Monday, December 08, 2008

மீள்குடியமர்வு

கவிதை
சொல்லிலடங்காத
சோகங்களின்
தொகுப்பு


பட்டவர் அன்றி
மற்றவர் புரிந்திடா
உணர்ச்சிகளின் குவியல்

கூரைபிளந்து
வானம் பார்த்திருக்கும்
வீடு

செடிகொடி வளர்ந்து
காடாய்க் கிடக்கும்
வளவு

குதுகலத்தோடு வாழ்ந்த
குடிதனின் நிலைகண்டு
குளமாகும் கண்கள்

அடியெடுத்துவைக்கையில்
அன்னியப்படும்
பயிர் நிலங்கள்

சிறப்பாய் வாழ்ந்த நாட்கள்
சிந்தையில்
வட்டமிட்டிட

சின்னதில் செய்திட்ட
குறும்பினைச் சொல்லிடும்
சுவர்கள்

இருப்புக்கும்
இழப்புக்குமிடையில்
அல்லல்ப்படும் மனம்

சிரிப்பும், அழுகையும்
சேர்ந்தேவரும் - ஆம்
மீள்குடியமர்வென்பது எங்களுக்கு

மரணிப்புக்கு
முன்னால் கிடைக்கும்
மறுபிறப்பு.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

20 comments:

  1. நல்ல கவிதை நண்பரே ...

    மீண்டும் உணர்வுகளே நல்ல கவிதையாய் ....

    வாழ்த்துக்கள் ...

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  2. நன்றி விஷ்ணு
    உங்களது தொடர்வாழ்த்துக்கள் சொல்லத்தூண்டுகிறது பலவற்றை இருந்தும் இயலாதவனாய் நான்.........

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    வரிகள் ஒவ்வொன்றிலும் வாழ்ந்து பார்க்கிறேன்.

    அதிகாலை நவின், அமெரிக்கா

    ReplyDelete
  4. நன்றி நவின்

    உங்கள் உணர்வுப்பகிர்விற்கு....

    ReplyDelete
  5. அருமையான படைப்பு தங்கராசா - ஜீவராஜ்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கட்டாயக் குடிபெயர்வின் வருத்தங்கள் ஆயிரமாயிரம். அப்படியே வடித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  7. நன்றி இளங்கோ

    ReplyDelete
  8. நான் அனுபவித்ததில் எழுதமுடிந்ததை இங்கு தந்திருக்கிறேன் பாஸ்கர்

    ReplyDelete
  9. கருத்துச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை
    -கனத்த மனதுடன் துரை

    ReplyDelete
  10. உங்கள் உணர்வுப் பகிர்விர்க்கு நன்றி துரை

    ReplyDelete
  11. மனிதர்கள்
    என்ன நாற்றுகளா
    குடிபெயர்தல்
    இயல்பாக நடப்பதற்கு
    நல்ல கவிதை

    ReplyDelete
  12. நன்றி மதுமிதா
    அனுபவம் சொல்கிறது யாருக்கும் இந்தநிலை வரக்கூடாதென்று......

    ReplyDelete
  13. பட்டவர் அன்றி
    மற்றவர் புரிந்திடா
    உணர்ச்சிகளின் குவியல்

    இந்த சில சொற்களே போதும் உங்கள் வேதனை உணர்த்திட ...

    ReplyDelete
  14. நன்றி பூங்குழலி
    இங்குமட்டுமல்ல உலகில் ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒரு மனிதன் அவனது
    விருப்பத்துக்கு மாறாக இடம்பெயர்க்கப்படுகிறான்..
    அனைவருக்குமாக பிராத்திப்போம்.

    ReplyDelete
  15. உங்கள் வலியை புரிந்து கொள்ள முடிகிறது ..,

    ReplyDelete
  16. நன்றி சசிதரன்

    ReplyDelete
  17. இனியாவது இந்த உயிரிழப்பு , ஓட்டம் இல்லாமல் நல்லது நடந்தால் சரி.

    ReplyDelete
  18. நன்றி குடுகுடுப்பை

    ReplyDelete