Friday, January 30, 2009

உயிர் உருக்கும் நினைவுகள்

கவிதை
வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது


சின்னதாய் உடல்சுட்டாலும்
பதறியடித்துப் பண்ணும் காரியங்கள்
ஆக்கினைதான் என்றாலும்
வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது

உப்பும், மிளகாயும்
ஒன்றாய்ச் சேர்த்து
மூன்றுமுறை தலைசுற்றி
தூ,தூ எனத்துப்பி
அடுப்பினுள் போட்டு
அதுவெடிக்கையில்
கண்ணூறு கழிந்ததாய்
களிகொள்வாள்

வயிற்றுவலி வந்தால்
சாமிமுன்னின்று
மந்திரம் சொல்லி
வலிகொண்ட இடத்தில்
திருநீறு தடவி
ஆ.. காட்டச்சொல்லி
அதற்குள்ளும் தூவி
அடுத்தகணமே மாறுமென
ஆனந்தங்கொள்வாள்

இப்படிச்
சொல்லிக் கொண்டேபோகலாம்
சுகப்படுத்தும் வழிமுறைகளை

உயர் கல்விக்காய் நான்
ஊர்விட்டகலையில்
கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
தவறிப்போயிருந்தது தாயன்பொன்றுதான்

ஓடித்திரியும் நாட்களைவிட உடல்
ஒத்துழைக்கமறுக்கும் வேளைகளில்
உயிர் உருக்கும் அவள் நினைவுகள்
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

36 comments:

  1. \\உயர் கல்விக்காய் நான்
    ஊர்விட்டகலையில்
    கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
    தவறிப்போயிருந்தது தாயன்பொன்றுதான்\\

    :-) unmai unmai.

    ReplyDelete
  2. நன்றி சினேகிதி

    ReplyDelete
  3. அன்பின் தங்கராசா - ஜீவராஜ்


    என் அம்மாவை
    என் கண்முன்னே
    உன் கவிதையில்
    காட்டியதற்கு ஓர்
    நன்றி!


    அம்மாவின் வாசம்
    என்னுள் எப்போதும்
    இருக்கும் ஆம்


    நான் இங்கு வருகையில்
    முருகன் படமிட்ட
    விபூதி கொடுத்தனுப்பி
    விபூதி பார்க்கும்பொழுதெல்லாம்


    என் அம்மா பேசி மகிழ்வதாக
    உணர்கின்றேன்.


    வாழ்த்துக்கள் ராசா

    ReplyDelete
  4. அன்னையின் அன்புக்கு ஈடேது ...
    எத்தனை சொல்லியும் தீராத கடலன்றோ அது ..


    கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
    தவறிப்போயிருந்தது தாயன்பொன்றுதான்


    இந்த வரிகள் எனக்கு பிடித்தது
    எனக்கு இதுபோல தனிமையில் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது
    அடிக்கடி தோன்றும் நினைவு இது ...


    மிக அருமையான கவிதை நண்பரே ....
    வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  5. அம்மா என்ற மந்திரச் சொல்லின் சக்தியை அதிகமாக்கியது
    தங்களின் வரிகள்

    ReplyDelete
  6. அன்பின் ஜீவா


    அம்மாவின் பெருமை சொல்லவும் பெரிதே


    அவர்கள் செய்யும் சிறு சிறு பாசம் கலந்த செயலும் நமது நன்மைக்கே


    அருமையாக கண்ணீரை வரவைக்கும் கவிதை


    //ஓடித்திரியும் நாட்களைவிட உடல்
    ஒத்துளைக்கமறுக்கும் வேளைகளில்
    உயிர் உருக்கும் அவள் நினைவுகள்//
    இது தான் கவிதையின் உச்சம்


    வயது ஏற ஏற - இந்நினைவுகள் கூடும்

    ReplyDelete
  7. உப்பும்,பச்சைமிழகாயும்
    பச்சைமிளகாய் - எழுத்து பிழை

    பொருட்பிழை என நினைக்கிறேன், காய்ந்த வற்றலையல்லவா சுற்றுவார்கள்?!
    > உயிர் உருக்கும் அவள் நினைவுகள்

    அருமையான ஏக்கம் நிறைந்த கவி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அம்மா பற்றிய நினைவுகள் எப்பொழுதுமே நெகிழ வைப்பவை. அதுவும் அவவை இழந்த பின் மேலும் அழுத்துகின்றன. உங்கள் வரிகளை ரசித்தேன்.
    "ஓடித்திரியும் நாட்களைவிட உடல்
    ஒத்துழைக்கமறுக்கும் வேளைகளில்
    உயிர் உருக்கும் அவள் நினைவுகள்"

    ReplyDelete
  9. பாஸ்கர் (எ) ஒளியவன்.

    நன்றி உங்கள் கருத்துரைக்கு

    ////உப்பும், மிளகாயும்
    ஒன்றாய்ச் சேர்த்து
    மூன்றுமுறை தலைசுற்றி
    தூ,தூ எனத்துப்பி////

    என பதிவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  10. ////அவர்கள் செய்யும் சிறு சிறு பாசம் கலந்த செயலும் நமது நன்மைக்கே
    வயது ஏற ஏற - இந்நினைவுகள் கூடும் ////
    அத்தனையும் உண்மை சீனா அவர்களே
    எனது மனமார்ந்த நன்மைகள்...

    ReplyDelete
  11. ////அம்மா என்ற மந்திரச் சொல்////
    நன்றி துரை

    ReplyDelete
  12. ////இதுபோல தனிமையில் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது
    அடிக்கடி தோன்றும் நினைவு இது ...
    ///
    நன்றி விஷ்ணு

    ReplyDelete
  13. ///விபூதி பார்க்கும்பொழுதெல்லாம்
    என் அம்மா பேசி மகிழ்வதாக
    உணர்கின்றேன். ////
    நன்றி இளங்கோவன்

    ReplyDelete
  14. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே நட்சத்திர வாரத்தில் கிடைத்த உங்கள் பாராட்டு மேலும் எழுதும் உற்சாகத்தை தருகிது...

    ReplyDelete
  15. அன்பின் ஜீவன்,

    அன்னையின் அன்புதனை
    அழகான கவிதை மூலம்
    அழகுறக்கூறி அனைவருக்கும்
    அன்பு அன்னையின் ஞாபகம்
    அலையாட வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  16. ///////அன்பு அன்னையின் ஞாபகம்
    அலையாட வைத்து விட்டீர்கள்////
    நன்றி சக்தி அவர்களே

    ReplyDelete
  17. ஓடித்திரியும் நாட்களைவிட உடல்
    ஒத்துளைக்கமறுக்கும் வேளைகளில்
    உயிர் உருக்கும் அவள் நினைவுகள்

    அம்மாவின் அன்பு ஒரு சகல நோய் நிவாரணி தான் ...

    ReplyDelete
  18. நன்றி பூங்குழலி
    அம்மாவின் அன்பு ஒரு சகல நோய் நிவாரணி உண்மைதான்....

    ReplyDelete
  19. //உயர் கல்விக்காய் நான்
    ஊர்விட்டகலையில்
    கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
    தவறிப்போயிருந்தது தாயன்பொன்றுதான்//

    அற்புதம்.

    ReplyDelete
  20. நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  21. தாயன்பை முழுவதுமாக உணர்ந்தவரிடம் இருந்து தான் இப்படியான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியும்... மிக மிக அருமை நண்பரே...

    ReplyDelete
  22. எல்லோரும் உணர்ந்திருப்பார்களென நினைக்கிறேன்.நன்றி ajmalkhan அஜ்மல்

    ReplyDelete
  23. அருமை ஜீவராஜ்

    ReplyDelete
  24. நன்றி JB , KAMAL, Aarumugam

    ReplyDelete
  25. very very nice.....

    ReplyDelete
  26. nanba..
    anbu enra sollukku utharanama thai than.
    namakku vayathu 100 analum...
    nam ammaikku nam siru pillai than.

    ammanna.... summa illai...

    thayodu anbu bom
    thanthaiyodu kalvi bom
    manaivi yodu ellam bom...

    palzamolzi .....

    ReplyDelete
  27. நன்றி THEN MOZHI
    உண்மைதான்
    நன்றி நண்பரே {SUBRAMANIAN }

    ReplyDelete
  28. அத்தனை வரிகளும் அருமை....

    ReplyDelete
  29. நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris)

    ReplyDelete
  30. அருமையான கவிதை ஜீவன், தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
    //உயர் கல்விக்காய் நான்
    ஊர்விட்டகலையில்
    கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
    தவறிப்போயிருந்தது தாயன்பொன்றுதான்//

    என்னைக் கவர்ந்த வரிகள்.

    ReplyDelete
  31. அன்பு ஜீவன், நீண்ட நாட்களுக்கு பிறகு ஏதேனும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த எனக்கு, நான் வாசித்த முதல் முத்தான வரிகள் "அம்மா பற்றிய நினைவுகள்", நமது வாழ்க்கையின் ஆரம்பமே அவளிடமிருந்துதானே, ஆக எனது வாசிப்பின் தொடக்கமும் அப்படி இருந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
    உயர் கல்விக்காய் நான்
    ஊர்விட்டகலையில்
    கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
    தவறிப்போயிருந்தது தாயன்பொன்றுதான் //
    இந்த வரிகளை படித்து ரசித்தேன், இருப்பினும் இதில் ஏதோ ஒரு பொருட் பிழை இருப்பதாய் உணர்கிறேன்.
    ஊர்விட்டகலையில் ----- ஊர்விட்டு கலைகையில் என்று வந்திருந்தால் சரியான பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
    கொடுத்தனுப்பிய மருந்துபட்டியலில் தவறிப்போயிருந்தது ----- என்று கவிதை நயத்துக்காக நீங்கள் சொல்லி இருந்தாலும், ஊர்விட்டுச் செல்லும் நம்மிடம் தவறாமல் சுமந்துச் செல்லும் இன்பச் சுமைகளில் ஒன்று "தாயன்பு" என்பது எனது கருத்து.

    அன்புடன்
    தஞ்சை-மீரான்

    ReplyDelete
  32. வாருங்கள் தஞ்சை-மீரான் அவர்களே
    உங்கள் வருகையும், பகிர்வும் மனமகிழ்வைத்தருகிறது.....
    உங்கள் கருத்துரைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  33. உண்மைதான்.. தாயன்பு என்பது கடவுளின் பரிசு... அது பெறாதவர்களுக்கு சாபம்..... :(

    உங்கள் கவி வாசித்த அனைவரும் ஒருகணம் தாயை நினைத்திருப்பார்களேயானால் அதுவே வெற்றிதானே..

    மனம் கனக்கும் கவிதையிது.

    ReplyDelete