Monday, September 06, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 1


தம்பலகாமம் கோட்டை சில நாட்களின் பின், அப்போதுதான் மீள உயிர் பெற்றதுபோல் செயற்படத் தொடங்கியிருந்தது. வழமை யான முறைக் காவல்கள் புதுவேகத்துடன் ஆரம்பமாகியிருந்தன. போரிலே தளபதி காயப்பட்டுப் படுக்கையில் கிடந்த நாள் முதற்கொண்டு சோர்வாகிப் போனது கோட்டை அலுவல்கள், தொடர்ந்து அரசர் கலிங்கத்து (மாகன்)விஜயவாகு, தளபதியை காயங்கள் சுகமாகி உடம்பு தேறுதலாகி வரும்வரை ஓய்வில் அனுப்பத் தீர்மானித்த செய்தி கோட்டைக்குத் தெரியப்படுத்தப்பட்ட போது, ஒரு ஸ்தம்பித நிலையையே கோட்டை கண்டது.

தளபதி கோட்டையை விட்டு வெளியேறிய நாளே அது சோகம் என்பதை முதலில் கண்ட நாளாக இருக்கவேண்டும். கண்கலங்காத வீரர்களில்லை. சமையல்கட்டு உதவியாளர் முதல் உபதளபதிகள் வரை அழுத கண்களுடன், கனத்த இதயத்துடன் அவரை மீண்டும் வரவேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன் அனுப்பிவைத்தனர். அவரும் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டாலும் வருவேனா? என்ற சிந்தனையுடனேயே பிரிந்து சென்றார்.


அவரைப் பொறுத்தவரை, அவர் தோளில் அரசர் சுமத்திய பணியை திருப்தியாகவே இதுவரை பூர்த்தி செய்திருக்கிறார். எதிரிகளின் அச்சுறுத்தல் திருகோணமலைப் பிராந்தியத்துக்கு ஒரு சகாப்தம் வரையிலாவது தலை தூக்காதபடிக்கு அவர் செய்து இருக்கிறார். அந்த வகையில் அரசருக்கு ஒரு நிம்மதியைத் தந்ததில் அவருக்குப் பெரும் ஆறுதல்.


ஓய்வை அவர் நாடியதில்லை. ஆனாலும் மன்னர் அவரை விடுவதாயில்லை. அடுத்த தளபதியாக யாரை நியமிக்கலாம் என்று அவரிடமே ஆலோசனை கேட்டபோதுதான் மறுத்தாலும் மன்னரே நேரில் வந்து தூக்கிக்கொண்டு போனாலும்போவார் போலிருக்கிறது என்று தனக்குள் எண்ணி, மன்னர் தன்மேல் கொண்டுள்ள பாசம் குறித்துப் பெருமிதமும் கொண்டார்.


தனக்குப் பின்னர் கோட்டைக்குரிய தளபதியை அவர் மன்னரிடம் சிபாரிசு செய்து செய்தி அனுப்பினார். அவரைப் பொறுத்த வரை அவன் ஒரு வீரன். சிறு வயதுக்குள்ளேயே களம் பல கண்ட அனுபவசாலி, மன்னருக்கும் உறவுமுறை. தனக்குப்பின்னர் அந்தப் பிராந்தியமும், அமைந்துள்ள கோட்டைகளும் பாதுகாக்கப்படுவதில் எந்தக் குறைபாடும் வராது என்பதில் அவருக்கு உறுதியிருந்தது. இதனாலேயே அவருக்குத் தான் திரும்பி வரவேண்டிய தேவை எழாது என்ற நிலைப்பாடும், வருவேனா? என்ற கேள்வியும் ஏற்பட்டது.


தன் சொந்த மண்ணாக எண்ணிய தம்பலகாமம் பசுஞ்சோலைக் கிராமத்தையும், தம் வீரத்தால் உரமூட்டிய அந்த கோட்டையையும் விட்டு அவர் கனத்த இதயத்தோடுதான் நீங்கினார். அதற்குப் பிறகு சோர்வு, இழப்பு, எதிர்பார்ப்பு, இப்படிப் பல உணர்வுப் போராட்டங்கள் மனதில் எழ, எந்திரம் போன்று கடமை பண்ணிய போர்வீரர்கள் இப்போது புத்தூக்கம் பெற்று செயற்படத் தொடங்கியிருந்தார்கள்.


புதிய தளபதி வந்தார். ஒரு இளம் தளபதியாக இருந்தார். எளிமையும், கண்டிப்பும், உழைப்பும் அவனில் தெரிந்தது. கோட்டைப் பாதுகாப்பில் எடுத்த எடுப்பிலே செய்த சிறு சிறு மாற்றங்களைக் கண்டு ஆரம்பத்தில் அலட்டிக் கொள்ளாதவர்கள் நாளாக அதனால் கோட்டை பலம் பெற்றது போன்ற உணர்வைப் பெறவே புதியவனில் புது அக்கறை கொள்ளத் தலைப்பட்டனர்.


கோட்டைக்குள் முறைக்காவல் உசாராக நடந்தது. காவல் பணி மாறும்போது எழும் கட்டளை ஒலிகளால் கோட்டை உயிர் கொண்டது. நாளாந்தப்பணிகள் உசாராக நடக்கத்தொடங்கின.



உச்சிமீது நின்று நர்த்தனமாடிக் களைத்துப்போன சூரியன் ஓய்வெடுக்கவென்று மேற்கு நோக்கி நகரத்தொடங்கி சுமார் நான்கரை நாளிகையாகியிருந்தது. வங்கப்பெருங்கடலில் தவழ்ந்து சூட்டைத் தணித்துக்கொண்ட கொண்டல் காற்று தம்பலகாமத்தின் வடகிழக்கு மூலையால் ஊருக்குள் புகுந்து குளிர்மை பரவச்செய்துகொண்டு இருந்தது.


மாலைப்பொழுதாவது குறித்து மகிழ்ந்தவைபோல பறவை இனங்கள் குடில்தேடி கிளம்பிக் கொண்டிருந்தன. அவைகளின் இனிய நாதத்தைக் கூட தாண்டி ஒரு இளம் குரல் குயிலோடு போட்டி போடக்கூடிய இனிமையோடு பாடும் குரல் கேட்டது. அந்த அந்திசாயும் வேளையில் தம்பலகாமம் தெற்கில் ஊருக்கு அருகாக சலசலத்துப் பாயும் குடமுருட்டியாற்றின் வெண்மணல் பரப்பில் ஆற்றோரம் அமர்ந்திருந்து ஒரு யுவதி பாடிக்கொண்டிருந்தாள்.


அவள் கைகளிரண்டையும் பின்னால் ஊன்றியிருந்தாள். கண்கள் மூடியிருந்தன. கால்கள் இரண்டும் ஆற்று நீரால் கணுக்கால் வரை நீராட்டப்பட்டுக்கொண்டிருந்தன. நிமிர்ந்திருந்த நெஞ்சத்து எழில்களின் திமிர்ப்பு அவளை சுமார் பதினேழு பதினெட்டு வயதினளாகக் காட்டியது. தன்னை மறந்து தான் மீட்டும் இராகம் சரிதானா என்று தானே எடைபோட்டுப் பார்ப்பவளாக அவள் தெரிந்தாள். அவளது இராக ஆலாபனையைக் கேட்டு எப்போதும்போல் அப்போதும் களிகொண்ட குடமுருட்டி ஆறு களுக் களுக் கென்று தனது பாராட்டைச் சொல்லி ஓடிக்கொண்டேயிருந்தது.

தொடரும்......





ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment