Monday, September 27, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11




திடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.


இனி...


தம்பன் கோட்டையை விட்டுப்புறப்பட்ட அந்த அணி சதுர்வேத மங்கலம் என்ற கந்தளாயை நோக்கி நகர்ந்தது. தளபதியைப்போல வீரர்களும், குதிரையை ஓட விரட்டாமல், சிறு பாய்ச்சலிலேயே செல்ல அனுமதித்தனர்.



பயணம் சேனை வழிக்கல்வழியூடாகச் செல்லலாயிற்று. சேனைவழிக்கல்வழி சதுர்வேத மங்கலத்திற்கும் (கந்தளாயிற்கும்) தம்பலகாமத்திற்கும் இடையில் இரு ஊர்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாகும். இரண்டு ஊர்களுக்கும் இடையே 24 மைல் தூரம் அடர்ந்த காடு ஆகும். இந்தப் பெரும் வனத்தை ஊடறுத்து அமைவதுதான் இந்த ஒரே பாதையான சேனைவழிக்கல்வழி. பொதுவாக இது மாட்டு வண்டிப்பாதையாகவே அமைந்திருந்தது.



இரண்டு ஊர்களையும் இக்கானக நெடுஞ்சாலை இணைத்து நின்றதால் இரண்டு ஊர்களதும் அரச நிர்வாகம் இவ்வழியின் இரண்டு மருங்குகளையும் இரு ஊரவர்க்கும் பங்கு வீதம் அளந்து கொடுத்து சுமார் ஐந்து முழ அகலத்திற்கு மரம் செடி கொடிகளை வெட்டியழித்து துப்பரவு செய்யப்பணித்திருந்ததால் இந்தப் பெரும் வனத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய எட்டு முழத்திற்கும் (25 அடிவரை) அதிக அகலமான இப்பாதைவழியில் பயணிகள் அச்சமின்றிப் போகக்கூடியதாக இருந்தது.




காலத்திற்குக் காலம் வழியின் இருமருங்கும் ஐந்து முழ அகலம் என்று காடு வெட்டி துப்புரவு செய்திருந்தாலும் பாதையை ஒட்டி நின்ற பாலை, இலுப்பை போன்ற விருட்சங்களை விட்டு வைத்தும் இருந்தனர். எண்திசையும் கிளை விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிழல் தந்தவண்ணம் இம்மரங்கள் இருந்தன.



வழியில் இத்தகைய மரங்கள் இரண்டு ஒன்றாகி இருந்த இடத்தில் நிழல்போதுமானதாக இருந்ததால் ... குதிரைகளை ஓரமாகக் கட்டிவிட்டு அத்தனைபேரும் அமர்ந்து, கொண்டுவந்திருந்த புளிச்சாதத்தை சாப்பிட்டு சில கணங்கள் இருந்துவிட்டுப் புறப்பட்டனர்.



வேறெங்கும் நிற்காமல் சதுர்வேதமங்கலத்தை (கந்தளாய்) வந்தடைந்த உதயகுமரனையும், குதிரைப்படைவீரர்களையும் மகாநாட்டு நிர்வாகிகள் வரவேற்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விருந்தினர் விடுதியில் தங்கவைத்து, உடலில் படிந்திருந்த தூசியையும், வியர்வையையும் அகற்ற குளியலுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டு, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றனர்.



நாட்டின் நாலா புறமுமிருந்து கோட்டைத்தளபதிகள், படைவீரர்கள் என்று மட்டுமல்லாது மடாதிபதிகள், சமய அறிஞர்கள் வேதவிற்பன்னர்கள், யோகிகள், சமயப் பிரமுகர்கள், சைவப் பெருமக்கள் என்று திரள் திரளாய் வந்து சதுர்வேத மங்கலத்தை நிறைத்துக்கொண்டிருந்தனர். அரோகரா ஒலிகளும் ,ஓம் உச்சாடனங்களும் எங்கும் ஒலித்தவண்ணம் இருந்தன.

அன்று மதியத்திற்கு பின்னர் பொலன்னறுவையிலிருந்து கலிங்க விஜயவாகு மன்னர் நால்வகைச் சேனைகளும் புடைசூழ, வாத்திய கோஷங்கள் முழங்க, அமர்க்களமாக சதுர்வேதமங்கலம் வந்தடைந்தபோது, உதயகுமரனும், ஏனைய தளபதிகள், அதிகாரிகளுடன் சென்று வணக்கம் செலுத்தினான்.

அன்று மாலையே விழா ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால்... மன்னர் அதிகளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்காமல் ஒரு சில முக்கியமான கோட்டைகளின் தளபதிகளுடன் மட்டும் கலந்துபேசினார். அவர் உதயகுமரனின் முறை வந்தபோது, தம்பன் கோட்டையின் குறிப்புக்களைச் சொல்லி விபரங்கேட்டபோது, அவன் அசந்தேபோனான். இத்தனை தெளிவாக கோட்டையின் மூலைமுடுக்குகள், பாதாள அறைகள், களஞ்சிய சாலை... சிறைக்கூடம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிராரே... என்று வியந்தான். மறுகணம் இல்லையென்றால் பௌத்தர்களின் எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி செய்யமுடியுமா என்று கலிங்கவிஜயபாகு சக்கரவர்த்தியின் ஆட்சிவண்ணத்தை மெச்சவும் செய்தான்.




வேளையானதும் மேள தாள சீர்களுடன் அரசர் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இலங்கையிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தும் கூட பல பாகங்களிலிருந்தும் தவசிரேஷ்டர்கள், தத்துவ ஞானிகள், யோகிகள், வேதாகமப்பண்டிதர்கள், அரச பிரதிநிதிகள், தளபதிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் என்று வந்திருந்து மண்டபத்தை நிறைத்திருந்தவர்கள் மன்னரைக் கண்டதும் எழுந்து நின்று ஜயகோஷம் எழுப்பி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மன்னர் தமக்கான சிம்மாசனத்தில் அமர்ந்ததும் சபையும் அடங்கியது.



விழா ஏற்பாட்டாளர்கள், சம்பிரதாயபூர்வமாக, மன்னரை விழித்து, தலமை தாங்கி அம்மாநாட்டை ஆரம்பித்து வைக்குமாறு அவரிடம் பணிவாக வேண்டிக் கொண்டனர்.



கலிங்க விஜயபாகுச் சக்கரவர்த்தியும் எழுந்து, சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, குத்துவிளக்கேற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். ஆத்திசூடி பாடப்பட்டதும், மன்னர் மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் பேசத்தொடங்கினார்.



கலீரென கம்பீரமான குரலில் பேசத்தொடங்கினார் மன்னர். சபை மகுடியில் கட்டுண்ட நாகம்போல கவனம் திரும்பாமல் செவிமடுக்கலாயிற்று...
தொடர்ந்து ஒவ்வொருவராக முறையெடுத்துப் பேசலாயினர். சமயஅறிஞர்கள், யோகிகள், வேதவிற்பன்னர்கள் என்று தாங்கள் கடைப்பிடிக்கும் தெய்வக் கொள்கைகளை விளக்கி உரையாற்றலாயினர். எல்லோரது பேச்சும் மன்னர் குறிப்பிட்ட உபநிடதக் கொள்கைகளை அனுசரித்துப் போவதாகவே அமைந்தன. இவ்வாறாக ஆரம்பித்த வேதாகம மாநாடு மூன்று நாட்களாக இடம்பெற்றன. இடையிடையே சமயக் கருத்துக்களை விளக்கும் நாடகங்கள், நடனங்கள், தெருக்கூத்துக்கள், சங்கீதக்கச்சேரிகள் என்று நாளுக்கு நாள் நிகழ்ச்சிகளால் மாநாடுகளை கட்டிக் கொண்டிருந்தது.


உதயகுமரனுக்கு மனம் எதிலும் ஓடவில்லை. அவன் சிந்தனையெல்லாம் குடமுருட்டியாறு, வெண்மணற்பரப்பு, ரங்கநாயகி ஆகியவற்றிலேயே நிலைத்திருந்தது. எப்படியாவது மன்னருடன் பேசி அவளை மணம்முடிக்க அனுமதி பெறவேண்டும் என்ற உறுதி அவனுக்குள் எழலாயிற்று.



மாநாட்டு நிகழ்வுகள் களியாட்டங்களுடன் நிறைவு பெற்றன.... சகலரும் மாநாட்டைப் பற்றியும், அதை ஏற்பாடு செய்த மன்னரைப்பற்றியும் புகழ்ந்தபடியிருந்தனர். அரசரும் மறுதினமே ராஜதானி திரும்ப ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த கோட்டைத் தளபதிகள், அயல்நாட்டு பிரதிநிதிகள், பிரமுகர்கள் சக்கரவர்த்தியை வணங்கி சந்தித்து விடைபெற்று வணங்கிக் கொண்டு ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினார்கள்.


தன்பங்கிற்கு விடைபெற உதயகுமரன் அவசரப்படவில்லை. மன்னருடன் ஆறுதலாக ரங்கநாயகி பற்றி காதில் போட்டு எப்படியாவது காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடவேண்டும் என்பதில் அவன் முனைப்பாக இருந்தான்.




உதயகுமரனும் சிலவீரர்களும், இளஞ்செழியனும் வந்து அரசரை வணங்கி நின்றார்கள். அமர்ந்திருந்த அரசர் உப்பரிகைச்சாரளத்தின் பக்கமாக உதயகுமரனை அழைத்துச் சென்றார். அவர் அப்படிச் செய்தது உதயகுமரனின் வீரர்களுக்கு பெருமையாக இருந்தது. தங்கள் தளபதி சக்கரவர்த்திக்கு நெருங்கியவர் என்பதில் அவர்களுக்கு ஏதோ உயர்ந்த எண்ணம். உதயகுமரா....... தளபதி தலைநகர் வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. என்றார்.



உதயகுமரனுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது. அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது.




தொடரும்......


அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்





ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment