Friday, March 13, 2009

நீதி காத்த பாண்டிய மன்னர்கள்

கட்டுரை
இந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக விளங்கினர். சங்கம் அமைத்துப் புலவர்களுடன் தாங்களும் உடனிருந்து ஆராய்ந்து இவர்கள் தமிழ் வளர்த்தனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.
இம்மன்னர்கள் கல்வியில் சிறந்த மேதைகளாகவும், தங்கள் ஆட்சியில் நீதி பிழைத்தால் தங்கள் உயிரை ஈந்து செங்கோலை நிமர்த்தும் நீதி மன்னர்களாகவும், வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பராக்கிரமசாலிகளாகவும் விளங்கினர் என்பது வரலாறு. நெடுஞ்செழியன் மன்னன் கல்வி கற்றலை மனித வாழ்க்கையில் பெரும் பயனாகக் கருதுபவனாகத் திகழ்ந்தான். இவன் பாடிய பின்வரும் பாடல் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

உற்றுழியுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலாற்றாயுமனந் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக வென்னாதவருள்
அறிவுடையோனாரரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாள் பாலுள்ளும்
கீழ்ப்பாலொருவன் கற்பின்
மேற்ப்பாலொருவனும் அவன் கட்படுமே.
(புறநாநூறு)

ஆசிரியருக்கு ஒரு ஊறு நேர்ந்தால் உடனே விரைந்து உதவியும், பொருளுமீந்து கற்றலே மிகவும் இன்றியமையாதது. ஒரு தாய்வயிற்றில் பிறந்தோரில் மூத்தோன் வருக என அழைத்தாலும் அவர்களுள் கற்ற அறிவுடையோனின் வருகையையே சபையும், அரசும் விரும்பும்.நாற்குலத்தோரும் கற்றவனை வணங்குவார்கள். இப்படி அரசர் கற்றலின் சிறப்பைச் சிலாகித்துக் கூறுகிறார்.

கண்ணகி வழக்கில் தன் தவறுணர்ந்தும் கோவலன் கள்வனல்லன், யானே கள்வன் என்றரற்றி அரசு கட்டிலில் அமர்ந்தபடியே உயிர் துறந்து வளைந்த செங்கோலை நிமிர்த்தி நீதி காத்தான் அந்த அரசன். படைகொண்டு வடநாடு சென்று ஆரிய அரசர்களை அடக்கி வெற்றி வாகைசூடியதால் இளங்கோவடிகளது அருமைத் திருவாக்கால் இந்த அரசன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று பாராட்டப்பட்ட மன்னர்.

பாண்டிய வேந்தர்களில் பெரும்பாலானோர் நிறை கல்விமான்களா கவும், சிவபக்தர்களாகவும் விளங்கினர். தலையாலகானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், வீரத்துக்குப் புகழ் சேர்த்தவன். சித்திர மாடத்தில் துஞ்சிய நன் மாறனின் புதல்வனான இவன் இளைஞனாக இருந்தபோது தந்தை இறந்ததால் இளமையிலேயே அரசு கட்டில் ஏறினான்.

இராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, சேரன் யானைகட்சேய் மந்தாரஞ் சேரலிரும் பொறை, திதியன், எழினி, எருமையூரான், இருங்கோவேண்மான், பொருனன் ஆகிய ஏழு மன்னர்களும் படைகளுடன் வந்து பாண்டி நாட்டைச் சூழ்ந்து கொண்டனர். நெடுஞ்செழியன்மீது போர் தொடுத்தனர். அது கண்டு வெகுண்ட பாண்டிய இளவல் சமர்க்களம் சென்று கடும் போர் தொடுத்தான். இந்த இளம் வீரனின் ஆற்றலுக்காற்றாது அந்த ஏழு மன்னர்களும் படைகளும் புறமுதுகிட்டு ஓடியும், விடாது போர்ப்பறை முழங்க துரத்திச் சென்று தலையாலங்கானத்தில் மறித்துப் பெரும் வெற்றி வாகை சூடினான்.

இவன் இவ்வளவோடு நில்லாமல் பகைவர்களின் உறையூர், வஞ்சி ஆகிய தலை நகரங்கள்வரை துரத்திச் சென்று நாடுகளைத் தன்னடிமைப்படுத்தினான். அதன் காரணமாகவே இம்மன்னனுக்குத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற அடைமொழியுடன் கூடிய பெயர் வழங்கப்பட்டது என்று புறநாநூறு கூறுகின்றது.

கி.பி. 125ஆம் ஆண்டில் பாண்டிய இராச்சியத்தின் அரியாசனம் ஏறிய சுந்தர பாண்டியன் தென்னிந்தியாவிலுள்ள சேர, சோழ, பல்லவ, தெலுங்கு, கர்நாடக, போசன போன்ற எல்லா அரசர்களையும் வென்று தன்னடிமைப்படுத்தி ஒவ்வொரு அரசின் தலைநகரிலும் வீராபிஷேகம் செய்தான். எம்மண்டலமும் கொண்ட சுந்தரபாண்டியன் என்ற புகழ்பெற்று செங்கோலோச்சினான் எனக் கல்வெட்டுகள், வரலாறுகள் தெரிவிக்கின்றன. 

இவ்வேந்தன் தில்லையம்பலம், திருவரங்கம் போன்ற பேராலயங்களுக்குப் பொன் வேய்ந்து பொன்வேய்ந்த பெருமான் என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றான். இம்மன்னனின் புகழ்நிலை பற்றி அக்காலப் புலவர் ஒருவர் இவ்வாறு பாடியுள்ளார்.
வாழ்க கோயில் பொன் வேய்ந்த மகபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தரபாண்டியன் தென்னவனே

இலங்கை அமைச்சர் ஒருவரின் வேண்டுகோளுக்கமைய தன் தம்பி சடையவர்மன் வீரபாண்டியனைப் பெரும் படையுடன் இங்கு அனுப்பி வைத்தான். வீரபாண்டியன் இலங்கையில் பல வெற்றிப் போர்களை நிகழ்த்தி இலங்கையரசருள் ஒருவனைக் கொன்றும் மற்றொருவனுக்கு முடிசூட்டி திருகோணமலை, திரிகூடகிரி என்பவற்றில் கயல் இலச்சினையைப் பொறித்து மீண்டான் என வரலாறு கூறுகின்றது. இவ்வீரபாண்டியன் தன் சகோதரனாகிய சுந்தரபாண்டியனைப் போல் கொங்கு நாடு, ஈழநாடு, விஜயகண்ட கோவலன் நாடு ஆகியவற்றையும் வென்றவன். பல்லவ அரசனிடம் திறைபெற்றுத் தில்லைமா நகரில் சிவகாம கோட்டத்துக்கு தென்புறமுள்ள நூறுகால் மண்டபத்தில் கி.பி. 1267ஆம் ஆண்டில் வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் செய்து கொண்டான். இதனால் அம்மண்டபம் வீரபாண்டியன் திருமண்டபம் என்னும் பெயர் எய்தலாயிற்று என்றும் அம்மண்டபத்தின் முன்வாயிலில் அப்பெயர் பொறிக்கப்பட்டிருத்தலை இன்றும் காணலாம் என்றும் சொல்லப்படுகின்றது. பேராசிரியர் சதாசிவப்பண்டாரத்தார் இது பற்றி தெளிவுபடக் கூறியிருக்கிறார்.

பாண்டிய மன்னர்கள் சிவ பக்தர்களாகவும், கற்றுத் தேர்ந்த புலவர்களாகவும், மாவீரர்களாகவும் விளங்கினர் என்பதை வரலாற்றில் காணமுடிகிறது. தென்நாடு முழுவதும் வென்று இலங்கை வரை சென்று தங்கள் புகழ் பரப்பியவர்கள் சடைய வர்மன் சுந்தர பாண்டியனும், இவன் தம்பி வீரபாண்டியனுமாவார். அலாவுடீன் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக்கபூரின் படையெடுப்பால் மதுரை மாநகரும், பாண்டிய இராச்சியத்தின் பல பகுதிகளும் முகமதிய வீரர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. ஆலயங்கள் தகர்க்கப்பட்டன. மக்கள் என்றும் அறியாத துன்பத்தில் ஆழ்ந்தனர்.

மாலிக்கபூர் பொன்னையும், பொருளையும் கொள்ளையடித்துச் சென்றான் என பார்னி எனும் ஆசிரியர் கூறியுள்ளார். மாலிக்கபூரின் கொள்ளையடிப்பைத் தொடர்ந்து பாண்டிநாடு  பகைஅரசுகளின் வேட்டைக்காடாகியது. பாண்டிய இராஜ்யத்தில் இடம்பெறும் அநீதிகளையும், இந்துமத ஒடுக்கத்தையும் கேள்வியுற்ற விஜயநகர மன்னர் குமார கம்பண்ணர் பெருமையுடன் தமிழ் நாட்டிற்கு வந்தார். விஜயநகரப் பேரரசர் குமார கம்பண்ணரின் பட்டத்துத் தேவி கங்காதேவி கணவரின் வெற்றி குறித்து எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலின் தமிழாக்கம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருநாள் இரவு தன் கணவரின் கனவில் ஒரு தெய்வப்பெண் தோன்றிப் பாண்டிநாட்டில் பகைவர்ஆட்சியினால் மக்கள் அடையும் துன்பத்தையும், திருக்கோயில்கள் இடிபடுவதையும், வைதிக சமயம் இழிவு படுத்தப்படுவதையும் எடுத்துக் கூறினாள். தன் கையில் உள்ள வாளை மன்னர் கையில் கொடுத்தாள். இவ்வாள் சிவபெருமானால் பாண்டியர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவ்வாள் படையை எடுத்துப் போர் புரியும் வன்மை பாண்டியர்களுக்கு இல்லாது போகவே அகத்தியரிடம் வந்தது. அகத்தியர் இந்த ஆயுதத்ததை என்னிடம் தந்து உன்னிடம் கொடுக்கும்படி கூறினார். ஆகவே இந்த வாளினால் பகையை வென்று பாண்டி நாட்டையும் மக்களையும் காப்பாயாக என்று கூறி மறைந்தாள். இப்படி மதுரா விஜயம் கூறுகின்றது.இதன் பின் கல்வியிலும், நீதியிலும், வீரத்திலும் புகழ் பெற்று விளங்கிய பாண்டியப் பேரரசு அருகிமறைந்தது என்று அறியமுடிகிறது.

தம்பலகாமம்.க.வேலாயுதம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிபாக பிடிக்கும்,
    படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
    அதிலும் கலைஞர் பத்தின பதிவை கண்டிப்பாக பாருங்கள்
    http://sureshstories.blogspot.com/

    ReplyDelete
  2. மிகவும் அருமை

    ReplyDelete
  3. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete