{நன்றி admirableindia.com}
பகல், இரவு, வெயில், மழை, நீதி, அநீதி, இன்பம், துன்பம் என இந்த உலகம் எல்லா விதங்களிலும் இரு விதமான நிலையிலேயே இயங்கி வருகிறது. இயற்கையின் இந்த இரு நிலைகளும் கால மாற்றத்தாலும் மாற்ற மடையாத உறுதியான நிலையிலேயே இருந்து வருகின்றன. ஆயினும் மனித வாழ்க்கையின் மேம்பாடு கருதி மேலோர்கள் அநீதி அருகி நீதி மேலோங்க வேண்டும் என்று பண்டு தொட்டு இன்றுவரை முயற்சித்தும், குரல் கொடுத்தும் வந்துள்ளனர்.
சான்றோர்களின் இந்த நன்முயற்சி வெற்றிபெறாமல் போனதுடன் நீதி, அநீதி போன்ற பண்புகள் மனித சமுதாயத்தில் இன்றும் அப்படியே நிலைத்திருப்பதையே காணமுடிகிறது. குறிப்பாகத் தர்ம யுகம் என்று கருதப்படுகின்ற துவாரக யுகத்தின் கடைசிப்பகுதியில் பாண்டவ பத்தினியான திரௌபதை அரச சபைக்கு அழைக்கப்பட்டு அப்பெண் அணிந்திருந்த உடையை அகற்றி மானபங்கம் செய்ய முயன்ற கொடுமை நடைபெற்றதாக மகாபாரதம் கூறுகிறது.
பண்டையத் தமிழ் மன்னர்கள் தங்கள் ஆட்சியில் நீதி பிழைத்ததால் தங்கள் உயிரையே ஈர்ந்து செங்கோலை நிமிர்த்தும் சிறப்புடன் நல்லாட்சி புரிந்துள்ளனர். குறிப்பாகக் கண்ணகி வழக்கில் தன் தவறு உணர்ந்ததும் ‘ஆரியப்படைகளைப் புறங்கண்ட மாவீரனான’ பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் “கோவலன் கள்வன் அல்லன்! யானே கள்வன்’’ என்று அரற்றி சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நிலையிலேயே உயிர் துறந்து நீதியை நிலைநாட்டினான் எனச் சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது. ஒருவர் விரும்பியவுடன் இறப்பதென்பது நடக்கக் கூடிய காரியமல்ல. இது செயற்கரிய செயலாகும்.
பசுக்கன்றின் உயிர் நீங்க, தன் மகனைக் கொன்று நீதி காத்தான் சோழ மன்னன். ஒரு புறாவை காப்பாற்றுவதற்காக, அதை உணவாகக் கொள்ள ஓடோடியும் வந்த வேடனுக்கு, தன் சரீரம் முழுவதையும் அரிந்து ஈர்ந்து அந்தப் புறாவுக்கு கடைசிவரை காப்பளித்து, தனது தர்ம சிந்தனையை நிலை நாட்டினான் சிபி என்ற சூரியகுல வேந்தன். இதைப்போலவே தர்மம் நியாயம் போன்ற நன்நெறிகளுக்காகப் பண்டைய மன்னர்கள் செயற்கரிய தியாகங்களைப் புரிந்துள்ளனர். ஆயினும் அறமே போற்றும் அரச மரபுகளைக் கொண்ட தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு களங்கமாக பெண் கொலைபுரிந்த நன்னன் என்னும் பெயர் பூண்ட குறுநில மன்னனின் கொடுங்கோன்மையைச் சங்க நூலான குறுந்தொகை பின்வருமாறு எடுத்துச் சொல்கிறது.
மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல் தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீ இயரோ?
ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீ இயரோ?
- குறுந்தொகை -
நன்னன் என்ற பெயருள்ள குறுநில மன்னனின் தோட்டத்தில் இருந்து பசும் காய் ஒன்றை வெள்ளம் அடித்து வெளியே கொண்டு வந்தது. அங்கு நீராட வந்த பெண் ஒருத்தி அந்தக்காயை எடுத்துத்தின்று விட்டாள். அதைக் கேள்வியுற்ற நன்னன் கோபமுற்று அப்பெண்ணுக்குக் கொலைத்தண்டனை விதித்தான். தன் பெண்ணுக்கு நேரவிருக்கும் உயிர் ஆபத்தை அறிந்து ஓடோடி வந்து அந்தச் சிற்றரசனின் காலில் விழுந்து பணிந்து தன் பெண்ணின் எடைக்குச் சமனான தங்கத்தால் செய்த பாவையும் எண்பத்தொரு யானைகளையும் காணிக்கையாகத் தருகிறேன் என்று மன்றாடியும் அந்தக் கொடுங்கோலன் இரங்காது அந்த அபலைப் பெண்ணைக் கொன்று தன் முரட்டுக் கோபத்தை ஆற்றிக் கொண்டான் என்பது நீதி தவறாத தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு என்றும் மாறாத கறையாகவே அமைந்துள்ளது.
நெறி தவறும் வேந்தர்களைக் கடிந்து திருத்தத் தயங்காத புலவர்களுடைய தமிழ் நாட்டில் பரணர் என்ற புலவர்பெருந்தகை இக்கொடுமை செய்த நன்னனை “மீளா நரகம் சேர்வானாக” என்று திட்டிப் பழிக்கிறார்.மனித குலத்தின் நலன் கருதிச் சான்றோர்கள் எவ்வளவு முயன்றாலும் தீமை, அநீதி என்ற கொடும் செயல்கள் காலமாற்றத்தினால் கூட அழிந்தொழியாமல் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் சிரஞ்சீவித் தன்மையுடன் வருவது மனித சமுதாயத்திற்குள்ள சாபக் கேடாகும்.
தம்பலகாமம்.க.வேலாயுதம்
No comments:
Post a Comment