Thursday, September 03, 2009

கவிச் சக்கரவர்த்தி நிகழ்த்திய ருசிகர விளக்க உரை!


நான்காண்டு கற்றும் வகுப்பில் சித்தியெய்தாமல் வறுமையின் தீவிரத்தால் கற்றலை நிறுத்தியவன், வாலிபனாகித் திருமணம் செய்துகொண்ட பின் காட்டில் சென்று விறகுவெட்டிச் சுமந்து வந்து விற்று, அவனும் மனைவியும் மிகக் கஷ்டமாகச் சீவித்து வந்தனர்.

அவன் மனைவி கல்வி கற்காவிட்டாலும் கேட்டல் என்ற முறையில் கற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கேட்டு கொஞ்சம் தன் அறிவை விசாலமாக்கிக் கொண்டாள். அவளுக்குக் கணவன் செய்யும், கால் வயிறு உணவுகூட உண்ணப் போதாத விறகு வெட்டும் தொழில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

வியர்வை சிந்தாமல், உடை கசங்காமல் அரச சபையில் பாட்டுப் பாடிப் புலவர்கள் அதிகமான பொருள் பெற்றுச் செல்வதாக அறிந்தாள். அப்படித்தான் நாமும் பொருள் பெறவேண்டும் என்று எண்ணிய அவள் விறகு வெட்டக் காட்டுக்குப் போகாமல் சோழ அரசன்மீது பாட்டுப்பாடிப் பெரும் பொருள் பெற்று வருமாறு கணவனிடம் தினமும் சொல்லி வந்தாள்.

நன்றாகக் கற்காத நான் எப்படி பாட்டு எழுதுவது என்று தோன்றாமல் அவன் பைத்தியக்காரன் போல் எழுதுகோலும் ஓலையும் கொண்டு அங்கு மிங்கும் திரிந்தான். அங்கோர் இடத்தில் நாலைந்து பிள்ளைகள் கூடி இருந்து ஒரு பாவைப் பிள்ளையை நடுவில் வளர்த்தி அதன் வாயில் மண்போட்டு மண் உண்ணி மாப்பிள்ளையே என்று பாடிக்கொண்டிருந்தனர்.

அதைக் கண்ட அவன் நம் பாடல் அமைப்புக்கு இதைத் தொடக்கமாகக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு போய் ஓலையில் மண்ணுண்ணி மாப்பிள்ளையே என்று எழுதி பலமுறை படித்துப் பார்த்துக் கொண்டான். விறகுவெட்டி அப்பால் சென்றான். அங்கொரு காகம் விடாமல் கத்திக் கொண்டிருந்தது. குயில் ஒன்றும் குக் கூ என்று கூவியது. காவிறையே, கூவிறையே என்று இந்தப் புதுக் கவிகளுடன் ஏட்டில் எழுதிக் கொண்டான்.

அப்பால் ஒரு கோயில் இருந்தது. இவன் கோயிலடிக்குச் சென்றபோது ஒரு பெரிய பெருச்சாளி ஓடிக் கோயிலுக்குள் புகுந்தது. அதைக் கண்ட இவன், எங்கப்பா எவ்வளவு பெரியது என்று எண்ணியவன், இதை எப்படி எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு உங்கப்பன் கோயில் பெருச்சாளி என்று ஏட்டில் எழுதிக் கொண்டான்.

அடுத்து இருவர் பேசி வாய்த்தர்க்கமிட்டுக் கொண்டிருந்தனர். இவன் அவ்விடம் சென்றபோது, கன்னாபின்னா என்று பேசிக் கொண்டிராதே என்று ஒருவன், மற்றவனை அதட்டினான். அதையும் கன்னா பின்னா என்று எழுதிக் கொண்டு கவி இவ்வளவு போதும் என்று விறகுவெட்டி வீடு திரும்பித் தான் எழுதிவந்த கவிதையை மனைவிக்குப் பின்வருமாறு படித்துக் காட்டினான்.

மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே, கூவிறையே
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா

என்று கவிதையை வாசித்து முடித்தான். பாட்டு நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் கவிதை முடிந்த மாதிரியும் தெரியவில்லை. சோழ அரசனைப் பற்றி ஒரு குறிப்புக்கூட இல்லையே இதற்கு என்ன செய்யலாம் என்று அவன் மனைவி நெடு நேரம் யோசித்து தென்னா சோழரங்கப் பெருமானே என்று இறுதியில் எழுதச் செய்து பாடலை முடிவுறச் செய்தாள். தன்னுடைய கற்பனையும் பாடலில் இடம்பெற்றதை இட்டு அவளுக்கு கொள்ளை மகிழ்ச்சி.

மறுநாள் தான் இயற்றிய பாடலை அரச சபைக்குக் கொண்டுபோக முயன்றபோதுதான் புதுக் கவிஞனுக்கு உதறல் எடுத்தது. ஆயினும் பெண்டாட்டி கூறிய தைரியத்தால் கவிதை ஓலையையும் கொண்டு சமாளித்துக் கொண்டு அரச சபைக்குள் வந்து விட்டான். சோழ மன்னன் சிங்காசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அமைச்சர்கள் அவரவர்க்குரிய இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். சேனாதிபதிகள், அதிகாரிகள் என்று சபை நிறைந்து காணப்பட்டது.

கையில் ஓலையுடன் விறகுவெட்டி வெட, வெட என நடுங்கும் நிலையில் காவலர்கள் நிற்கும் பகுதியில் நின்றிருந்தான். அரச சபையில் இருக்கும் அனைவருக்கும் விறகுவெட்டியை நன்கு தெரியும். வீதியில் இவன் விறகு சுமந்து சென்றதை பலரும் பலமுறை பார்த்திருக்கிறார்கள். இவன் ஏன் இப்போது சபைக்குள் வந்திருக்கிறான். கையில் ஓலையும் வைத்திருக்கிறான். சபையிலுள்ள அனைவரது கண்களும் கவிஞரின் முகத்தில் மொய்த்தன. இந்தக் காட்டு மனிதனை வைத்துக் கம்பர் ஒரு நாடகம் நடத்தப் போகிறார் என்று எரிச்சல் கொண்ட புலவர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டனர்.

அரசர் பெருமானே! சபையோர்களே! அந்த மனிதரைச் சுட்டிக்காட்டி இவர் ஒரு கவிஞர். நம் மன்னரைப் பாராட்டிக் கவிதை எழுதி வந்திருக்கிறார். இவர் சார்பாக நான் அதைப் படிக்கிறேன். கவிதையின் பொருள் கூறவேண்டியது சவைப் புலவனாகிய எமது கடன் என்று கூறிவிட்டு ஓலையைப் பின்வருமாறு வாசித்தார்.

மண் உண்ணி மாப்பிள்ளையே,
கா இறையே- கூ இறையே
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கர்ணா- பின்னா - தென்னா-
சோழரங்கப் பெருமானே

என்று வாசித்துவிட்டு, அழகான போற்றுதல் என்று பாராட்டிய கவிச்சக்கரவர்த்தி புலவர்களே பாடலுக்குப் பொருள் உரையுங்கள் என்றார்.புலவர்கள் ஓலை கொண்டுவந்த மனிதனையும், கம்பரையும் மாறிமாறிப் பார்த்து ஏதோ இரகசியமாக கதைத்து சிரிக்க
முயன்றார்களேயன்றிப் பொருள் கூறுவார் யாருமில்லை. மீண்டும் பொருள் கூறுங்கள் என்று சொல்லியும் யாரும் பேசாததால் யானும் ஒரு புலவனாதலால் எனக்குத் தெரிந்த அளவில் புலவரின் பாடலுக்குப்
பொருள் கூறுகின்றேன் என்றார் கம்பர்.

மண்உண்ணி மாப்பிள்ளையே. கிருட்ணபகவான் குழந்தையாக இருந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது மண்ணை வாரி உண்டார். வளர்ப்புத் தாயார் யசோதை ஓடிவந்து வாயைத் திறடா? என்று அதட்டியபோது வாயைத்திறந்து வாய்க்குள் உலகங்கள் தெரியக்காட்டி எல்லோரையும் ஆச்சரியத்துள் மூழ்கச் செய்தார். இத்தகைய கண்ணபரமாத்வாவின் அம்சமாகத் தோன்றி சோழநாட்டை நல்லாட்சி செய்யும் மன்னர் பிரானே வணக்கங்கள். கா இறையே. குடிமக்களாகிய எங்களை எல்லாவிதமான கஷ்டங்களிலும், துன்பங்களில் இருந்தும் காத்து இரட்சிக்கும் மாட்சிமை தங்கிய வேந்தே. கூவிறையே| தூர இடங்களில் அபாயம் வர இருந்தாலும் கூவி அழைத்துத் துணைவரும் என்று நம்பிக்கை தரும் சோழ அரசு என்னும் வல்லமைச் சக்தியே. உங்க அப்பன் கோயில் பெருச்சாளி உங்கள் தந்தை பெரிய மகாவீரர். சிங்கக் கூட்டத்தில் பாய்ந்தடக்கும் யாளியைப்போல எதிரிகளைப் புறங்கண்டு ஓடச்செய்பவர்.கர்ணா- பின்னா சிறந்த வில் வீரரும் உலகப் புகழ்மிக்க கொடையாளியான கர்ணனுக்குப் பின்வந்த யுதிட்டிரரைப் போன்ற பார் போற்றும் வேந்தே தென்னா சோழரங்கப் பெருமானே தென் பாரதத்தில் சோற்றுக்குப் பஞ்சம் வராத சோழப் பெருநிலத்தை ஆளும் வலுபெற்ற மன்னர் பெருந்தகையே வணக்கம் என்று கவிச்சர்க்கரவர்த்தி தன் உரை கூறலை முடித்தார்.

அரசரைப் போற்றும் இவ்வளவு சிறப்புகளும் விறகுவெட்டி எழுதி வந்த பாடலில் இருக்கிறதா? அல்லது நமது கவிச்சக்கரவர்த்தியின் கற்பனையான வர்ணனையா? என்று சபையோர்கள் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்து கரை ஏற முடியாமல் திண்டாடினார்கள்.


தம்பலகாமம்.க.வேலாயுதம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. மிகவும் கவிநயம் உள்ள கருத்து. படித்து இரசித்தேன். இடுகைக்கு நன்றி.

    தங்கள் வலைப்பூவை தேன்சிட்டு -இலக்கியச் சுவை வளையத்தில் இணத்துக் கொண்டால் இலக்கிய ஆவல் உடையவர்கள் எளிதில் உங்கள் வலைப்பூவை அடைய முடியும்.

    ReplyDelete
  2. இது பற்றி நான் போட்ட பதிவு இதோ

    http://dondu.blogspot.com/2008/07/blog-post.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பது வாக்கு
    கவிச்சரவர்த்தி அல்லவா?
    பிழைகளை வாழ்த்துக்களாய் மாற்றுவது அவருக்குக் கை வந்த கலை
    பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் தங்கராசா அவர்களே

    ReplyDelete