Sunday, March 15, 2009

அத்தான் என்றழைத்தால் என்ன குறைந்துவிடும்....?

 கவிதை
கன்னம் குழிய முறுவலித்துக்
காண்போர் நெஞ்சு கிறுகிறுக்க
மின்னலிடையில் கை கோர்த்து
மிடுக்காய் நிற்கும் தேன்மொழியே
பின்னல் சடையும் கதை பேசும்
பெரிய விழியும் உடைய என்
இன்பப் புதையல் போன்றவளே
எனக்கோர் முத்தம்தாராயோ

பந்தம் சிறிதுமில்லாமல்
பதுமைபோல நின்றிடுமென்
ஏந்திளையே என்ன குறை
இழைத்தேன் என்றியம்பிவிடு
காந்தள்க் கரத்தைப்பற்றிடவா?
கன்னம் சிவக்க தந்திடவா?
சாந்தம் தவழும் உன் முகத்தைச்
சற்றே திருப்பு என்பக்கம்

பட்டுப்புடவை சரசரக்க
பருவச் செழிப்பில் அழகொளிரும்
கிட்ட நெருங்கும் உன் வரவால்
கிளர்ச்சி தோன்றும் என்னிடத்தில்
வட்ட நிலவு வதனத்தில்
வளைந்து தோன்றும் புருவங்களுள்
சிட்டுக் குருவிக் கருவிழிகள்
செய்யும் விசமச்செயலென்ன?

முத்துக் கோர்வைப் பல்வரிசை
முழுவதும் தெரியச்சிரித்திடுமென்
அத்தை மகளே உனை அடைய
அனேக காலம் காத்திருந்தேன்
புத்தம் புதிய பட்டுடையில்
பொலிவுற்றிலங்கும் பூங்கொடியே
அத்தான் என்று ஒரு வார்த்தை
அழைத்தால் என்ன குறைந்துவிடும் ?

தம்பலகாமம்.க.வேலாயுதம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: