
இந்த நில உலகில் பரிசுத்தமான,தூய்மையானவைகள் செடிகளில் அன்றாடம் மலரும் பூக்களே. எனவேதான் மனிதர்கள் இறைவனுக்குப் பூக்களை அர்ச்சித்து வணங்குகின்றனர். ஆயினும் இந்த மலர்களை விட இறைவனுக்கு மிகவும் விருப்பமான பொருள் மனிதனிடம் இருக்கின்றது என்று சுவாமி விபுலானந்தர் பின்வருமாறு கூறுகின்றார்.
வெள்ளை நிறப்பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல உள்ளக்
கமலமடி உத்தமனார் வேண்டுவது
கமலமடி உத்தமனார் வேண்டுவது
என்று.
இரத்தம் ஒழுகும் இறைச்சியை சப்பி ருசிபார்த்து நல்லது எனக்கண்ட இறைச்சியை காளாத்தி நாதனுக்குப் பிரசாதமாக படைத்த வேடன் கண்ணப்பனுக்கு, ஈசன் அருள் புரிந்தான். மனிதனின் கள்ளம்,கபடமற்ற தூய்மையான இதயத்தையே பரமன் விரும்புகின்றான் என்பதை இது உணர்த்துகின்றது. ஆன்ம மேம்பாட்டை நாடிச் செயற்படும் மனிதர்கள் இதய சுத்தமாக ஒழுகுவது மிகவும் இன்றியமையாதது.
தூய்மை மிக்க மலர்கள் தெய்வத்துக்கு அர்ச்சித்து வணங்கும் சிறப்பும், மேன்மையும் உடையன. ஆயினும் தமிழ் நங்கையர்களுக்கும் மலர்களுடன் தொடர்பு இருந்து வருவதைக் காணமுடிகிறது. பழைமையில் செண்பக பாண்டிய மன்னன் தன் பட்டமகிஷியோடு பூங்காவில் இருந்தபோது அரசியின் கூந்தலில் இருந்து வீசும் நறுமணம் இயற்கையானதா? செயற்கையானதா? என்பதை அறியப் புலவர்களிடையே ஒரு கவிதைப் போட்டியை நடத்தியதாகவும் அதில் கவிதை எழுதி இறையனார் புலவர் நக்கீரனிடம் ஜெயம் அடைந்ததாகவும் புராணங்கள் சொல்கிறது.
ஸ்ரீரங்கநாத சுவாமிக்காகக் கட்டப்படும் பூமாலைகளை அந்த வீட்டுப் பெண்மணி தான் அணிந்து அழகுபார்த்து விட்டுத்தான் கோயிலுக்குக் கொடுத்தனுப்புவாராம். இதனால் அந்தப் பெண்ணுக்கு சூடிக்கொடுத்த நாச்சியார் என்று காரணப்பெயர் வந்ததாகவும் இலக்கியங்கள் பேசுகின்றன. தெய்வத்துக்கு அர்ச்சித்து வணங்கும் இந்தத் தூய்மை மிக்க மலர்களில் தமிழ் நங்கையர்களுக்குத்தான் என்ன ஆசையோ?கூந்தலில் மலர் சூடுவதைத் தங்கள் பாரம்பரிய வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் பெண்கள் மட்டுமன்றி கூந்தலில் மலர் அணியும் வழக்கம் இந்துப் பெண்கள் எல்லோரிடமும் இருந்தது என்பது புலனாகின்றது. கல்வியில் பெரிய கம்பர் தன் இராமாயணத்திலே ஜானகி கூந்தலில் மலர் சூடி இருந்தாள் என்று பின்வருமாறு கூறுகின்றார்.
வெள்ளெருக்கம் சடைமுடியான்
வெற்பெடுத்ததிருமேனி
மேலும் கீழும்,
உள்ளிருக்க இடமின்றி உயிரி
ருக்கும் இடம் நாடி அழைத்த
வாறோ
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்
ஜானகியை மனச்சிறையில்
சுரந்த காதல்
உள்ளிருக்கும் என நினைந்து
உடல் புகுந்து தடவியதோஒருவன்
வாளி
மேலும் கீழும்,
உள்ளிருக்க இடமின்றி உயிரி
ருக்கும் இடம் நாடி அழைத்த
வாறோ
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்
ஜானகியை மனச்சிறையில்
சுரந்த காதல்
உள்ளிருக்கும் என நினைந்து
உடல் புகுந்து தடவியதோஒருவன்
வாளி
(கம்பராமாயணம் - யுத்தகாண்டம்)
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை என்று இராமாயணச் செய்யுள் கூறுவதால் தமிழ் நாட்டு தமிழ்ப் பெண்கள் மட்டுமன்றி சீதா போன்ற வடநாட்டு இந்துப் பெண்கள் அனைவரும் கூந்தலில் பூ அணியும் வழக்கமுடையவர்களாக இருந்து வந்தனர் என்று தெரிகிறது.
உலகில் பலநூறு கோடிப் பெண்கள் வாழ்ந்தாலும் கூந்தலில் மலர் சூடும் பெண்கள் தனி அழகையும் லட்சுமீகர வனப்பையும் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தம்பலகாமம்.க.வேலாயுதம்
No comments:
Post a Comment