள். அவனுக்கு தளபதியைக் குழப்ப விருப்பமில்லை. யோசித்தான்....இவர்கள் சொல்வதுபோல் பயணத்தை விரைவுபடுத்தினால், அவரும் அவரது முடிவைப்பற்றி ரங்கநாயகி அம்மையாருடன் சீக்கிரம் பேசி அவரது குழப்பத்திற்கெல்லாம் முடிவு கட்டலாம் அல்லவா?... இளம் பராயத்து நண்பனான அவனுக்கு உதயகுமரன் ரங்கநாயகி பற்றி தன்னுடன் அதிகம்பேசாதது குறித்துக் கொஞ்சம் உள்ளூர மனவருத்தம்தான். இருந்தாலும் அவன் இத்தனை தூரம் கலங்கி நின்றதை அவன் அறியான்.


ஆதலால்.... விரைவில் ஒரு முடிவைக் காண்பது நல்லது என்றே பட்டது. உதயகுமரனை நெருங்கினான். பிரபோ! (என்னதான் நண்பனாக இருந்தாலும் தளபதிக்குரிய மரியாதையை அவன் கொடுக்கத் தயங்கியதில்லை.) முழுநிலவின் வெளிச்சத்தில் பயணப்பட்டு சீக்கிரமே கோட்டையைப் போயடைந்தால் ஆறுதலாக ஓய்வெடுக்கலாம் என்று படையினரின் ஆசையாக இருக்கிறது. தங்கள் முடிவு?என்று இழுத்தான்.


எதிர்காலம் பற்றியே முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் இது பற்றி என்னமுடிவெடுப்பது? எப்போதாவது போகத்தானே போகிறோம். இப்போது போனால் என்ன? பிறகு போனால் என்ன. இருந்தாலும் படைவீரர்களின் நலனில் அவனுக்கு இருந்த அக்கறை அவனுக்கு சரி அவர்களிஷ்டம் போல் புறப்படலாம் ஆயத்தமாகச் சொல் இரவு உணவான பிறகு ஒரு நாழிகையானதும் புறப்படலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டான்.


தொடரும்.....

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்




ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. மிகவும் நேர்த்தியான எழுத்து நடையில் ஆர்வம் கசிகிறது எண்ணங்களில் . தொடருங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete