மண்டையைப் போட்டுடைத்து
மனத்தினில் கருத்துச் சேர்த்து
விண்டிட நினைத்த நல்ல
இலக்கிய முயற்சி எல்லாம்
பண்டைய எனது வீட்டில்
பத்திரமாக வைத் தேன்
கண் தழைக் குளத்து வெள்ளம்
கவர்ந்தெங்கோ சென்ற தம்மா
கடலெனப் பெருகி வந்த
கந்தளாய் உடைப்பு வெள்ளம்
அடவிகள் மற்றும்
அனைத்தையும் கடந்து வந்து
உடமைகள் வீட்டுச் சாமான்
ஒவ்வொன்றாய்க் கவர்ந்ததோடு
பெட்டியில் எழுதி வைத்த
பிரதிகள் அனைத்தும் நாசம்
பூட்டிய அலுமாரிக்குள்
புகுந்த அப் பொல்லா வெள்ளம்
கட்டுரை கவிதை நல்ல
கதைகளைச் சிதைத்ததோடு
விட்டதா? அதனைச் சாய்த்து
வெளியிலே இழுத்தெறிந்து
நட்டங்கள் செய்த நாளை
நான் எண்ணிக் கலங்குகின்றேன்
வெள்ளத்தின் கொடுமை நீங்கி
வெறிச் சோடிக்கிடந்த ஊரில்
கள்ளர்கள் புகுந்து செய்த
கஷ்டங்கள் ஒன்றிரண்டா?
வள்ளலாய் வாழ்ந்த மக்கள்
வறுமையில் கிடந்துழல
அமைதியைக் குலைத்தார் அந்தோ!
08.02.1987 நன்றி சிந்தாமணி வாரஇதழ்
தம்பலகாமம்.க.வேலாயுதம்
"சிந்தாமணி", "தினபதி" பத்திரிகைகள் என்றாலே பெரிய கொம்புள்ள மாடு நினைவுக்கு வந்து செல்கின்றது, சிறு பராயத்தில் பார்த்து இரசித்தது ஞாபகம், அதில் பிரசுரமான கவிதையினை மீட்டுப் பார்க்கச் சந்தற்பம் ஏற்படுத்தித் தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteநன்றி ஈழவன்
ReplyDeleteஇப்போது அவருடைய ஆக்கங்கள் வெளிவந்த சில பிரதிகளே என்னிடமுள்ளது....
அப்பப்பாவிற்கு{ தம்பலகாமம்.க.வேலாயுதம்
} ஆச்சரியம் பதிவிட்டு சில நிமிடங்களில் கருத்துக்கள் வருகின்றன என்பதை அறிந்து....
தான் எழுதிய காலத்தில் ஒரு ஆக்கத்திற்கான விமர்சனத்துக்கு எவ்வளவு காலம் காத்திருந்திருப்பேன்.... என நினைவுகூறுகிறார்..