ஆதியில் வாயுதேவனால் பறித்து வீசப்பட்ட கைலைமலைச் சிகரங்களில் ஒன்றே திருக்கோணமலை என்பதை வரராமதேவ சோழன் அறிந்தான். இம் மன்னன் முக்கிய கட்டிடப் பொருள்களுடன் சோழநாட்டில் இருந்து திருக்கோணமலை வந்து, தங்கி, சுவாமி மலையில் கோணேஸ்வர ஆலயத்தை அமைத்து வழிபாடு நடைபெற எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு அரசன் நாடு திரும்பினான். அரசனின் குமாரன் குளக்கோட்டன் தந்தையைப் போல் தானும் சிவாலயங்களை அமைக்க வேண்டும் என்ற மேலான எண்ணமுடையவன்.
பிற்காலம் இளவரசன் கோயிலும், குளமும் அமைத்ததால் இந்த அரசனுக்குக் குளக்கோட்டன் என்று பெயர் வந்திருக்கலாம் என்று சிலர் கருதினாலும், குழந்தைக்கு நெற்றியில் கொம்பு போன்ற சதைத் திணிவு காணப்பட்டதால் தந்தை வரராம தேவசோழன் மகிழ்ந்து குழந்தைக்குக் குளக்கோட்டன் எனப் பெயர் சூட்டியதாகப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது.
பூமகள் செழிக்கவரு பொற்புறு மகற்கு
வாம நுதன் மீதுல் அவை வாய்த்திடு நலத்தால்
கோமகன் மகிழ்ந்து குளக்கோட்டன் எனவே ஓர்
நாமகரணம் பொலிய நன்கு புனைவித்தான்
கோமகன் மகிழ்ந்து குளக்கோட்டன் எனவே ஓர்
நாமகரணம் பொலிய நன்கு புனைவித்தான்
திருகோணாசலப்புராணம்.
தந்தை வரராம தேவசோழன் திருமலையில் செய்த திருப்பணியைத் தரிசிக்கத் தனையனான சோழ கங்கன் என்ற குளக்கோட்டன் படைகளுடன் கடல் கடந்து கி.பி. 436ஆம் ஆண்டு திருமலை வந்தான். அடுத்துள்ள தம்பலகாமத்தில் கோணேஸ்வரர் ஆலயம் கலகக் காரர்களால் உடைக்கப்பட்டுக் கிடப்பதாகக் கேள்விப்பட்ட குளக்கோட்டன் அங்கு விரைந்து கோயிலை அவ்விடத்தே சிறக்கக் கட்டி நிர்வகிப்புக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களைத் திருத்தி அனுராதபுரத்து அரசியின் தலைமை அமைச்சருடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்டான்.
அவரைக் கொண்டு சதுர் வேதமங்கலத்தில் திருக்குளம் என்ற பெயரில் பெரிய குளத்தையும் அமைப்பித்தான். ஆனாலும் நெற்செய்கை சிறக்க ஒரு சமயம் மழையும் இன்னொரு சமயம் வெயிலும் வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு வேந்தன் தம்பலகாமத்தில் தங்கி இருந்தான். அதிஷ்டவசமாக அரசனை காண்பதற்காய் அவன் குல குரு வசிட்ட மகாரிஷி அங்கு வந்தார். குருவைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த குளக்கோட்டன் அவர் அடிதொழுது நெல் செய்கையாளர் வேண்டும்போது மழை, வெயிலை அருளும் ஒரு சிவ வழிபாட்டு முறையைத் தெரிவுசெய்து தருமாறு வேண்டினான்.
சிவாகமம் முழுவதையும் துருவி ஆராய்ந்த முனிவர், உலகத்தில் மிக அரிதாக அனுஷ்டிக்கப்படும் உருவ அருவ கிரியை வழிபாட்டை அனுஷ்டித்து வந்தால் மழை, வெயிலை வேண்டி பட்டு நேர்ந்து கிரியை ஆராதனை செய்தால் அவை கிடைக்கும் என அரசனுக்குக் கூறினார். இந்த உருவ அருவ வழிபாடே திருத்தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.
கோயிலுள் நடைபெறும் பூசை, அபிஷேகம், வருடாந்த உற்சவ விழா ஆகியன உமா பங்கரான கோணேஸ்வரருக்கும் பரிவார தெய்வங்களுக்குமான உருவ வழிபாடுகளாகும். கந்தளாய்க் குளத்து அணைக்கட்டில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்துச் செய்யும் மகாவேள்வி, நெரிஞ்சித் தீவு வேள்வி, தம்பலகாமம் நாயன்மார்திடல் வைரவத்தடியில் குழுமாடு கட்டி நடைபெறும் வேள்விகள், கள்ளிமேட்டு மைதானத்தில் நடைபெறும் பத்தினித்தேவி விழா, மாகமத்தில் நடைபெறும் மூர்க்காம்பிகை விழா ஆகியன உருவ வழிபாடுகளாகும். லட்சுமி நாராயணனுக்கும் காவல் தெய்வங்களுக்கும் ஆண்டுக்கு ஒன்றாக திறந்தவெளி வழிபாட்டு இடங்களில் நடைபெறுவது அருவ வழிபாட்டுச் சுற்று ஆராதனைகளாகும்.
திருமலையில் கோயில் அமைத்த வரராமதேவ சோழன் நோய்வாய்ப்பட்டு வரமுடியாமல் இருந்ததால், திருமலை தம்பலகாமம் கோணேஸ்வரங்களைக் குளக்கோட்டு மன்னரே பார்த்துப் பரிபாலித்து வந்தார். தம்பலகாமம் ஆலயம் உருவ ,அருவ வழிபாடுகள் என இரண்டு வழிபாடுகள் உடையது. ஆகையால் தொழும்பு செய்வோர் தொகை 50 பேர்களுக்கு மேல் இருந்தது. இவர்களுக்கிடையே குறிப்பாக தானம். வரிப்பற்றுத் தொழும்பாளர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டு வந்தன. இவர்களின் பிணக்குகளைத் தீர்த்து கோயில் நிர்வாகங்கள் சரியாக நடைபெற திருமலை இராஜ்யம் என்றொரு தர்ம அரசை நிறுவிக் குளக்கோட்டு மன்னர் பாண்டிநாடு சென்று மதிக்குலத்துதித்த பாண்டிய இளவரசனை அழைத்து வந்து திருமலையைத் தலைநகராகக் கொண்டு தாம் நிறுவிய திருமலை ராஜ்ய மன்னராக அரசு கட்டில் ஏற்றி வன்னிமை என்ற சிறப்புப் பட்டத்தையும் ஈந்தார்.
அந்த அரச குமாரனின் இயற்பெயர் தனி உண்ணாப் பூபாலன். குளக்கோட்டு மன்னர் இந்த அரச குமாரனை திருமலை இராஜ்ய மன்னராக அரியணை இருத்தி வழங்கிய சிறப்புப் பட்டம் வன்னிமை எல்லாமாகச் சேர்ந்து திருமலை இராஜ்ய மன்னரின் பெயர் தனி உண்ணாப் பூபால வன்னிபம். இவர் மதிக்குலத்தில் வந்தவர். திருமலை இராஜ்யம் என்ற தர்ம அரசை தனி உண்ணாப் பூபால வன்னிப அரசன் ஆட்சிசெய்தான். ஆலோசனை கூறக் கனக சுந்தரப்பெருமாள் போன்ற தூயோர் இருந்தனர். அரசனுக்குக்கீழ் 32 தலைமைக்காரர்கள் இருந்தனர்.
அரசுக்கு சிறப்பம்சமாக விளங்கும் படையைப் பற்றிக் கோணேஸ்வரர் கல்வெட்டில் செய்தி எதுவும் இல்லை. தொழும்பானர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் தர்ம அரசை நிர்வகிக்கும் அரசருக்குப் படைபலமும் தேவையும் இல்லை. இதில் ஒரு புனிதமும் காணப்படுகின்றது. நாடுபிடித்தாள்வதை இலட்சியமாகக் கொண்ட அரச மரபில் வந்தவர் குளக்கோட்டு மன்னர். இதுகாலவரையும் அந்த எண்ணமே இன்றித் தர்மகாரியங்களைச் செய்தாலும் இப்போது திருமலையில் ஒரு அரசைத் தோற்றுவிக்கிறார். அந்த அரசையும் தான் ஆளாமல் மதுரை சென்று மதிக்குலத்தில் உதித்துக் குணச்சிறப்பால் மதி போல் ஒளிவீசும் தனி உண்ணாப்பூபாலனை அழைத்து வந்து வன்னிமை என்று சிறப்புப் பட்டமீந்து அரச கட்டில் ஏற்றி வைக்கின்றார். குளக்கோட்டனின் தர்மசிந்தை என்னே! என்று வியக்க வேண்டி உள்ளது.
இந்த அரச குமாரனை தனி உண்ணாப் பூபாலன் என்று பெயர் குறிப்பிடுகின்றதே அது என்ன? சாதாரண மனிதர்கூட உணவை மறைவில் வைத்துச் சாப்பிடத்தான் விரும்புகிறார்கள். இந்த அரசகுமாரன் பலருடன் பந்தியாக இருந்து சாப்பிடும் மேன்மைக் குணம் உடையவனோ?எனத்தோன்றுகின்றது.
திருமலைக் கோயில், பக்குவநிலை அடைந்த பெரியார்களுக்கு முக்திப்பேறை அருளும் மகா மலைத்தலமாகவும் தம்பலகாமம் கோணேஸ்வரமே மழை, வெயில் மற்றும் பொருள்களை மனிதர்களுக்கு அருளும் தலமாகவும் இருக்கும் என்று நூல்கள் கூறியது போலவே கிரியை ஆராதனைகளுக்கு ஆச்சரியகரமான முறையில் பலன் கிடைத்தும் வருகின்றன. தர்ம சீலரான குளக்கோட்டு மன்னர் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களையும், நூற்றுக்கணக்கான தென்னஞ்சோலைகளான வளவுகளையும், தங்க ஆபரணமான பொருள்களையும் தேடி வைத்திராவிடில் மாதம் பல ஆயிரக்கணக்கான ரூபா பெருஞ்செலவுடைய தம்பலகாமம் கோணேஸ்வர ஆலய வழிபாடு முட்டின்றித் தொடர்ந்து நடைபெற முடியாது. ஆலயத்தில் இருந்து ஒரு சிறிய துரும்பை வெளியில் கொண்டு போய்ப் போடுபவரும் வயல் மானியமோ, மாதச் சம்பளமோ பெறுபவராக இருப்பார்.
இப்படி இந்த ஆலயத்தில் அனுஷ்டிக்கப்படும் உருவ அருவ வழிபாடுகளான இரண்டு வழிபாடுகளிலும் தொழும்பு செய்வோர் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்கவே திருமலையைத் தலைமை இடமாகக் கொண்டு திருமலை இராஜ்யம் என்ற தர்ம அரசை நிறுவ வேண்டிய நிலை குளக்கோட்டு மன்னருக்கு ஏற்பட்டது.
இந்த அரசைக்கூடத் தாம் பரிபாலிக்காமல் மதுரை சென்று மதிக்குலத்துதித்த மதியேபோலச் சிறப்புடைய தனி உண்ணாப் பூபாலன் என்ற பாண்டிய இளவரசனை அழைத்து வந்து வன்னிபம் என்ற சிறப்புப் பட்டமீந்து அரசு கட்டில் ஏற்றி வைத்தார் என கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது.
திருமலை இராஜ்ய தனி உண்ணாப்பூபால வன்னிமையாகிய அரச பரம்பரை காலப் போக்கில் அருகிக் குறைந்தது. இந்த அரச மரபினரில் சிலர், பிற்காலம் தம்பலகாமம் தெற்கில் வர்ணமேட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்தனர். அந்த இடம் இன்னும் வன்னிச்சியார் திடல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
தம்பலகாமம்.க.வேலாயுதம்
Hi
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
thanks
ReplyDeleteமிக்க நன்றி, கிழக்கின் ஆலயங்கள், வரலாறுகள் குறித்து பரவலான பதிவுகள் இல்லாத குறையை உங்கள் தொடர்ந்த பதிவுகள் நிறைக்கின்றன.
ReplyDeleteநன்றி கானா பிரபா
ReplyDeleteoh. my god. nice . thanks for the artilces. I was in trinco in 2003 with prof. pahtmanathan for takgin photos of kalvettukal. it was nice there. I met a very old person, who had a menuscript about songs by him. it was a wonderful experience. I dont rember tha name a very small house near some temple. he was very eager to publish the book. but I missed all the photos and videos. it was horrible. I have some photos of the templs and kalvettukal. but even those files are also now out of reach for me. hope i will able to send to u. pls send a mail to my address. tahnks.
ReplyDelete