ஆரம்பத்தில் கந்தளாய்க்குளம் அமைக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து நீரைப்பெறுவதற்கான வழி அமைக்கப்பட்ட பிரதேசமே அம்மான் என் கண் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. பிரமாண்டமான அந்தக் குளக்கட்டின் குறிப்பட்ட பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது எனது நினைவுச்சக்கரம் மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்ந்தது.
எனது சிறுபிராயத்தில் அப்பப்பா ( அமரர் தம்பலகாமம் .க.வேலாயுதம் ) எனக்குச் சொன்ன கதை இது. இதனுடைய வரலாற்றாதாரங்கள் பற்றி எதுவும் தீர்மானமாகத் தெரியவில்லை. இருந்தும் கந்தளாய் ,தம்பலகாமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கூறப்படும் இந்தக் கர்ணபரம்பரைக் கதையினை இன்றும் நீங்கள் கேட்டறியலாம். திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன் அதனைச் சூழ இருந்த வயல் நிலங்களைப் பராமரிக்கும் பொருட்டு கந்தளாய்க் குளத்திருப்பணிகளைச் செய்தான். இனி அந்தக் கதை...........
(அம்மான் கண் என்றழைக்கப்படும் பிரதேசம்)
அன்று சதுர்வேத மங்களாபுரி (இன்றைய கந்தளாய்) விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கு புதிதாகநிர்மானிக்கப்பட்ட பெருங்குளத்தினைச் சுற்றி மக்ககள் கூட்டம் நிறைந்திருந்தது. சோழகங்கன் என்று புகழப்படும் குளக்கோட்டு மன்னனும், அவனது பரிவாரங்களும் அவர்களுக்கென பிரத்தியேகமாகஅமைக்கப்பட்டிருந்த மேடைகளில் வீற்றிருக்க வேதியர்களால் மாபெரும் யாகத்துக்கான ஏற்பாடுகள்மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
இத்தனை வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இந்நிகழ்வில் கூடியிருந்தவர்கள் முகங்களில் வழமைக்குமாறான பயத்துடன் கூடிய படபடப்பும், சோகமும் நிறைந்திருந்தது. ஆம் அந்த யாகம் நரபலிகொடுப்பதற்காக நிகழ்த்தப்படுகிறது. காரணம் இதுதான். கந்தளாய்க் குளத்தினைக் கட்டிமுடிக்கமுடியாதபடி பலமுறை அணை உடைப்பெடுத்துக் கொண்டிருந்தது. அதற்கான காரணத்தைக் கண்டறியவிழைந்த அரண்மனை நிமித்திகனும் , வேதியரும் அது அரசனின் முற்பிறப்பின் பழி எனவும் அதனைநிவர்த்திக்க அரசகுலத்து மூத்த மகனை நரபலி கொடுக்கவேண்டுமென தீர்மானமாகவும் ,முடிவாகவும்கூறி இருந்தனர். இப்போது அதற்காகத்தான் இந்த யாகம் வளர்க்கப்படுகிறது. அதுவே விழாக்களின்இயல்புக்கு மாறான அமைதி நிலவக் காரணமாக அமைந்திருந்தது.
சிறிது நேரத்தில் மன்னன் முதற்கொண்டு மற்றையவர் அனைவரும் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு இருகைகளாலும் மண் அள்ளிக் குழிக்குள் போட்டனர். முதலில் விளையாட்டாக நினைத்த பாலகனுக்கு நடக்க இருக்கும் விபரீதம் விளங்கியிருக்கவேண்டும். பயங்கலந்த பீதியுடன் தனது அம்மானை (அரசனை -குழந்தையின் தாய்மாமனை) நோக்கி தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடியது குழந்தை. குழந்தையதும் மக்களதும் அழுகை, ஓலம் ,கதறல்களுக்கு நடுவில் மண்போடும் படலம் தொடர்ந்தது. இறுதியில் பாலகனின் கண்ணுக்குள்ளும் மண்விழுந்தது.
'அம்மான் என் கண் ' என்றலறியது குழந்தை.
கூடியிருந்த மக்களின் அழுகையும் வானைப்பிளந்தது. இறுதியில் எங்கும் நிசப்தம்.குழி முற்றாக மூடப்பட்டுவிட்டது. நீண்ட நேரத்தின் பின் மக்கள் கூட்டமும் ,மன்னரும் அவரது பரிவாரங்களும் துயரத்தோடு இடம்விட்டகன்றனர். அணைக்கட்டும் , நீர்திறந்துவிடும் ஓடையின் இறுதிப்பணிகளும் முடிந்த பின் வேலையாட்களும் விலகிச் சென்றனர். நிகழ்துபோன கொடுமையின் துயரம் தாங்காத சூரியனும் மலைமுகடுகளுக்குள் மறைந்துபோனான்.
புதிதாக அமைக்கப்பட்ட ஓடையில் சலசலத்தோடும் குளத்துநீர் மட்டும் 'அம்மான் என் கண்' என தொடர்ந்தோலமிட்டுக் கொண்டிருந்தது. இதுதான் அப்பப்பா எனக்குச் சொன்ன கதை. கேட்டுப் பலவருடமான பின்னும், கர்ணபரம்பரைக்கதை எனத் தெரிந்திருந்தும் நெஞ்சின் ஒரு மூலையில் துயரத்தோடு நிலைத்திருக்கிறது இந்தக்கதை.
சில ஊர்ப் பெயர்கள் காரணப்பெயராகவும்; கர்ணபரம்பரைக் கதையை ஒட்டிய பெயராகவும் அமைவது
ReplyDeleteஇயல்பு. ஆனால் இந்த ஊருக்கு அமைந்த பெயர்...சிந்தையில் வேதனையைத் தருகிறது.
அன்று நம் நாட்டு நன்மைக்கு மன்னன் தன் பிள்ளையைப் பலி கொடுத்தான்; இன்று நம் நவீன மன்னர்கள் தம் பிள்ளைகள் நன்மைக்கு நம் நாட்டைப் பலி கொடுக்கிறார்கள்.
என் தந்தை தாயார்;தங்கள் மாமன்மாரை.."அம்மான்" என அழைத்ததை ;நான் கேட்டுள்ளேன்.
மிக சுவையான விடயங்கள்.படங்கள் பதிவுக்கு மிக்க நன்றி!
ஒற்றைப் பனைப் படம் நன்றாக உள்ளது.
ஜீவன் அண்ணா! மிக நீண்ட நாட்களின் பின்னர் தங்களது வலைப்பதிவிற்கு வருகின்றேன்... கடந்த 09 மாத காலமாக நேரமின்மையால் வலைப்பதிவை விட்டு விலகி இருந்தேன்.. உங்களது இந்தப் பதிவினைப் படிக்கையில் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது..
ReplyDeleteநினைவு மீட்டல் கலந்த தங்களின் வரலாற்றுப் பதிவு அருமை...
அண்ணா, இது கதை அல்ல , மனதை நெகிழ வைத்த கண்ணீர் காவியம்.
ReplyDeleteஇதை வாசித்ததும் எனது கண்களில் கண்ணீர் மல்கியதை நான் மறைக்க விரும்பவில்லை....
ஏற்கனவே அறிந்திருந்த கதையானாலும் உங்களது நடையில் இதயத்தை கனக்கச்செய்கிறது மீண்டும்...!!
ReplyDeleteஎனக்கும் அம்மம்மா இந்தக் கதை சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteஅம்மான் கண் ..ஆனால் இது ஊர் கூடி செய்த நரபலி என்று சொல்லியிருக்கிறீர்கள்.
எனக்கு சொல்லப்பட்ட கதை இன்னொரு விதமான வடிவம்.
அதாவது தங்கையின் மகன் தான் அரசாளும் அடுத்த வாரிசு என்பதால் அந்தப் பாலகன்
தான் அரசாளும் உரிமை கொண்டவர் என்றும் , அரசனாக தான் இருக்க வேண்டுமென்று
ஆசைப்பட்ட மாமன் மருமகனை ஏமாற்றி கூட்டிச் சென்று அந்தக் குளத்தின் நடுவில்
பாலகனை நிறுத்தி நான் திரும்பி வரும் வரை இந்த இடத்தை விட்டு நகராதே என்று
விட்டு வேலையாட்களை விட்டு அந்த பாலகனைச் சுற்றி கற்களால் சமாதி கட்டினான்
என்றும்..மாமன் சொல்படி நின்ற இடத்தில் அசையாமல் பாலகன் மாமனார் போவதைப்
பார்த்துக் கொண்டு நின்றான் எனவும் .கண்ணுக்குக் கிட்ட கல் வைத்த போது
மாமனாரைக் காணாமல் பாலகன் அம்மான் கண் , அம்மான் கண் என்று அழுது ஒண்டு அந்த
சமாதியில் உயிரோடு வைத்துக் கட்டப்பட்டான் என்றும் அவனுடைய அழுகையை உள்
வாங்கிய குளத்து நீர் அந்த சமாதியில் மோதும் போதெல்லாம் "அம்மான் கண் அம்மான்
கண்" என்று ஓலமிடுவது போல் சத்தமாக இருப்பதை உணரமுடியுமென்றும் சொன்னார்கள்...!
ஒரு கதை எத்தனை விதமாக திரிபு பட்டிருக்கிறது என்று பாருங்களேன். ..
அன்புடன்
சுவாதி
கதைகள் திரிந்து போய் மாறுபட்டிருந்தாலும் அந்தப்பாலகனின் சரித்திரம் அன்றோடு முடிந்துவிட்டதுதான் பெரிய பரிதாபகரமான அன்றைய செயல்பாடு.நாமும் தலை குனிய வேண்டிய ஒன்றுதான்.
Deleteகதைகள் திரிந்து போய் மாறுபட்டிருந்தாலும் அந்தப்பாலகனின் சரித்திரம் அன்றோடு முடிந்துவிட்டதுதான் பெரிய பரிதாபகரமான அன்றைய செயல்பாடு.நாமும் தலை குனிய வேண்டிய ஒன்றுதான்.
ReplyDeleteமிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.
ReplyDelete