Wednesday, September 30, 2009

கும்பவிழா - படத்தொகுப்பு


(கும்பம்)
விஜயதசமியன்று திருகோணமலையில் நடைபெறும் கும்பவிழா சிறப்பானதாகும்.அன்று இங்குள்ள ஆலயங்களில் கும்பங்கள் , கரகங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அன்றிரவு முழுவதும் வீதிவலம் வருவது வழமையாகும்.

'கும்பம்' பெரிய செப்புக்குடத்தில் வேப்பம் பத்திரத்தினால் அகலமான அடித்தளம் அமைக்கப்பட்டு ,தேவையான உயரத்திற்குத் தேர்போல பூக்களாலும், வர்ணக்காகிதத்தாலும் அலங்கரித்துக் கட்டப்படுகிறது. கும்பத்தின் அடிப்பாகம் அகன்றும் மேலேசெல்லச்செல்ல ஒடுங்கியும் செல்லும்.



கும்பம், கரகம் என்பவற்றைத் தாங்கி வருபவர்களுடன் ராஜமேளம் அடிப்பவர்களும்,உடுக்கடித்து காவியங்கள் ,காவடிச் சிந்துகள் பாடுபவர்களும், பக்தர்களும் வருவார்கள்.

ஒவ்வொரு ஆலயங்களிலும் இருந்தும் புறப்படும் கும்பங்கள் மற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு புறப்பட்ட இடத்தைச் சென்றடைவதுடன் இவ்விழா நிறைவுபெறும். இதன்போது பக்கதர்கள் தம் வீட்டுவாசலில் நிறைகுடம் வைத்து கும்பத்தினை வரவேற்பர்.
த.ஜீவராஜ்
படங்கள் - (NOKIA N70)
28.09.2009


Friday, September 04, 2009

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் களிப்பூட்டும் சிரிப்புக் கவிதைகள்


கல்வியில் பெரியவன் கம்பன் என்ற சொற்றொடர் பிரசித்தம் வாய்ந்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாம்பின் கால்களை இன்னொரு பாம்பினால் தான் நன்கு அறிய முடியும் என்று கூறுவதற்கேற்ப ஒரு புலவராகிய இவர் இன்னொரு பெரும் புலவராகிய கம்பரைப் பற்றி நன்கு அறிந்து நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

கம்பரின் கவித்திறன் ஆச்சரியமானது என்பது பாரதியின் வாதம். கவி அரசர் தமிழ் நாட்டின் தலைசிறந்த புலவர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் கம்பரை முன் வைத்துப் பேசுவதையும் கம்பர், வள்ளுவர், இளங்கோ என்று கம்பரை முன்வைத்துப் புலவர்களை வரிசைப்படுத்திக் கூறுவதையும் கம்பனென்ற மானிடன் பிறந்து நடமாடிய தமிழ் மண்ணில் தாமும் பிறந்து வாழ்வதை இட்டுப் பாரதியார் பெருமை கொள்வதையும் காண முடிகிறது.

உயரிய கருத்துக்களை ஓசை நயத்துடனும் உவமான அழகுடனும் கவிதை உருவில் எடுத்துக் கூறுவதில் ஈடு இணையற்றவராக இருப்பதுடன் சிரிப்பூட்டும் நகைச்சுவைப் புலமையிலும் கவிச்சக்கரவர்த்தி நிகரற்று விளங்குவதைக் காணலாம். 

Thursday, September 03, 2009

ஒப்பாரி வைத்தரற்றும் ஓலமே !...


தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்கள் மறைந்தபோது அவர் நினைவாக எழுதிய இது போன்ற மூன்று கவிதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. இதுவே தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் இலக்கிய முதல் பிரவேசம் ஆகும். 


மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக்கிந்த
பாரினில் துணையுமுண்டோ
எந்தையே தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே நின்பிரிவால்
தவிக்குதே தமிழர் நெஞ்சம்

முன்னை நற் பெருமையோடு
முடிபுனைந் தரசு செய்த
கன்னியெம் தமிழ்த்தாய் ஈன்ற
கடமையில்ச் சிறந்த வீரர்
வன்னிய சிங்கம் என்னும்
வான்புகழ் கொண்ட கோவே
உன்னைநாம் பிரிந்ததாலே
உளமதில் அமைதியற்றோம்


மூப்பினில் தினையளவும்
மூழ்கிடா இளவயதில்
கோப்பாயாம் தொகுதி தந்த
கோமகன் பிரிந்தார் என்னில்
அப்பாவித் தமிழர் கூட்டம்
ஆதரவற்றோராகி
ஒப்பாரி வைத்தரற்றும்
ஓலமே ஈழமெங்கும்


தம்பலகாமம்.க.வேலாயுதம்
நன்றி சுதந்திரன்

கவிச் சக்கரவர்த்தி நிகழ்த்திய ருசிகர விளக்க உரை!


நான்காண்டு கற்றும் வகுப்பில் சித்தியெய்தாமல் வறுமையின் தீவிரத்தால் கற்றலை நிறுத்தியவன், வாலிபனாகித் திருமணம் செய்துகொண்ட பின் காட்டில் சென்று விறகுவெட்டிச் சுமந்து வந்து விற்று, அவனும் மனைவியும் மிகக் கஷ்டமாகச் சீவித்து வந்தனர்.