Monday, June 01, 2009

ஞாபகச் சிதறல்கள்....(பாலர் வகுப்பறை)

இடிக்கப்படத் தயாராக இருக்கிறது அந்தப் பழைய கட்டடம். பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பல கட்டங்களில் இருந்து ஒதுங்கி தனித்திருக்கிறது அது.

பலமுறை அதனைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.மிகச் சிறிய வகுப்பறை. முதன் முறையாக எனக்குத் தெரிந்த வெளியுலகம் இவ்வளவு சிறியதாக இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

கலகலப்பு, அழுகை, சிரிப்பு, ஆட்டம், ஓட்டம், பாடல்கள் என்று இன்றும் அன்றைய நினைவுகள் மனதில் ரீங்காரமிட்டபடி இருப்பதால், இடிபடத் தயாராய் இருந்தாலும் இன்றும் எனக்குப் பாலர் வகுப்பது.

ஒரு பென்சிலோ,அல்லது அழிப்பானோ கடன் வாங்குவதும், பின் அதைத் திருப்பிக் கொடுப்பதும் பெரியவிடயமாக இருந்த காலப்பகுதி. விளையாட்டில் ஏற்படும் சிறுசிறு கோபங்களையெல்லாம் வீதி,வீடு வரை கொண்டுதிரிந்த மறக்க முடியாத வாழ்க்கையது...

வாழ்க்கையில் எத்தனை கட்டடங்களைக் கடந்திருப்பேன். இடிபட தயாராக இருந்த இந்தப் பாலர் வகுப்பறையின் முன்னால் வந்தவுடன், அன்றிருந்த வயதிற்கே போய்விட்டதுபோல் மனதில் உற்சாகம் நிரம்பி வழிந்தது ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய விடயங்களை விட்டுவிட்டு நாம் பயணிக்கிறோம். இன்றும் இதேகட்டடத்தில் பயின்ற என்வயது மாணவர்கள் ஒருசிலரையே ஊரில் என்னால் சந்திக்க முடிந்தது.
பாடசாலையின் மற்றைய பகுதியெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வீதிக்கு வந்தபோது, என்னால் ஞாபகப்படுத்த முடிந்தவர்களைவிட மறந்துபோனவர்களின் பட்டியல் நீளமாய் இருப்பது குற்ற உணர்வைத் தந்தது.

இந்தப் பாலர் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் யாரோ சிலர் பிரிந்து போய்க் கொண்டே இருந்திருக்கிறார்கள். கட்டடங்களும், இடங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது.

பிரிந்து போனவற்றை திடீரெனச் சந்திக்கையில், மனம் கனகதியில் சுழன்று வயதைக்குறைத்து ஒருவித்தியாசமான உலகுள் நம்மைக் கொண்டுசென்று விடுவதுதான் வாழ்வின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது போலும்.
(படத்தில் தி/இ.கி.ச.சாரதா வித்தியாலயம், தம்பலகாமம்)

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. //உடைக்கப்படத் தயாராக இருக்கிறது அந்தப் பழைய கட்டடம். பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பல கட்டங்களில் இருந்து ஒதுங்கி தனித்திருக்கிறது அது.//

    வலிக்குது...

    ReplyDelete
  2. நன்றி கதிர் அவர்களே

    ReplyDelete
  3. "பாலர் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் யாரோ சிலர் பிரிந்து போய்க் கொண்டே இருந்திருக்கிறார்கள். கட்டடங்களும், இடங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது."
    பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாததே (துன்பமாயிருப்பினும்)! எனினும் எம் ஞாபகத்தின் எங்கோ ஓர் மூலையில் இருந்து இடையிடையே எட்டிப் பார்க்கும் இந்நினைவுகள் இன்பமானவையே!

    ReplyDelete
  4. நன்றி Renuka Srinivasan அவர்களே

    ReplyDelete