Tuesday, March 24, 2009

பண்புள்ள ஆடவர் பழக்கத்தால் மாதர்க்கு பழுதொன்றுமில்லை..



ஆண்கிளி :
காய்ச்சலால் நான் இங்கு படுத்திருக்க
கதிர் கொய்ய வயலுக்குப் போயிருந்தாய்
வாச்சது சந்தர்ப்பம் என்று மகிழ்ந்து
மாற்றானின் உறவில் மயங்கினாய் போ

பெண்கிளி :
என்ன புதிர்போட்டுப் பேசுகிறீர் அன்பே
ஏற்குமோ இத்துயர் வார்த்தையெல்லாம்
என்னைச் சிறுமையாய் ஏசிட உங்கட்கு
எவர் செய்த போதனை கூறிடுங்கள்.

ஆண்கிளி :
அந்தக் கிளியின் பெண் வந்து என்னிடம்
அறிவித்தாள் உங்கள் லீலைகளை.
சொந்தம் இனி இல்லை இங்கே வராமல்
தூர எங்கேயேனும் சென்று விடு

பெண்கிளி :
கதிர் கொய்யும் போதெந்தன் 

கண்ணிலே முள்பட்டு
கலங்கித் தவித்த வேளையிலே
உதவிக் கோடிவந்து உபகாரம் செய்த
உத்தமரைப் பழி கூறலாமோ?

ஆண்கிளி :
அன்புள்ள என் மனைக் கிழத்தியே நீ என்
சஞ்சல மனதைப் போக்கி விட்டாய்.
பண்புள்ள ஆடவர் பழக்கத்தால் மாதர்க்குப்
பழுதொன்றும் வாராதென்று உணர்த்தி விட்டாய்.

தம்பலகாமம்.க.வேலாயுதம்




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment