Monday, December 21, 2009

நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / Novel Influenza A H1 N1


இலங்கையில் இதுவரை (10.12.2009) நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 எனப்படும் வைரஸ் தொற்றுக்குள்ளாகி 23 பேர் மரணமடைந்துள்ளனர். 420 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.'

இது போன்ற செய்திகளை நாளும் நாம் கேட்டவண்ணம் இருக்கிறோம். எனவே இந்தத் தருணத்தில் இந்நோய் பற்றிய சிலவிடையங்களை நாம் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.

இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 என்பது ஒருவகை வைரஸ். இது சுவாசத்தொகுதி மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதில் நோயை உண்டாக்கும் அதேவேளை , இலகுவில் ஒருவரில் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.

Tuesday, December 15, 2009

ஆனந்தவெளி வலைப்பூ


சண்முகம் அருளானந்தம் ( கேணிப்பித்தன்) அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை ,நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர். இதுவரை அவரது 31 நூல்கள் வெளிவந்திருக்கிறது. இறுதியாக வவுனியாத் தமிழ் சமூகம்(80 களில்) படும் அவலங்களைச் சித்தரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் எனும் அவரது நாவல் வெளியிடப்பட்டது.

Tuesday, December 08, 2009

வீடு - ஞாபகச்சிதறல்


புலம் பெயர்ந்தவர்கள், இந்திய ஏதிலி முகாம்களில் இருப்பவர்கள் , எங்கென்றும் தெரியாமல் காணாமல் போனவர்கள் , நாடுகடக்கையில் சிறைப்பட்டுப் போனவர்கள் என்று நீண்டு செல்லும் வகைப்பாடுகளில் நாங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். பெயரில் இத்தனை பிரிவுகளிருந்தாலும் ஒருவகையில் நாங்களனைவரும் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவர்கள்.

Thursday, December 03, 2009

தாமரைத்தீவான்

தாமரைத்தீவான்
'தீர்த்த நாளான இன்று
ஒரு நூல் கோர்த்தநாளானது '

1981 ஆம் ஆண்டு தீர்த்தக் கரையில் அமரர் தம்பலகாமம் . க. வேலாயுதம் அவர்களால் பாடப்பட்ட தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது தாமரைத்தீவான் அவர்களால் பாடப்பட்ட பாவின் முதலிரு வரிகளிவை. இந்நிகழ்வின் போது நான் சிறுபிராயத்தவனாகையால் பின்னாளில் அப்பாடலை அப்பா வைத்திருந்த ஒலிப்பதிவில் இருந்தே கேட்டேன்.தமிழ் அவர் நாவில் தவழும் விதமே அலாதியானது. அக்கவிவரிகள் இன்றும் எனக்கு அவர்குரலில் ஞாபகம் இருக்கிறது.

Saturday, November 07, 2009

ச.அருளானந்தம் / கேணிப்பித்தன்

கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை ,நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர். இதுவரை அவரது 31 நூல்கள் வெளிவந்திருக்கிறது. இறுதியாக வவுனியாத் தமிழ் சமூகம்(80 களில்) படும் அவலங்களைச் சித்தரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் எனும் அவரது நாவல் வெளியிடப்பட்டது.

Thursday, October 29, 2009

உதய தரிசனம் - புகைப்படங்கள்



பதினேளுவருடங்களுக்குப் பின்பாக தம்பலகாமத்திலுள்ள எமது வீட்டில் இருந்து தரிசித்த உதயம் உங்கள் பார்வைக்கு. இறுதியாகவுள்ள மூன்றுபடங்களும் கிண்ணியாவிலுள்ள சிறிய பாலத்தருகில் எடுக்கப்பட்டது.

த.ஜீவராஜ்

Tuesday, October 20, 2009

ரொபின் ஹூட் / ROBIN HOOD


நீண்டநாளைக்குப் பிறகு Robin of Sherwood தொலைக்காட்சித் தொடரின் ஒருபகுதியைப் பார்க்கக்கிடைத்தது. எப்போதோ கொழும்பு சென்றிருந்தபோது வாங்கிய இறுதட்டை கணிணிக்குள் சுழலவிட்டபோது கூடவே என் ஞாபகங்களும் சுழன்று பின்னோக்கிச் சென்றது.

Monday, October 12, 2009

திருகோணமலை / இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி



1990இல் மீண்டும் ஊர்திரும்பியபோது, சொந்த ஊரில் 6000 பேரைக்கொண்டு அமைக்கப்பட்ட அகதிமுகாமாக மகாவித்தியாலயம் மாறியது வாழ்வில் மறக்கமுடியாத கொடுமை.
தொடர்கிறது....

90 இன் இறுதிப்பகுதியில் உயிர்ப்பயம் காரணமாக என்னுடன் எனது கல்விக்கான தேடலும் திருகோணமலை நோக்கி இடம்பெயர்ந்தது.
கிராமத்தில் இருந்து வந்த என்னை நகரத்துக்கேயுரிய பல ஆச்சரியங்களோடு அரவணைத்துக்கொண்டது கோணேஸ்வரா வித்தியாலயம். உறவுகளைப்பிரிந்து வந்துபடித்த எனக்கு சில நாட்களுக்குள்ளாகவே ஒருகுடும்பத்தின் அரவணைப்பைத் தந்தது அந்தப் பாடசாலை.அப்போது ஒருசுவர் இடைவெளியில் சகோதரப் பாடசாலையாக இந்துக்கல்லூரி இயங்கிக்கொண்டிருந்தது.

வாழ்வின் சுமைகள் தெரியாத வயதின் மிகச் சுறுசுறுப்பான காலப்பகுதியது. மாவட்டரீதியான போட்டிப் பரீட்சைகள் , தமிழ்த்தினப்போட்டி , விளையாட்டுப்போட்டிகள் , BAND இசை நிகழ்ச்சிகள் , சாரணர் அமைப்பு , கலை ,இலக்கிய ,சமய நிகழ்வுகள் எனப்பலதரப்பட்ட வழிகளூக்கூடாக எங்களைப் பண்படுத்தியது எமது பாடசாலை.

1993 ஆம் ஆண்டு எமது பாடசாலையும், சகோதரப் பாடசாலையான இந்துக்கல்லூரியும் இணைந்து இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி எனும் பெயரில் தேசியப்பாடசாலையானது. இதன்மூலம் திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது தேசிய பாடசாலையாக எமது பாடசாலை தரமுயர்ந்தது.

கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் வாழ்வின் பலபாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது இங்குதான். திருகோணமலை வாழ்த்தமிழர்களின் வாழ்வியல், சமயவிடையங்களுக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கியதோடல்லாமல் நிறைய சாதனையாளர்களையும் சமூகத்துக்குத் தந்தது இந்தக் கல்விநிறுவனம்.

கல்வி, விளையாட்டு ,கலைவிழாக்கள் ,சமயநிகழ்வுகள் மற்றும் பல கல்விசாரா நிகழ்வுகளில் சிறப்புறச் செயற்பட்ட இக் கல்விக்கூடத்தின் வரலாறு 1897 இல் ஆரம்பிக்கிறது. திருகோணமலையில் வாழ்ந்த சில இந்துப்பெரியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைகள் இந்து தமிழ் ஆண்கள் பாடசாலை, இந்து ஆங்கில ஆண்கள் பாடசாலை என இருபிரிவுகளாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது.

1925 இல் இருபாடசாலைகளும் இராமகிருஷ்ண சங்கத்துக்கு கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் துரிதவளர்ச்சியடைந்தது.

அதிபர் ,ஆசிரியர்களது அயராத உழைப்பால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளில் பல இடர்பாடுகளையும் , சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்தும் மாவட்டத்தின் முன்னணிக் கல்வி நிறுவனமாகச் செயற்பட்டுவருகிறது எமதுபாடசாலை.

தேக்கிவைத்திருக்கும் ஞாபகங்கள் அனைத்தையும் எழுத்துருவாக்க முடியாவிட்டாலும், வருடங்கள் பலகடந்து படித்த பாடசாலையின் நினைவுகளை மீட்டுப்பார்க்கையில் சிலிர்ப்பேற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

த.ஜீவராஜ்

Wednesday, September 30, 2009

கும்பவிழா - படத்தொகுப்பு


(கும்பம்)
விஜயதசமியன்று திருகோணமலையில் நடைபெறும் கும்பவிழா சிறப்பானதாகும்.அன்று இங்குள்ள ஆலயங்களில் கும்பங்கள் , கரகங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அன்றிரவு முழுவதும் வீதிவலம் வருவது வழமையாகும்.

'கும்பம்' பெரிய செப்புக்குடத்தில் வேப்பம் பத்திரத்தினால் அகலமான அடித்தளம் அமைக்கப்பட்டு ,தேவையான உயரத்திற்குத் தேர்போல பூக்களாலும், வர்ணக்காகிதத்தாலும் அலங்கரித்துக் கட்டப்படுகிறது. கும்பத்தின் அடிப்பாகம் அகன்றும் மேலேசெல்லச்செல்ல ஒடுங்கியும் செல்லும்.



கும்பம், கரகம் என்பவற்றைத் தாங்கி வருபவர்களுடன் ராஜமேளம் அடிப்பவர்களும்,உடுக்கடித்து காவியங்கள் ,காவடிச் சிந்துகள் பாடுபவர்களும், பக்தர்களும் வருவார்கள்.

ஒவ்வொரு ஆலயங்களிலும் இருந்தும் புறப்படும் கும்பங்கள் மற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு புறப்பட்ட இடத்தைச் சென்றடைவதுடன் இவ்விழா நிறைவுபெறும். இதன்போது பக்கதர்கள் தம் வீட்டுவாசலில் நிறைகுடம் வைத்து கும்பத்தினை வரவேற்பர்.
த.ஜீவராஜ்
படங்கள் - (NOKIA N70)
28.09.2009


Friday, September 04, 2009

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் களிப்பூட்டும் சிரிப்புக் கவிதைகள்


கல்வியில் பெரியவன் கம்பன் என்ற சொற்றொடர் பிரசித்தம் வாய்ந்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாம்பின் கால்களை இன்னொரு பாம்பினால் தான் நன்கு அறிய முடியும் என்று கூறுவதற்கேற்ப ஒரு புலவராகிய இவர் இன்னொரு பெரும் புலவராகிய கம்பரைப் பற்றி நன்கு அறிந்து நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

கம்பரின் கவித்திறன் ஆச்சரியமானது என்பது பாரதியின் வாதம். கவி அரசர் தமிழ் நாட்டின் தலைசிறந்த புலவர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் கம்பரை முன் வைத்துப் பேசுவதையும் கம்பர், வள்ளுவர், இளங்கோ என்று கம்பரை முன்வைத்துப் புலவர்களை வரிசைப்படுத்திக் கூறுவதையும் கம்பனென்ற மானிடன் பிறந்து நடமாடிய தமிழ் மண்ணில் தாமும் பிறந்து வாழ்வதை இட்டுப் பாரதியார் பெருமை கொள்வதையும் காண முடிகிறது.

உயரிய கருத்துக்களை ஓசை நயத்துடனும் உவமான அழகுடனும் கவிதை உருவில் எடுத்துக் கூறுவதில் ஈடு இணையற்றவராக இருப்பதுடன் சிரிப்பூட்டும் நகைச்சுவைப் புலமையிலும் கவிச்சக்கரவர்த்தி நிகரற்று விளங்குவதைக் காணலாம். 

Thursday, September 03, 2009

ஒப்பாரி வைத்தரற்றும் ஓலமே !...


தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்கள் மறைந்தபோது அவர் நினைவாக எழுதிய இது போன்ற மூன்று கவிதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. இதுவே தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் இலக்கிய முதல் பிரவேசம் ஆகும். 


மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக்கிந்த
பாரினில் துணையுமுண்டோ
எந்தையே தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே நின்பிரிவால்
தவிக்குதே தமிழர் நெஞ்சம்

முன்னை நற் பெருமையோடு
முடிபுனைந் தரசு செய்த
கன்னியெம் தமிழ்த்தாய் ஈன்ற
கடமையில்ச் சிறந்த வீரர்
வன்னிய சிங்கம் என்னும்
வான்புகழ் கொண்ட கோவே
உன்னைநாம் பிரிந்ததாலே
உளமதில் அமைதியற்றோம்


மூப்பினில் தினையளவும்
மூழ்கிடா இளவயதில்
கோப்பாயாம் தொகுதி தந்த
கோமகன் பிரிந்தார் என்னில்
அப்பாவித் தமிழர் கூட்டம்
ஆதரவற்றோராகி
ஒப்பாரி வைத்தரற்றும்
ஓலமே ஈழமெங்கும்


தம்பலகாமம்.க.வேலாயுதம்
நன்றி சுதந்திரன்

கவிச் சக்கரவர்த்தி நிகழ்த்திய ருசிகர விளக்க உரை!


நான்காண்டு கற்றும் வகுப்பில் சித்தியெய்தாமல் வறுமையின் தீவிரத்தால் கற்றலை நிறுத்தியவன், வாலிபனாகித் திருமணம் செய்துகொண்ட பின் காட்டில் சென்று விறகுவெட்டிச் சுமந்து வந்து விற்று, அவனும் மனைவியும் மிகக் கஷ்டமாகச் சீவித்து வந்தனர்.

Thursday, August 13, 2009

ஓராண்டு நிறைவில் ஜீவநதி


ஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் என்னைச் சுற்றி நிறைய நடந்துவிட்டிருக்கிறது.

Tuesday, August 11, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு



அன்புடைய இலங்கை வலைப்பதிவாளர்களுக்குநீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட இலங்கை வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு இந்த மாதம் நடைபெற ஏற்பாடகியுள்ளது.
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

Tuesday, July 21, 2009

ஆச்சரியம் தரும் நம்பிக்கைகள் - புகைப்படங்கள்




இன்று மிகுந்த மன உளைச்சல் நிறைந்த நாளாக இருந்தது. ஆர்வமில்லாமல் சோர்வுடன் மின்னஞ்ல்களைப் படித்துக்கொண்டிருந்தபோது நண்பர் முகமட் முனாஸினால் அனுப்பப்பட்டிருந்த NEVER LOSE HOPE எனத்தலைப்பிடப் பட்டிருந்த மின்னஞ்சல் படங்கள் மனதில் மீளப்புத்துணர்ச்சி ஊட்டியது.

படத்தில் இருப்பவரின் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் நிறைந்த சந்தோசமான முகம் என் சோர்வுகளைக் கணநொடியில் நீக்கி பழையபடி உற்சாகமாக வேலைகளில் ஈடுபடத்தூண்டியது. அப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நண்பருக்கு நன்றிகள்.

Sunday, July 12, 2009

தமிழ் கேட்க ஆசை


{கட்டுரைத் தொகுப்பு}
வெளியீடு –பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம், தம்பலகாமம்.

திரு. தம்பலகமம் க. வேலாயுதம் அவர்களின் தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பை வாசித்த போது, எனக்கு விநோத மஞ்சரி என்ற நூலே ஞாபகத்திற்கு வந்தது. தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பில் முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. அன்றைய நிலையில் விநோத மஞ்சரிக் கட்டுரைகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் இவரது கட்டுரைகள் முக்கியமானதும் அவசியமானதுமே. இவரது கட்டுரைகளில் பல இந்த மண்ணின் - இவரது மண், தம்பலகாமம் மண்ணின் வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. சில கட்டுரைகள் ஆய்வை நோக்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதன் தன்மையில் தனித்துவமாகவே இருக்கிறது. திறமையாக எழுதப்பட்டிருக்கிறது.

வாசிப்பு ஒருவனை அறிவாளியாக்கும் என்பதற்கு தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ஒரு உதாரணம் என்றால் அது மிகையாகாதது மட்டுமல்ல பொய்யுமல்ல. தம்பலகாமம் கிராமம் எத்தகைய வளங்களையுடையது என்பதை அறிந்தவர்கள்தான் அறிவார்கள். கல்வி வசதி குறைந்த, நூல் நிலையங்களோ, நூல் சந்தை அகங்களோ அற்ற அக்கிராமத்தில் (தன் தேடல்மூலம் நூல்களைத்தேடி வாசித்து) வாழ்ந்த க.வேலாயுதம் அவர்கள் அதனூடாக தன் கலை இலக்கிய உணர்வுகளை வெளிக்கொணர்வதில் மற்றவர்களைவிட எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல என்பதை, தமிழ் கேட்க ஆசை என்ற நூலின் மூலம் நிரூபித்துள்ளார்.

Tuesday, July 07, 2009

பிரஷாந்தனின் புகைப்படங்கள்








இவைபோல பல அழகுகொஞ்சும் படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையைச் சேர்ந்த பிரஷாந்தன். சிறுவயது முதலே புகைப்படத்துறையில் ஆர்வங்கொண்டுள்ள பிரஷாந்தன் தனது கைப்பேசிக் கமராவைப் பயன்படுத்தி (sonyericsson k800i phone, nokia 7600 ) எடுத்த புகைப்படங்களில் சிலவற்றையே இங்கு பார்த்தீர்கள்.

மேலும் புகைப்படங்களைக்காண



பிரஷாந்தன் சிறைப்பிடித்த வண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதோடு, ஒரு நண்பனாக எனது பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.