
அவர் படுக்கையை விட்டெழ ரொம்பநாளாகும் என்றார்களே பிரபு
உண்மைதான்.... ஆனாலும் தளபதி தம்பன் நினைத்தால் எமனையே புறமுதுகிட வைத்து விடுவார் என்பதல்லவா பிரபலம், அவனை ஒருமுறை உற்றுப்பார்த்தவர் தொடர்ந்தார்.
அவருக்குப் பரிபூரண சுகம் இல்லைதான். ஆனாலும் அங்குள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் அவர் உடல்நிலைபற்றி மலையாளத்தில் நல்ல அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள்... அதைக்கேட்ட இவர்... எனக்கிப்போ பரவாயில்லை என்றும் கலம் ஏறி வந்துவிட்டார் போலிருக்கிறது..... நானும் அவரைக் கண்டபிறகுதான் உண்மையை அறிந்து கொள்ளமுடியும்.
தளபதி குணமாகி வந்து விட்டார் என்ற சேதி உறைத்ததும் உதயகுமரனின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்து மறைவதை மன்னர் அவதானித்தாரோ இல்லையோ.... அவர் முகத்தில் இள நகை படர்ந்தது.
தளபதி தலைநகர் திரும்பியதற்கென்ன அங்கேயே அவருக்கு நிறைய அலுவல்கள் காத்திருக்pன்றன. தம்பன் கோட்டைப் பொறுப்பைவிட மேலான பொறுப்புக்கள் அவருக்கு இருக்கப் போகின்றன. தம்பன் கோட்டை தொடர்ந்தும் உன் பொறுப்பில்தான் இருக்கும். என்றார்... அவர் சிரிப்பு அகன்றது. அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க முனைவது அவருக்கு புரிந்தது... ஆனாலும் அவனைப்பேச அனுமதிப்பதாகக் காணோம்.
சரி சரி நீ எப்போது கிளம்பப்போகிறாய்? என்று கேட்டார்.
நாளைய பொழுது புலர்ந்து வரும் வேளையில் புறப்பட ஆயத்தம் பண்ணச்சொல்லி கட்டளையிட்டிருக்கிறேன் பிரபு
நல்லது நானும் நாளையே கிளம்புகிறேன். அதோ இரதத்தையும் தயார்படுத்துகிறார்கள். என்று சுட்டிக்காட்டினார். தங்கமாய் மின்னிய அவரது இரதம் கழுவப்பட்டுக்கொண்டிருந்தது. எனக்கு மட்டுமல்ல, உனக்கும் ஓய்வு வேண்டும். விடைபெற்றுக் கொள். என்று கூறிவிட்டு உரையாடல் முடிந்து விட்டது என்பது போல் நின்று கொண்டிருந்த இடத்தைவிட்டு ஆசனத்திற்காக நகர முற்பட்டார் சக்கரவர்த்தி.
உதயகுமரனுக்கோ முகம் வாடிவிட்டது. இனி மன்னனுடன் பேசமுடியாது. வந்தவேலை நிறைவேறப்போவதுமில்லை. ரங்கநாயகியிடம் நான் என்ன சொல்வேனோ?... இதை நினைக்கும்போதே அவன் முகம் கறுத்து வாடியது.

வேறு வழிதெரியாது இயந்திரம்போல் வெளியேற, திரும்பி அவன் ஒரு சில அடிகளே வைத்திருப்பான்.

வேறு வழிதெரியாது இயந்திரம்போல் வெளியேற, திரும்பி அவன் ஒரு சில அடிகளே வைத்திருப்பான்.
உதயகுமரா...! என்று அழைத்தார். அவன் இரண்டே எட்டில் அவர் அருகில் நின்றான். நீ வாலிபன், துடிப்புக்கள் அதிகமான பருவம், அதனால்தான் நான் சொல்ல வேண்டியிருக்கின்றது. நீ அரசகுலத்தினன் என்பதையோ, அரசகுலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது என்பதையோ மறந்துவிடாதே... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள்... நீ சிந்தித்துப்பார்.... மக்கள்.... நாடு... இதை முன்நிறுத்தியே முடிவு எடுக்கவேண்டியவர்கள் அரசகுலத்தினர். நீ முன்னேற்றம் அடையவேண்டும், பேர் புகழ் ஈட்டவேண்டும், என்பதுதான் என்னுடையதும் உன் அன்னை இரத்தினாவதி தேவியினதும், உன் சிற்றன்னையினதும் எதிர்பார்ப்பு....எங்கள் எதிர்பார்ப்பைச், சிதைத்துவிடாதே... அரசகுலத்தவருக்கு சொந்த விருப்பு வெறுப்பு இருக்கமுடியாது....இருக்கவும் கூடாது...
அரசர் பேசப் பேச சம்மட்டியால் தலையில் அடிப்பது போல் இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. என்னைப்பற்றித் தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது.!
நீ போகலாம்... என்று உள்அறைக்குச் சென்றுவிட்டார் மன்னர். அவனால் ஓரடி கூட எடுத்து வைப்பது சிரமமாக இருந்தது. தம்பன் கோட்டையில் அவன் கட்டியது வெறும் மணல் கோட்டைதானா? மன்னன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் நாராசம் போல் பாய்ந்தன. அப்படியானால் ரங்கநாயகி...? அவளை மறந்துவிடவேண்டியதுதானா?
தளபதி தலைநகர் வந்துவிட்டார் என்றதுமே அவனுக்கு ஒரு வகையில் ஏக்கம் பிடித்துவிட்டது. அப்படியென்றால் தம்பரிடம் கோட்டையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு தலைநகருக்கு கிளம்பவேண்டியிருக்குமே... அப்படியானால் ரங்கநாயகியை எப்படி சந்திப்பது? என்ற ஏக்கம்அவனுக்கு.... மறுகணமே ஒரு நப்பாசையும் உதித்தது. தம்பரிடம் கோட்டையை ஒப்படைத்துவிட்டு பொறுப்பகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ரங்கநாயகியுடன் இந்தியா கிளம்பிவிடலாமா? என்று ஆசை கிளம்ப, மன்னரிடமே அதை சொல்லிவிடுவது என்று சிந்திக்க தலைப்பட்டான்.
ஆனாலும் எந்த சிந்தனைகளும், திட்டங்களும் மன்னரின் முன்னிலையில் எடுபடவேயில்லை.... மாறாக அரச குலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள் எங்களை ஏமாற்றிவிடாதே, என்ற மன்னரது வார்த்தைத் தொடர்கள் அவன் நாடி நரம்புகளை எல்லாம் ஒடுங்கச் செய்துவிட்டன.
அதுமட்டுமல்ல மன்னரது ஆற்றல்மீது அவனுக்கேற்பட்டுள்ள மலைப்பும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. என் ஒவ்வொரு அசைவும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவரை விஞ்சி இந்த இராச்சியத்திலும் சரி, நாட்டிலும் சரி எதுவும் நடந்துவிடமுடியாது என்ற எண்ணம், அவனுக்கு அரசர் மீது இருந்த மதிப்பைப் பலமடங்கு உயர்த்தி விட்டது.
எனினும் தன் வாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது அவனுக்குக் கோபத்தைத் தந்தது.... தன்னால் நினைத்தபடி எதையும் செய்துவிடமுடியாது என்ற எண்ணம் தலைதூக்கியபோது ஆத்திரமல்ல இயலாமை அவனை மேற்கொண்டது.
நடைப்பிணமாக வீரர்களுடன் விருந்தினர் விடுதிக்குத் திரும்பினான் உதயகுமரன். அவன் மனதில் உற்சாகம் அற்றே போய்விட்டது.தான் எடுக்கப்போகும் முடிவால் யார் யாருக்கு என்ன நடக்கக் கூடும் என்று சிந்தித்துப்பார்த்தே களைத்துப்போனான். வழியில் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் அவனைக் குழப்பவில்லை. அவன் குதிரைகூட துள்ளல் நடையில்தான் போய்க் கொண்டிருந்தது. எஜமானைக் குழப்ப அதற்கும் இஸ்டம் இருக்கவில்லை.
அன்று பூரணை முழுநிலவு நாள்! ஏற்கனவே அடிவானில் தங்கத்தாம்பாளம் போல் சந்திரன் அடிவானில் உதயமாகிக் கொண்டிருந்தான்.