இது கிராமத்தில் பூத்த ஒரு சரித்திரக் குறுநாவல். எமது இருபதாவது வெளியீடு. இதன் ஆசிரியர் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ஒரு முதுபெரும் எழுத்தாளர், பழம்பெரும் ஊடகவியலாளரும்கூட.
திருகோணமலை மாவட்டம் தன்னகத்தே கொண்ட பல கிராமங்களுள் ஒன்றான பழம் பெரும் கிராமமே தம்பலகாமம். திருக்கோணமலையில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் பாதையில் பத்தாவது கல் தொலைவில் இடது பக்கமாகத் திரும்பி ஒன்றரைகல் சென்றால் வருவது தம்பலகாமம். தம்பலகாமம் கிராமத்துள் கால் பதித்ததும், நம் கண்ணில் முதல்படுவது, பார்க்குமிடமெங்கும் வயல்வெளிகள், காலத்துக்குக் காலம் பசுமை நிறைந்து மரகதக் கம்பளம் விரித்தது போன்றும், செந்நெற்கதிர்கள் பூத்தும், நெற்கதிர்கள் மணிகள் நிறைந்து தலைசாய்ந்து காற்றினூடே அலை அலையாய் களனி நிரம்ப பொற்கதிர்கள் பரப்பும் எழிலும், தண்ணீர் தேங்கி நிற்கும்போது பெரும் குளமாகவும் காட்சிதரும்.
சற்றே தலை நிமிர்ந்து பார்வையை மேலே செலுத்துவோமேயானால், அங்கே ஆலயத்தின் வானுயர்ந்த கோபுரம் கண்ணிற் படும். அதுதான் ஆதி கோணைநாயகரின் ஆலயமாகும். கி.மு ஆறாயிரம் ஆண்டளவில் இராவணனால் வணங்கப்பெற்று, கால ஓட்டமாற்றத்தில் பல மன்னர்களின் திருப்பணியாலும், ஆலய புனருத்தாரணத்தாலும் பொலிவு பெற்று, பாரெல்லாம் கீர்த்தி பெற்று, திருமூலரால், ஞானசம்பந்தரால், அருணகிரிநாதரால் பாடல் பெற்று இருந்த திருக்கோணேஸ்வரம், 1624 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதலாம் நாளாகிய புதுவருடத்தன்று, போர்த்துக்கேயரால் தகர்த்தப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
அவ்வேளையில் அங்கு திருத்தொண்டு செய்து கொண்டிருந்தவர்கள் புனிதத் திருவுருவச் சிலைகளை நாலாபக்கமும் கொண்டு சென்று மண்ணிலும், கிணற்றிலும், காட்டிலும் மறைத்து வைத்தனர். சில விக்கிரகங்களை தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள சுவாமிமலை என்று அழைக்கப்படும் இடத்தில் ஒழித்து வைத்து வழிபட்டனர்.
கோணமலைக்கிழங்கு பெற தம்பலகாமம் வாசிகள் சுவாமிமலைக் காட்டிற்கு செல்வது வழக்கம். அப்படிச் சென்ற ஒருநாள், சுவாமிமலையில் விக்கிரகத்தோடு செப்பேடொன்றையும் கண்டெடுத்தனர். உடனே எடுத்துச் சென்று சிவாலயத்தில் பிரதிஸ்டை செய்து வழிபடலாயினர். இவ்வாலயம் 340 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்டதென்றும், இவ்வாலயத்தில் இருக்கும் பழைய கோணேசர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரென்றும், மாதுமையம்மை பன்னிரெண்டாம் நூற்றாண் டைச் சேர்ந்த, சோழர் காலம் என்றும் ஆராட்சி யாளர் கூறுகின்றனர்.
தம்பலகாமத்தில் ஆதி கோணைநாயகரைப் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்ட இவ்வாலயம், கி.மு பதினெட்டாம் ஆண்டளவில் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில் நிறுவப்பட்டதென அறியக்கிடக்கிறது. கோவில் குடிகொண்டிருப்பதன் காரணமாக இந்த இடத்தை கோவில் குடியிருப்பு என்று அழைப்பர். ஆதிகோணைநாயகரை வணங்கித் திரும்புவோமேயாகில் நேராகவும், இடமாகவும் இருபாதைகள் பிரிந்து தம்பலகாமம் கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றன.
இடை இடையே தென்னை மரச் சோலைகளும் சூழ, சுற்றிவர வயல்களைக் கொண்ட திடல் திடலாய்க் காட்சி அளிக்கும் குடியிருப்புக்களும், அழகுவிருந்தளித்து, வருபவர்களை அன்போடு வரவேற்கும் காட்சி காண்பதற்கினியதே. இக்கிராமத்தில் உள்ளதிடல் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயருண்டு. கள்ளிமேட்டுத்திடல், வர்ணமேட்டுத் திடல், நாயன்மார்திடல், கரச்சித்திடல், சிப்பித்திடல், கூட்டாம்புளி, நடுப்பிரப்பந்திடல், குஞ்சடப்பன்திடல், முன்மாரித்திடல் எனப்பெயரிடப்பட்டுள்ளன.
இதன் இயற்கையமைப்பு இப்படிக் காணப்பட்ட போதிலும், இக்கிராம மக்கள், புராணரீதியாக குளக்கோட்டு மகாராஜாவின் வேண்டுகோளின் பேரில், கந்தளாய் குளத்தைக் கட்டிய பூதங்கள், மண் அள்ளிப்போட்ட கூடையைத் தட்டி விட்டதனாற்தான் இப்படித் திட்டுத் திட்டாக அமைந்துள்ளது என்று கருதுவர். இக்கிராமத்தை அண்டி கப்பற்றுறை என்று ஓர் இடமும் உண்டு. இது பண்டைய நாட்களில் பல நாட்டில் இருந்தும் வருகை தந்த கப்பல்கள் கட்டி, வணிகம் நடத்திய துறைமுகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. அஃது மட்டுமன்றி, இங்கு முத்தும் குளித்த இடமாகவும் கருதப்படுகின்றது. இதற்குச் சான்றாக, அங்கு சிப்பிகள் குவிந்து கிடப்பதை இன்றும் காணலாம். சுருங்கக் கூறின், இது ஒரு வணிகத் துறைமுகத்தைக் கொண்ட ஒரு பழம் பெரும் கிராமமென்றால் மிகையாகாது.
இக்கிராமம் இறைவழிபாட்டை மட்டும் கொண்ட கிராமமன்று. இங்கு ஆடல், பாடல், நாட்டுக்கூத்து, சிலம்பம், சீனடி போன்ற கலைகளும் சிறந்து விளங்கின. நாட்டுக்கூத்திற் சிறந்த அண்ணாவிமாரான கணபதிப்பிள்ளை போன்றோரும், பண்டிதர்களான சரவணமுத்து,புலவர் சத்தியமூர்த்தி போன்றோரும் இந்த மண்ணின் மைந்தர்களே.இந்த மண் பல சான்றோர்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களது விபரம் அறியப் படாமல் இருப்பது நமது துரதிஸ்டமே.
இல்லையெனில் வெருகல் சித்திர வேலாயுத காதல் என்ற நூல் எப்படி பாடப்பட்டிருக்கும். இதனைப் பாடியவர் தம்பலகாமத்தின் வீரக்கோன் முதலி என்பவராவர். இந்நூல் கண்டி நகராண்ட முதலாம் இராசசிங்கன் காலமான 16 ஆம் நூற்றான்டின் பிற்பகுதியில் பாடப்பட்டதென அறியக்கிடக்கிறது. (ஈழத் தமிழ் இலக்கியம் பக்கம் 35, 36,37) இத்தகைய பெருமைமிகுந்த கிராமத்தில் குஞ்சர் அடப்பன் திடலில் முதுபெரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான க.வேலாயுதம் என்பவர் பிறந்தார்.
இக்கிராமத்தில் திடல்களின் பெயர்கள் அதன் காரணத்தில் பெயரிலேயே வைக்கப்பட்டன. ஆதிகோணேஸ்வர ஆலய கங்காணம் என்னும் அதிகாரப் பணியாளரின் உதவிப்பணியாளர் அடப்பன் வேலையை குஞ்சர் என்ற பெயரை உடையவர் செய்து வந்தார். குஞ்சர் மிகவும் செல்வாக்குடன் பிரசித்த நிலையில் விளங்கியதால், ஆதிகோணேஸ்வர ஆலயத்துக்கு சமீபமாக உள்ள குஞ்சர் வாழ்ந்த ஊர் பிரிவுக்கு, குஞ்சர் அடப்பன் திடல் என்ற பெயரே வழங்கலாயிற்று.
இவ்வாறு என் இளமைக்கால நினைவுகள் என்ற கட்டுரையில் திரு வேலாயுதம் அவர்கள் எழுதியுள்ளார். தொடர்ந்தும் தன் பிறப்பைப்பற்றி எழுதும் போது இந்த ஊர்பிரிவில் கல்கியின், பொன்னியின் செல்வனின் தந்தை சுந்தரசோழரைப் போன்ற உருவ அமைப்பும் தேககாந்தியும் உள்ள வே. கனகசபைக்கும் பெரும் நிலச் சொந்தக்காரரான பெரிய வீர குட்டியாரின் நடுமகள் தங்கத்துக்கும் திருமண நிகழ்வால் 1917 ஆம் ஆண்டு நான் பிறந்தேன் என ஜாதகம் கூறுகிறது என்று எழுதியுள்ளார். இவரது தந்தையாரான கனகசபை எல்லாக் காரியங்களிலும் வல்லவராக இருந்தார். குறிதவறாமல் துப்பாக்கியால் சுடுவதிலும் வல்லவர்.
இவரது தாயாரின் மூத்தசகோதரி அபிராமிப்பிள்ளையின் கணவர் பத்தினியார். இவர் ஒரு பிரசித்த சுதேசவைத்தியர், பரியாரியார்.
இவரது தாயாரின் மூத்தசகோதரி அபிராமிப்பிள்ளையின் கணவர் பத்தினியார். இவர் ஒரு பிரசித்த சுதேசவைத்தியர், பரியாரியார்.
சிறுவன் வேலாயுதம் தன் பாடசாலை தவிர்ந்த நேரமெல்லாம் நாயன்மார் திடலிலுள்ள இவனது பெரிய தாயார் வீட்டிலேயே தங்குவான். பெற்றோரைவிட, இவரது பெரிய தாய் தந்தையரே இவனை வளர்த்து வந்தார்கள் என்றால் மிகையாகாது, அந்த அளவிற்கு இவர் மேல் அன்பாகவும் பாசமாகவும் இருந்தார்கள். அதே போன்று வேலாயுதனும் தன் பெரிய தாய் தந்தையரோடு பிரியமாகவும், அன்பாகவும், பாசத்தோடும் இருந்தான். இவரது தாயாரின் தந்தை, இவன் தந்தை, மாமா எல்லோரும் இவரது பெரிய தாய் தந்தையோடுதான் வாழ்ந்தார்கள். இது ஒரு கூட்டுக் குடும்பமாகவே இருந்தது. வேலாயுதம், இவரது பெரியம்மா பெரியப்பா விருப்பப்படி வைத்தியமும் கற்று வந்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவில் இருந்து ஆர்மோனிய வித்துவான் சின்னையா சாய்வும், மிருதங்க வித்துவான் மதாறிசாவும், பிற்பாட்டுக்காரர் கறீம்பாயும், தம்பலகாமம் வந்து நாயன்மாதிடலில் தங்கினார்கள். இவர்கள் வேலாயுதத்தின் பெரியப்பா பெரியம்மா குடும்பத்தோடு நெருங்கிப் பழகியதன் காரணமாக, ஒரு குடும்ப உறவினராக மாறிவிட்டார்கள். இதன் காரணமாக உள்ளுர்காரர் சிலரையும் சேர்த்து ஒரு டிக்கட் டிராமா நடத்தினார்கள். திறமைசாலிகள் எனப் பெயரும் பெற்றார்கள். இதையடுத்து வேல்நாயக்கர், எஸ்.ஆர்.கமலம் ஆகியோர் வந்து சேரவே கோயில் குடியிருப்பில் தரமான பல டிராமாக்கள் நடைபெற்றன.
இந்தக்காலகட்டத்தில்தான் இவரது மாமா கதிர்காமத்தம்பி மதுரை நகரிலிருந்து வாங்கி வந்த ஆர்மோனியப் பெட்டியில் சின்னையா சாய்புவைக் குருவாகக் கொண்டு, வாசிக்கப் பழகினார். காலப்போக்கில் வேலாயுதமும் வாசித்துப் பழகுவதில் சேர்ந்து கொண்டு வாசித்தார். நல்ல தேர்ச்சியும் பெற்றார். வேலாயுதம் அவர்களின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம், இவரது பெரிய தாயாரின் மகன் வேலுப்பிள்ளை, ஓர் சிறந்த ராஜபாட் நடிகன், ஒத்திகை இன்றி திடீரென்று நாடகம் நடிக்கும் ஆற்றல் கொண்டதன் காரணமாக, அனைவரும் அவரையே நாடி வருவர். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு அண்ணாவியாருங் கூட. அத்தோடு ஆர்மோனியமும் வாசிப்பார்.
இவர் பழக்கிய கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரமசிங்கன் என்ற சரித்திர நாடகத்தில் குமாரகாமியின் தங்கை ரஞ்சித பூஷணியாக வேலாயுதத்தை நடிக்க வைத்தார். இந்த நாடகத்தின் அனுபவத்தைப் பற்றி அவரது கட்டுரையின் வாயிலாகத் தருவதே சாலச்சிறந்தது.
கள்ளிமேட்டு ஆலையடி அரங்கேற்றுக்களத்தில் நாடகம் அரங்கேறியபோது வந்து திரண்ட மகாசனத்திரள் எனக்கு மலைப்பாக இருந்தது. திருக்கோணமலை மற்றும் இடங்களிலிருந்து மோட்டார் வாகனங்கள் ஸ்ரேஜ் முன்னால் சனங்களைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
இனிமையான குரல் வளமும், தந்தையரைப் போன்ற உருவ அமைப்பும் உடைய வேலாயுதம், ரஞ்சிதபூஷணி வேஷத்தில் சோபித்து பாராட்டுக்களைப் பெற்றார். இவர்கள் நாடகம் பழக்கப்படும் போதும், அரங்கேறும் நாடகத்துக்கு வருவது போல், ஆண், பெண் பார்வையாளர்கள் அதிகமாகவே வருவார்கள். அண்ணாவியார் வேலுப்பிள்ளையின் வேண்டுதலின் பேரில், அதிகமாக நாடகங்களுக்கு வேலாயுதம் அவர்களே ஆர்மோனியம் வாசிப்பார். ஆரம்பத்தில் சனத்திரளைக் கண்டு பயந்த போதும் நாளடைவில் பயம் நீங்கி ஆர்மோனியம் வாசிப்பதில் வல்லுனர் ஆனார்.
கிண்ணியாவில் நடைபெறும் கல்யாண வீட்டுச் சமாவுக்கு (பாட்டுக்கச்சேரி) இவர்களை வண்டியில் அழைத்துச் செல்வார்கள். அங்கும் வேலாயுதம் அவர்களே ஆர்மோனியம் வாசிப்பார். அதையே அங்குள்ள முஸ்லீம் வாலிபர்களும் விரும்பினார்கள். இதைவிட, நளதமயந்தியில் தமயந்தியாகவும், மயில் இராவணனின் தங்கை தூரதண்டிகையாகவும் நடித்துள்ளார்.
அண்ணாவிமார்கள் திடீரென நடத்திய பவளக்கொடி நாடகத்தில், அர்ஜூனனின் மகனாக நடித்துள்ளார். எல்லா நாடகங்களிலும் வெற்றிகரமாகவே நடித்துள்ளார். இவரது ஆர்வம் நாடகத்திலும், இசையிலும் இருந்ததன் காரணமாக படிப்பில் கவனம் செல்லவில்லை. இவரால் ஐந்தாம் வகுப்புவரை தான் படிக்கமுடிந்தது. பெரும் பணக்காரரான இவரது மாமா கதிர்காமத்தம்பி, நன்றாகப் படிக்கும் ஆற்றல் உள்ள இவரை, இங்கிலாந்துக்கு அனுப்பிப் படிப்பிக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தார்.
மகனைப் பிரிய விரும்பாத இவரது அன்னையார், தன் சகோதரனின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, மகன் வேலாயுதத்தை தன்னுடனேயே தக்கவைத்துக் கொண்டார். அன்று, வோலாயுதம் அவர்கள் சந்தோசப்பட்ட போதும், பிற்காலத்தில் அதையிட்டு வேதனைப்பட்டார். திருவள்ளுவர், கம்பர் போன்ற மகான்கள் எத்தனை வகுப்புப் படித்தார்கள் என்று சொல்ல முடியுமா? என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, வகுப்பு ரீதியாக கற்காவிட்டாலும் முயன்று பார்க்கலாம் என்று எண்ணியே காலத்தைக் கழித்து விட்டார்.
கூத்துக்கலையின் ஆர்வத்தால் உந்தப்பட்டு கல்வியில் நாட்டம் குறைந்த போதும், இயல்பான இலக்கிய ஆற்றல் அவரை விட்டு மறையவில்லை. கலையில் தன் ஆற்றலால் எவ்வளவுக்கு மிளிர்ந்தாரோ அந்த அளவிற்கு இலக்கியத் திலும்,எழுத்து முயற்சியிலும் தன்னை வளர்த்துக் கொண்டார், உயர்த்திக் கொண்டார்.
மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக் கிந்தப்
பாரினில் துணையுமுண்டோ
எந்தையே தமிழுக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே நின் பிரிவால்
தவிக்குதே தமிழர் நெஞ்சம்
பைந்தமிழ் அன்னைக் கிந்தப்
பாரினில் துணையுமுண்டோ
எந்தையே தமிழுக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே நின் பிரிவால்
தவிக்குதே தமிழர் நெஞ்சம்
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வன்னிய சிங்கம் அவர்கள் மறைந்தபோது அவர் நினைவாக எழுதிய இது போன்ற மூன்று கவிதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. இதுவே வேலாயுதம் அவர்களின் இலக்கிய முதல் பிரவேசம். இவரது எழுத்துக்களுக்கு சுதந்திரன் முதற்கொண்டு,
தினபதி சிந்தாமணிவரை களமமைத்துக் கொடுத்து அறிமுகப்படுத்தி வைத்து ஊக்கமளித்தவர், பத்திரிகைத்துறை மேதாவி அமரர் திரு.எஸ்.ரி.சிவநாயகம் என்பதை நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.
இருந்தும் தனது அனேகமான கவிதை, கட்டுரைகளை வெளிக்கொணர்ந்து தனது எழுத்தாற்றலை வளர்க்க உதவியது வீரகேசரி - மித்திரன் பத்திரிகைகளே என்பதை அவர் மறக்கவில்லை. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக வீரகேசரியில் தம்பலகாமம் பகுதி நிருபராகவும் அவர் சிறப்பாகக் கடமையாற்றினார். செய்திகளைச் சுடச் சுடத் தெரிவிப்பதில் அவர் அசகாய சூரனாக விளங்கினார். அவர் நிருபராகக்
கடமையாற்றிய காலத்தில் தம்பலகாமச் செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல், கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தார்.
கடமையாற்றிய காலத்தில் தம்பலகாமச் செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல், கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தார்.
தம்பலகாமம் மக்கள் அகதிகளாக சூரங்கல், கிண்ணியா போன்ற இடங்களில் அவலமாக வாழ்ந்த போது அதை வெளிச்சம் போட்டு வெளியுலகிற்குக் காட்டி உடனடியாக நிவாரணம் கிடைக்க வழி செய்தார். தம்பலகாமம் பொது வைத்தியசாலையில் இந்திய அமைதிகாக்கும்படை முகாம் அமைத்திருந்த போது அதை எதிர்த்து எழுதி, அங்கிருந்த முகாமை உடன் அகற்ற ஆவன செய்தார். தொலைபேசி இணைப்பு தம்பலகாமத்திற்கு விரைந்து கிடைப்பதற்கும் இவரது எழுத்தே காரணமாக அமைந்தது. இவ்வாறு சமூக நோக்கோடு அவர் செயற்பட்ட காரணத்தால், இலங்கை இராணுவ விசாரணை ஒன்றிற்கும் முகம் கொடுக்க வேண்டி நேர்ந்தது.
இவரது முதலாவது கதை குமுதம் சஞ்சிகைகளிலும் வெளிவந்தது. அதுமட்டுமன்றி இதற்கான சன்மானத்தை இவ்விதழின் இலங்கை ஏஜன்சி மூலம் இவருக்குக் கிடைக்கும்படி அனுப்பி வைத்தார்கள். அந்தக் கதை சொல்லும் செயலும் என்பதாகும்.காலச்சுடர், ஆத்மஜோதி ஆகிய சஞ்சிகைகளில், சுதந்திரன், வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார்.
இவர் தம்பலகாமம் ஆதிகோணைநாதர்மேல் பதிகம் பாடியுள்ளார். தம்பலகாமத்தின் வரலாற்றை பின்னணியாகக் கொண்ட ரங்கநாயகியின் காதலன் ஆலங்கேணியைப் புலமாகக் கொண்ட அவள் ஒரு காவியம் என்ற இரு நாவல்களை எழுதிய போதும் அவை அச்சுவாகனம் ஏறவில்லை. இவரைப்பற்றி எதையும் நான் முன்பு அறிந்திருக்கவும் இல்லை, பழகியதும் இல்லை. வெறும் ஊடகவியலாளர் என்பது மட்டும் என் காதில் விழுந்த செய்தி. அண்மையில்தான் அவரைப்பற்றி அறிய நேர்ந்தது.
எமது ஒவ்வொரு நூல் வெளியீட்டின்போதும், நாம் பல்துறை சார்ந்த திறமைசாலி மூவரைக் கௌரவிப்பதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தோம். செயற்பட்டும் வந்தோம். அந்த வகையில் இராவணேஸ்வர இந்திர உலா நூல் வெளியீட்டின்போது, யாரை கௌரவிப்பது என்று நாம் கூடி ஆராய்ந்தபோது, இம்முறை கிராமத்துக் கலைஞர்களை - திறமைசாலிகளைக் கௌரவிப்பதென்று முடிவெடுத்தோம். அதன்பேரில் தம்பலகாமம் கிராமத்து பழம்பெரும் ஊடகவியலாளர் என்ற முறையில் இவரை அணுகினோம்.
அப்போதுதான் அவருடைய விஸ்வரூபத்தை எங்களால் தரிசிக்க முடிந்தது. அந்த அளவில் எங்கள் தேர்வை நினைத்துப் பெருமைப்பட்டோம். கௌரவித்தும் மகிழ்ந்தோம். இருந்தும் மனம் திருப்திப்படவில்லை. இவரது நூல் ஒன்றை வெளிக்கொணர வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானித்தோம். ரங்கநாயகியின் காதலனைத் தேர்ந்தெடுத்தபோது, அதை அவர் விரும்பவில்லை. காரணம் இதன் மூலப்பிரதியை - அசலை - ஒரு பல்கலைக்கழக மாணவி, நான் கூறியதாகக் கூறி, ஏதோ ஒரு ஆய்விற்காக வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். இதுநாள்வரை அதைத் திருப்பிக் கொடுக்க வில்லையாம். தன்னிடம் இருப்பது நகல் - அசல்போல் இருக்காதென்றார்.
நாம் பெற்றுச்சென்று வாசித்தோம். வேறு சிலரிடமும் வாசிக்கக் கொடுத்தோம். வாசித்த அனைவரும் வரவேற்றார்கள். எனவே நாம் இதை அச்சேற்ற முழுமனதோடு செயற்பட்டோம். எமது கிராமமான தம்பலகாமத்தில் இருந்து ஒரு குறு நாவலை வெளிக்கொணர்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். உடன்பட்டு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியருக்கு நன்றிகள். எமது வேண்டுகோளை ஏற்று இந்நாவலுக்கு அட்டைப்படம் வரைந்துதந்ததோடு, முன்னுரையும் தந்துதவிய கலை இலக்கிய கர்த்தாவான மாலையில் ஓர் உதயம் நாவல் ஆசிரியரும், தேசிய சேமிப்பு வங்கி மட்டுநகர் முகாமையாளருமான திரு ஆனந்தா, யு.பு. இராஜேந்திரா, அவர்கட்கும் ,அணிந்துரை தந்துதவிய இலக்கிய கர்த்தா திரு.வல்வை.ந. அனந்தராஜ் (உதவிக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்வித் திணைக்களம்) அவர்கட்கும், எமது நன்றிகள்.
இந்நூலை அழகுற வடிவமைத்து அச்சேற்றித் தந்த றெயின்போ அச்சக உரிமையாளர் அவர்கட்கும் அவர் தம் ஊழியர்கட்கும் எமது நன்றிகள். திருக்கோணமலை இலக்கிய வளர்ச்சியின் முயற்சிக்கு என்றும் ஊக்குவித்து உறுதுணையாய் நிற்கும் என் அன்பிற்குரிய பெருமதிப்பிற்குரிய என் இலக்கிய நெஞ்சங்களுக்கும் நன்றி கூறுவதோடு, நீண்ட நாட்களாக மறைந்து கிடந்த படைப்பினை வெளிக்கொணர உங்கள் பங்களிப்பு நிறைய உண்டு , நீங்களும் அந்தப் பெருமகனாரை வாழ்த்தி வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்
கலாவினோதன் கலாபூஷணம்,
த. சித்திஅமரசிங்கம்
23-11-2004.
த. சித்திஅமரசிங்கம்
23-11-2004.
No comments:
Post a Comment