






1990இல் மீண்டும் ஊர்திரும்பியபோது, சொந்த ஊரில் 6000 பேரைக்கொண்டு அமைக்கப்பட்ட அகதிமுகாமாக மகாவித்தியாலயம் மாறியது வாழ்வில் மறக்கமுடியாத கொடுமை.
தொடர்கிறது....
90 இன் இறுதிப்பகுதியில் உயிர்ப்பயம் காரணமாக என்னுடன் எனது கல்விக்கான தேடலும் திருகோணமலை நோக்கி இடம்பெயர்ந்தது.
கிராமத்தில் இருந்து வந்த என்னை நகரத்துக்கேயுரிய பல ஆச்சரியங்களோடு அரவணைத்துக்கொண்டது கோணேஸ்வரா வித்தியாலயம். உறவுகளைப்பிரிந்து வந்துபடித்த எனக்கு சில நாட்களுக்குள்ளாகவே ஒருகுடும்பத்தின் அரவணைப்பைத் தந்தது அந்தப் பாடசாலை.அப்போது ஒருசுவர் இடைவெளியில் சகோதரப் பாடசாலையாக இந்துக்கல்லூரி இயங்கிக்கொண்டிருந்தது.
வாழ்வின் சுமைகள் தெரியாத வயதின் மிகச் சுறுசுறுப்பான காலப்பகுதியது. மாவட்டரீதியான போட்டிப் பரீட்சைகள் , தமிழ்த்தினப்போட்டி , விளையாட்டுப்போட்டிகள் , BAND இசை நிகழ்ச்சிகள் , சாரணர் அமைப்பு , கலை ,இலக்கிய ,சமய நிகழ்வுகள் எனப்பலதரப்பட்ட வழிகளூக்கூடாக எங்களைப் பண்படுத்தியது எமது பாடசாலை.
1993 ஆம் ஆண்டு எமது பாடசாலையும், சகோதரப் பாடசாலையான இந்துக்கல்லூரியும் இணைந்து இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி எனும் பெயரில் தேசியப்பாடசாலையானது. இதன்மூலம் திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது தேசிய பாடசாலையாக எமது பாடசாலை தரமுயர்ந்தது.
கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் வாழ்வின் பலபாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது இங்குதான். திருகோணமலை வாழ்த்தமிழர்களின் வாழ்வியல், சமயவிடையங்களுக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கியதோடல்லாமல் நிறைய சாதனையாளர்களையும் சமூகத்துக்குத் தந்தது இந்தக் கல்விநிறுவனம்.
கல்வி, விளையாட்டு ,கலைவிழாக்கள் ,சமயநிகழ்வுகள் மற்றும் பல கல்விசாரா நிகழ்வுகளில் சிறப்புறச் செயற்பட்ட இக் கல்விக்கூடத்தின் வரலாறு 1897 இல் ஆரம்பிக்கிறது. திருகோணமலையில் வாழ்ந்த சில இந்துப்பெரியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைகள் இந்து தமிழ் ஆண்கள் பாடசாலை, இந்து ஆங்கில ஆண்கள் பாடசாலை என இருபிரிவுகளாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது.
1925 இல் இருபாடசாலைகளும் இராமகிருஷ்ண சங்கத்துக்கு கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் துரிதவளர்ச்சியடைந்தது.
அதிபர் ,ஆசிரியர்களது அயராத உழைப்பால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளில் பல இடர்பாடுகளையும் , சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்தும் மாவட்டத்தின் முன்னணிக் கல்வி நிறுவனமாகச் செயற்பட்டுவருகிறது எமதுபாடசாலை.
தேக்கிவைத்திருக்கும் ஞாபகங்கள் அனைத்தையும் எழுத்துருவாக்க முடியாவிட்டாலும், வருடங்கள் பலகடந்து படித்த பாடசாலையின் நினைவுகளை மீட்டுப்பார்க்கையில் சிலிர்ப்பேற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
த.ஜீவராஜ்