
இனி...
ஏதேது என்னை அரசனாக்கினாலும் ஆக்குவாய் போலிருக்கிறது.... நான் கோட்டைத் தளபதியா?... இந்தத் தவறான தகவலை யார் உனக்குத் தந்தது? நான் ஏற்கனவே என்னைப் பற்றிய விபரங்களை உனக்குக் கூறியிருக்கிறேனே.... நம்பவில்லையா?
நம்பியதால்தான் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் சாதாரண வீரராக இருந்தால் என் சந்தோஷத்துக்கு கரையேது? அப்பாதான் எனக்கு எடுத்துச் சொன்னது.... நீங்கள் கலிங்க விஜயவாகு சக்கரவர்த்தியின் பட்டத்து இராணியின் மூத்த சகோதரியின் புதல்வர்.. உதயகுமரன் .. கோட்டைப்புதிய தளபதி... அரச குலத்தினர்... இதையெல்லாம் நான் நம்பியவர் சொல்லவில்லை... எனது தந்தைதான் சொன்னார்...
அவள் கண்கள் கலங்கின.
ரங்கா அழாதே ... நான் சொன்னதை நம்பாமல் அப்பாவும் மகளும் துருவித் துருவி ஆராய்ந்திருக்கிறீர்கள்... நல்லதுதான் அதை ஒருபுறம் வைத்துவிட்டு உன்னோடு சில விடயங்களைப் பேசி நான் சில முடிவுகளை எடுக்கவேண்டும். உட்கார் அவள்
உட்காராமல் நின்றுகொண்டே அடம்பிடிப்பதைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டு, குரலில் போலியாக ஒரு கடுமையைக்காட்டி நான் தம்பன் கோட்டைத்தளபதி உத்தரவிடுகிறேன்... நீ வழமைபோல் இருக்கும் இடத்தில் போய் உட்கார்... என்றான். அவன் குரலில் கடுமை போலியானது என்று உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை. நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள், அவன் உத்தரவிற்குக் கட்டுப்பட்டாள்! ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
உதயகுமரன் அவ்விடத்தில் வந்தமர்ந்து சிறிது நேரம் ஆசையோடு அவளைப் பார்த்தான். அவள் தலைகுனிந்து கொண்டாள். அவன் ஒரு முறை தொண்டையைக் கனைத்து அடைப்பை அகற்றிவிட்டு கனிவு ததும்பும் குரலில்....ரங்கநாயகி நீ பாட்டுப்பாடி என்னை மகிழ்விப்பது மட்டும் தானா? உன் மனதில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாயா? என்று கேட்டான். பதிலேயில்லை... மௌனமாக இருந்தாள்.
என்னோடு கோபத்தில் இருப்பதால் நீ பேசமாட்டாய் அப்படித்தானே... சரி நான் பேசுகிறேன் நீ கேள்... ரங்கநாயகி ! நான் உன்னை ஏமாற்ற எண்ணியவனுமல்ல, எண்ணுபவனுமல்ல... இதை முதலில் நீ நம்பு...
எனக்கது தெரியாதா என்ன? அவள் மனதுக்குள் சொன்னாள்.
உண்மையில் உன் இனிய கானத்தைக்கேட்டுத்தான் உன்னோடு பேசவிரும்பினேன்.... பிறகு உன் கானத்தைவிட உன்னைப் பார்க்கலாமே என்று வந்து உன்னைச் சந்திக்கத் தொடங்கினேன். என்னையறியாமலே நான் ஒவ்வொரு மாலைப் பொழுதுக்கும் ஏங்கத் தொடங்கினேன். என்னையே நான் கேட்டுப்பார்த்தேன்... எது என்னை இங்கு நாளாந்தம் இழுத்துவந்து உன்காலடியில் சேர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்தேன்.... பாடலை விட, சிலைபோன்ற உடல் அதை நான் சேர வேண்டும்... அதற்குள் நடமாடும் உயிர்.... அதோடு நான் கலக்கவேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்று தெரிந்து கொண்டேன்... அதுமட்டுமல்ல இசை மீது எனக்கிருந்த ஆவலுக்கு நீ ஒரு வழிகாட்டி என்றும் ஆசான் என்றும் கருதினேன்.
வார்த்தைகளை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் அப்போதும் சிறுபிள்ளைபோல் குனிந்த தலை நிமிராமல் மண்ணைச் சுட்டுவிரலால் கிளறிக்கொண்டேயிருந்தாள்.
அரச குலத்தவர்கள் வேறு குலத்தில் பெண் கொள்ள முடியாது என்று அப்பா சொன்னார். அவள் குரல் தளம்பியது. தலையை நிமிர்த்தி ஆற்றுக்காகத் திரும்பியவள் ஒரு கையால் கன்னங்களில் வடிந்த கண்ணீரை மாறி மாறி துடைத்துக்கொண்டாள்.
நியதி அப்படித்தான்... நான் மறுக்கவில்லை. ஆனால் நாம் நியதிகளை மாற்றலாமல்லவா?
அவள் தலை அவன் பக்கம் வேகமாகத் திரும்பியது. அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு பளிச்சிட்டது.
உண்மைதான் நமக்கு வேண்டுமென்றால் நியதியை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்... மாற்றிக்கொள்வோம்.
அதெப்படி ...? அவளுக்கு ஒரு நம்பிக்கை உதயமானாலும், சந்தேகம் அதைத் திரைபோட்டு தடுக்கப்பார்த்தது.
வழிவரும்...! நான் ஒரு பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. ம்கூம் பயப்படாதே....... அதிக தூரமில்லை... ஒரு மூன்று நான்கு நாளாகும்... அதற்கு முன் உன்னிடம் சில வேண்டுகோள்...
என்ன? என்பதுபோல் அவனைப்பார்த்தாள்.
உனக்குத் தளபதி உதயகுமரனைப் பிடிக்குமா? சாதாரண வீரன் குமரனைப் பிடிக்குமா?
ஏன் தயக்கம் சொல்... உன்னைக் கரம்பிடிப்பவன் ஒரு சாதாரண வீரனாக இருந்தாற் போதுமா? இல்லை தளபதியாகத்தான் இருக்க வேண்டுமா? அவள் விழியில் வழிந்த நீரைத் துடைத்துவிடத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
இதுவரையில் எனக்குத் தளபதி யாரென்றே தெரியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படவே மாட்டான். எனக்குத் தெரிந்தவர் ஒருவர்தான்! இதோ இந்த மண்ணில் என்னோடு கூடஇருந்து பாடி மகிழ்ந்த அந்த கோட்டை வாலிபனைத்தான் என் மனதுக்குப் பிடிக்கும்
அப்படியென்றால் சில சமயம் நாம் வேறிடம் சென்று வாழ வேண்டிவரும்.. நம் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிவரும்... நம் சுற்றஞ் சூழலை மறக்க வேண்டிவரும் நீ ... தயாரா?
அவள் குழப்பமாகப் பார்த்தாள்.
அவசரமில்லை உனக்குச் சில நாள் அவகாசமிருக்கிறது. சிந்தித்துப்பார்.. நான் நாளை மறுநாள் குதிரைப்படையுடன் சதுர்வேதமங்கலம் போகிறேன்.. நான்மறை ஓதும் அந்தணர் வதியும் அந்த ஊரில் வேதாகம மகாநாடு ஒன்று நடக்கப்போகிறது. இந்து மத அறிஞர்களுக்கும் இந்து கலாசார நிபுணர்களுக்கும், யோகிகள் மடாதிபதிகளுக்கும், கோட்டை தளபதிகளுக்கும் இந்துமத கலாசார அறிஞர் பெருமக்கள் பலருக்கும், ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் மகாநாட்டிற்கு கலிங்க மன்னர் விஜயவாகு அவர்களே தலைமை தாங்குவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. எனவே நான் போகின்ற இந்தப் பயணத்தில் மன்னரைச் சந்திக்க நிறைய வாய்ப்புக் கிடைக்கும். நான் அவரைச் சந்தித்துப் பேசினால் நம் திருமணத்திற்கு சம்மதம் கிட்டவே
செய்யும் என்பது என் எதிர்பார்ப்பு. இதை உன்னிடம்சொல்லி விடைபெற்றுப்போகவே நான் ஓடி வந்தேன்.
செய்யும் என்பது என் எதிர்பார்ப்பு. இதை உன்னிடம்சொல்லி விடைபெற்றுப்போகவே நான் ஓடி வந்தேன்.
ஒரே மூச்சில் உணர்ச்சியோடு பேசிமுடித்தான். அவன் பேசிக்கொண்டு போகும்போது அவன் முகத்தில் ஓடிய உணர்ச்சி மாற்றங்களையும், வார்த்தைகளில் எதிரொலித்த நம்பிக்கையையும் கண்வாங்காமல் அவள் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். செவிகள் அவன் வார்த்தைகளுக்குக் கூர்மையாக இருந்தன., கண்கள் அவன் முகத்தை மொய்த்துக் கொண்டிருந்தன.
என்னை மறந்து விடமாட்டீர்களே?
என்னதான் நம்பிக்கை மனதில் ஊறினாலும் அவள் ஒருபெண்தானே?
என்னை இன்னுமா நம்பவில்லை? அவன் குரலில் தெரிந்த வேதனை அவளை உசுப்பியது.
இல்லை... உங்களை நம்பாமலில்லை... பரிபூரணமாக நம்புகிறேன்.அவசரமாக மறுத்தாள். என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்தானே... உயர நிற்கும் நீங்கள்...
பயப்படாதே... சங்கீதத்தில் இணைந்த எங்கள் உறவை யாராலும் பிரிக்கமுடியாது. தைரியமாக இரு... நான் நல்ல சேதியோடு திரும்பி வந்து உன்னைச் சந்திக்கிறேன்.

விரைந்து குதிரையில் ஏறியவன், அவளைப்பார்த்து புன்னகைத்துவிட்டு குதிரையை திருப்பிக்கொண்டு அதை ஓடவிட்டான்.
அவன் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தவள் மனது மகிழ்சியால் நிறைந்திருந்தது. அவனது மனக்கருத்தை அவன் சொல்லக்கேட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மெல்ல இரு கைகளையும் மார்பின்மேல் வைத்து அழுத்தி கண்களை மூடி அந்தமகிழ்ச்சியை ஆத்மார்த்தமாக அனுபவித்துக்கொண்டாள்.
திடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.
தொடரும்.....
அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்
{ படங்கள் இணையத்தில் இருந்து }
No comments:
Post a Comment