Saturday, March 14, 2009

விசித்திரமான தேவலோகம்!

கட்டுரை
இக்கதையை விஸ்வாமித்திரர் இராமாயணத்தில் குலமுறை கிளர்த்தும் படலத்தில் இராம இலட்சுமணர்களுக்குக் கூறுகிறார். இதனால் தொடர் முயற்சிகளுக்குப் பகீரத முயற்சி என்றும் கங்கைக்குப் பகீரதி என்றும் காரணப் பெயர்கள் வந்தன.


இந்திர பதவி அடைய போட்டா போட்டி!
நாம் வாழும் இந்த மண்ணுலகம் மட்டும் தான் உள்ளதா? அல்லது வேறு உலகங்களும் உண்டா? இவ்வாறு நாம் எண்ண முடியாதபடி தெய்வப் புலமைத் திருவள்ளுவர், அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை என்று இன்னொரு உலகையும் அறிமுகப்படுத்தி வைக்கின்றார். தம்மைப்போல் உணவுண்டு வாழாமல் அருளைக் கொண்டு வாழும் அவ்வுலகம் தான் தேவருலகமான பொன்னுலகம் என்று தெரியவருகிறது. இந்தப் பொன்னுலகம் நாம் வாழும் இந்த மண்ணுலகுக்கு வித்தியாசமானதாக, விசித்திர நடைமுறைகளைக் கொண்டதாக இருக்கின்றமை தெரிகின்றது.

குறிப்பாக, முப்பது நாட்களைக் கொண்ட பன்னிரெண்டு மாதங்கள் முன்னூற்றி அறுபது நாள். மனிதர்களுக்கு ஒரு வருடம் மனிதர்களுக்கு இந்த ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். இந்த முறையில் கணக்கிட்டு நூறு தேவவருடங்களே சொர்க்க, மத்திய பூலோகம், பாதாளம் என்னும், மூன்று லோகங்களில் அதிபதியாகிய தேவராஜனின் பதவிக்காலம், நூறு தேவ வருடங்கள் சென்றதின் பின் பதவியில் இருந்த இந்திரன் தேசு குன்றி மறைய, தபோ பலத்துடன் புதிய இந்திரன் தேவர் உலக அரசுகட்டில் ஏறுவான் இந்திர பதவிக்கு உரித்தான உபயோகப் பொருள்களான ஏவும் இலக்கை நிர்மூலமாக்கும் மகா சக்தி வாய்ந்த வச்சிராயுதம் ஐராவதம் என்ற வெள்ளை யானை, உய்ச்சிரவம் என்ற வெள்ளைக் குதிரை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ரம்பை போன்ற ஆடல் அணங்குகள், கேட்டவைகளை நல்கும் கற்பகதரு காமதேனு மற்றும் இந்திர தேவனுக்குரிய போகப் பொருட்கள் அனைத்தும் புதிய இந்திரனிடம் வந்து சேரும்.

இப்படி நூறு தேவ ஆண்டுகள் சென்று பழைய இந்திரன் கழிந்து புதிய தேவ அரசன் ஆட்சிக்கு வருவது மரபாக இருந்தாலும் இந்திரர்களின் மனைவி இந்திராணி என்றும் இளமை குன்றாமல் பேரெழில் மங்கையாய் பதவிக்கு வரும் புதிய இந்திரர்களுக்கு மனைவியாக இருக்கும் நியதி உடையவள் என்றும் கூறப்படுகிறது. புலோமிசை என்று அமரர் உலகம் புகழ்ந்து பேசும் இந்திராணியால் எழுந்த விளைவுகளை மகாபாரதம் எடுத்துக் கூறுகிறது. திரிலோகாதிபதியான தேவராஜன் நூறுதேவ வருடங்கள் ஆட்சி செய்து மறைய தபோபலம் மிக்க புதிய இந்திரன் ஆட்சிக்கு வருவது தான் நேரான முறை. இவ்வித நேரான வழியில் வரும் இந்திரர்களுக்கே இந்திராணி மனைவியாக இருந்து வந்தாள். இந்த நேரிய வழியை விட இந்திர பதவியை அடைய இன்னொரு குறுக்கு வழியையும் சாஸ்திரங்கள் குறிப்பிட்டிருந்தன.

நூறு முறை எதிர்க்கும் வீரர்களையெல்லாம் தோற்கடித்து அவர்களிடம் திறைப்பொருள் வாங்கி நூறு அஸ்வமேதயாகங்களைக் குறையின்றி நிறைவு செய்யும் வீரனை யாகபலன் இந்திர பதவியில் இருத்தும் என சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அஸ்வமேதயாகம் செய்பவர் தன் வீர பராக்கிரமங்களை ஒரு பட்டயத்தில் எழுதி யாகக்குதிரையின் கழுத்தில் தொங்க விட்டு இக்குதிரையைப் பிடித்துக் கட்டிச் சமராட விருப்பமுள்ளவர் குதிரையைப் பிடித்துக் கட்டலாம் என்று சவாலான வாக்கியங்கள் பட்டயத்தில் எழுதப்பட்டிருக்கும் இப்படியான வீரவசனங்கள் கொண்ட பட்டயத்தினைக் கழுத்தில் கட்டிக்கொண்டு தன் விருப்பத்துக்கு செல்லும் யாகக் குதிரையை யாராவது பிடித்துக் கட்டினால் அவருக்கும் குதிரையுடன் வரும் சைன்யத்துக்கும் பெரும் போர் மூளும். அவரைத் தோற்கடித்து திறைப் பொருள் பெற்றே யாகக்குதிரையும் சைனியமும் மேலே செல்லும்.

இப்படி பாரத வேந்தர்களை , வீரர்களை நூறு முறை தோல்வியுறச் செய்து நூறு அஸ்வமேதயாகங்களை விக்கினம் இன்றிச் செய்து முடிக்கும் பலன் பழைய இந்திரனை நீக்கி விட்டு இந்திரபதவியில் இருத்தும் என்று கூறப்பட்டுள்ளது. பாரத தேச சூரியகுல, சந்திர குல வேந்தர் பெரும் பிரயத்தனங்களுடன் தொண்ணூறுயாகங்கள் கூடச் செய்துள்ளனர். நூறு யாகங்களைச் செய்ய யாராலும் முடியவில்லை இந்த யாக அனுஷ்டிப்பு இந்திர பதவியை எதிர் நோக்குவதாக இருப்பதால், பதவியில் இருக்கும் இந்திரன் ஏதாவது செய்து யாகம் நிறைவேறாமல் தடுத்து விடுவான்.

சகரர் என்ற சூரிய குல மன்னர் தன் வீரப் புகழை எழுதி குதிரைக்கழுத்தில் கட்டி குதிரையை தன் இஷ்டப்படி போக விட்டு குதிரைக்குப் பின்னால் தன் மக்களையும் பெரும் சைனியத்தையும் அனுப்பி இருந்தார். இந்திரன் மழைமேகங்களால் உலகை இருளச் செய்து குதிரையைப் பாதாளம் கொண்டு போய் கபில முனிவரின் ஆச்சிரமத்தில் மறைத்து விட்டான்.

யாகக் குதிரையை எங்கு தேடியும் காணாததால் சகர குமாரர்களும் படைகளும் வட கீழ் பகுதியில் பூமியைத் தோண்டி பாதாளம் சென்று கபிலர் ஆச்சிரமத்தில் குதிரையைக் கண்டனர், முனிவர்தான் குதிரையைக் கொண்டு வந்து மறைத்து வைத்தார் என்று தவறாக எண்ணிப் படையினர் ஆர்ப்பாட்டம் செய்ததால் முனிவர் கண்களைத் திறந்து பார்த்தார். முன் வரிசையில் நின்ற சகர குமாரர்களும் படையில் ஒரு பிரிவினரும் எரிந்து சாம்பராயினர். இதைக் கேள்வியுற்ற சகர மன்னர் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தார். அந்த அரச வம்சத்தினர் ஆட்சி செய்து இறக்கும் தறுவாயில் முனிவரின் பார்வையால் எரிந்த அரச குமாரர்கள் நற்கதி எய்தத் தக்க தருமங்கள் செய்யுங்கள் என்று கூறி மறைந்ததால் வரும் அரசர்கள் பெரும் முயற்சி செய்து வந்தனர்.

இந்தக் குலத்தில் பல மன்னர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பகீரதன் என்னும் மன்னன் சிவபிரானைக் குறித்தும் கங்கையைக் குறித்தும் விடா முயற்சியாய் மாறி மாறித்தவம் செய்துசிவ பெருமான் முடியில் இருக்கும் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்து எரிந்தவர்களின் அஸ்தியைக் கங்கை நீர் நனைத்ததால் சகர குமாரர்கள் நற்கதியடையச் செய்தான்.

இந்த விதமாகப் பதவியில் இருக்கும் இந்திரன் யாகக் குதிரையைக் கொண்டு போய் மறைத்து வந்ததால் நூறு அஸ்வமேத யாகம் செய்து குறுக்கு வழியில் இந்திர பதவியை அடைவதென்பது நடக்க முடியாத காரியமாகவே இருந்துவந்து.

தம்பலகாமம்.க.வேலாயுதம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments: