Friday, October 03, 2008

ஆடக சௌந்தரி

ஆடக சௌந்தரி

வரராமதேவன் என்ற சோழ மன்னன் திருக்கோணமலையிலுள்ள சுவாமி மலையின் தவப் பெருமையைப் புராண வாயிலாக அறிந்து கடல் கடந்து திருமலை வந்து சுவாமி மலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அமைக்கும் திருப்பணி வேலைகளைச் செய்து வந்தான் எனத் திருக்கோணாசலப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது.
அந்தநன் மொழியைக் கேளா 
அரும் குறள் அடைவிற் கூறும்
முந் தொர் ஞான்று வெற்பின்
மொய்கதிர்க் குலத்து வேந்தன்
மந்திரம் அனைய பொற்றோள்
வரராம தேவன் என்போன்
வந்திவன் ஈசற்காக வான்
திருப்பணிகள் செய்தான்
குறள் - பூதம்


ஆடக சௌந்தரிதந்தை வரராமதேவன் திருமலையில் கட்டிய கோணேஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கத் தனயனான குளக்கோட்டன் படைகளுடன் திருமலை வந்தான். திருக்கோணமலைக்குத் தெற்கே உள்ள தம்பலகாமத்தில் ஒரு பெரும் சிவாலயம் இடிபட்டு அழிந்து கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்டான். தந்தையைப்போல் தானும் ஒரு சிவாலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தவனாதலால், உடனே அங்கு விரைந்து உடைபட்ட கோயிலில் கட்டடச் சிதைவுகளைப் படைவீரர்களைக் கொண்டு அப்புறப்படுத்திக் கோயில் குடியிருப்பு என்ற இடத்திலேயே கோயிலைத் திரும்பக் கட்டி ஆலய பராமரிப்புக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களையும் தென்னந்தோப்புக் களையும் ஆக்கி இவைகளுக்கு நீர்பாய்ச்சக் குளம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற யோசனையோடு இளவரசன் அங்கு தங்கி இருந்தான். 

அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆளும் மனுநேய கயவாகு மன்னன் வேட்டையாடப் படைகளுடன் கரையோரப் பகுதிகளுக்கு வந்து கூடாரமிட்டுத் தங்கியிருந்தான்.கடலில் பேழைபோன்று மிதந்து வந்து ஒதுங்கும் செய்தி அறிவிக்கப்பட்டதும் மன்னன் கடற்கரைக்கு விரைந்து சென்று பேழையை எடுத்து ஆவலோடு திறந்தான். என்னே அதிசயம்! பேழைக்குள் தங்க விக்கிரகம் போலக் குழந்தை ஒன்று படுத்துக் கிடப்பதைக் கண்ட அரசன், குழந்தையை வாரி எடுத்து மக்கள் செல்வம் இல்லாத வறியோனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடை... என்று இயம்பி, தாமரைப் பூப்போன்ற குழந்தையின் அழகிய வதனத்தில் முத்தமிட்டான். அந்த அதிசயக் குழந்தை மன்னன் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கச் சிரித்தது. பால் மணம் மாறாப் பச்சிளம் குழவி சிரித்த காரணத்தால் மட்டக்களப்புப் பிரதேசத்தில் உள்ள அந்த ஊருக்கு பானகை என்ற காரணப் பெயர் ஏற்பட்டு காலப்போக்கில் திரிந்து பாணகை என்று இன்று அழைக்கப்பட்டு வருகின்றது.

நித்திய தரித்திரனுக்கு பெருந்தனம் கிடைத்ததுபோல் மகிழ்ந்து மன்னன் கண்ணை இமை காப்பதுபோல் அரசனும், இராணியும் குழந்தையைக் கண்ணும், கருத்துமாக வளர்த்து வந்தனர். அரசர் மதியூகியான தனது பிரதம மந்திரிக்கு கடலில் வந்த இக்குழந்தை பற்றிய எல்லா விபரங்களையும் கூறியதுடன் பேழையில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச் சுருளையும் காட்டினார். அதில் ஆடக சௌந்தரி என்று எழுத் தாணியால் வரையப்பட்டிருந்தது. அப்பெயரே அப்பெண்ணுக்குப் பிற்காலம் பெயராக நிலைத்தது. சிறுகுழந்தையிலே சிங்கள மன்னனால் வளர்க்கப் பட்ட ஆடக சௌந்தரி தான் ஒரு சிங்களப் பெண் என்றே எண்ணி இருந்தாள். தலைமை அமைச்சர் யாவும் அறிவார் ஆயினும், சமயம் வரும்போது சொல்லலாம் என்று எண்ணி இருந்தார். 

ஆடக சௌந்தரி
வயது முதிர்ந்த அரசர் ஆடக சௌந்தரிக்கு வரன்தேடி திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் மந்திரியிடமே ஒப்படைத்திருந்தார். மனுநேய கயவாகு காலமானதும், அவன் வளர்ப்பு மகளான ஆடக சௌந்தரி அனுராதபுர இராஜ்யத்தின் அரசு கட்டில் ஏறினாள். தம்பலகாமத்தில் சைவன் ஒருவன் கோயில் கட்டுவதாக அறிந்த அரசி, தந்தையின் ஸ்தானத்திலுள்ள பிரதமரை அழைத்து, ஆலோசித்ததுடன் ஒரு படையை அனுப்பிச் சைவனை இந்தியாவுக்கு துரத்தி விடுமாறும் கேட்டுக் கொண்டாள். பிரதமர் தாமே படையுடன் போய் வருவதாகக் கூறிச் சென்றார். சேனைகளை ஒர் இடத்தில் நிறுத்திவிட்டு கோயில் கட்டும் இடத்திற்குத் தனித்துப்போய்க் குளக்கோட்டனைச் சந்தித்தார்.

இளவரசனின் தெய்வீகக்களை ததும்பும் முகத்தைக் கண்டதும் அரசிக்குத் தகுந்த வரன் இவர்தான் என்று எண்ணி மகிழ்ந்த மந்திரி ஆடக சௌந்தரியின் வரலாறு முழுவதையும் கூறி ஆடக சௌந்தரியை திருமணம் செய்துகொள்ள இசைந்தால், மன்னன் ஆக்க எண்ணும் குள அமைப்பைத் தானே முடித்துத் தருவதாக உறுதிகூறி விவாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அனுராதபுரம் திரும்பியவுடன் ஆடகசௌந்தரியின் தலைமை அமைச்சர், சோழ இளவரசனின் தெய்வீகக்கலை பொலியும் சௌந்தரியம், அவனுடன் குளம் கட்டித் தருவதாகத் தான் செய்துகொண்ட விவாக ஒப்பந்தம், ஆகிய முழு விபரங்களையும் மறைந்த மன்னர் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பான பணிகளையும் விபரமாகக் கூறினார். எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் கேட்ட ஆடகசௌந்தரி தன் முழுச் சம்மதத்தையும் தெரிவித்தாள். புத்திசேர் அமைச்சர்களின் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் திருக்குளம் என்ற பெயரில் கந்தளாய் நீர்த்தேக்கம் பிரமாண்டமாய் அமைக்கப்பட்டது. அணைக்கட்டின் உச்சியில் நின்று பார்த்தால் குளத்தின் நீர்ப்பரப்பு பெரிய கடல்போல் தெரியும். கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியைப் பார்த்தால் அணை பெரிய மலைபோலத் தெரியும். குளம் பிரமாண்டமாக இருந்தது என்று குளக்கோட்டுக் காவியம் கூறுகின்றது.

கந்தளாய்க் குளத்தை முதன் முதலாகப் பார்ப்பவர்கள் வியப்பில் ஆளாமல் இருக்க முடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற பழைய காலத்தில் இரண்டு மைல்வரை, மலைபோல் அணையை அமைத்திருக் கிறார்களே! தினமும் லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்யினும் இப்படி ஒர் அணையை அமைக்கப் பலவருடங்கள் செல்லுமே! என்ற எண்ணம் குளத்தையும் அணையையும் பார்ப்பவர்கள் மனத்தில் எழவே செய்யும். குள அமைப்பு முடிவுற்றதும் ஒப்பந்தப் பிரகாரம் அரசரை மேள வாத்தியங்கள் முழங்க படைகள் சூழ்ந்துவர அனுராதபுரத்துக்கு அழைத்துச் சென்று குளக்கோட்டனுக்கும் ஆடகசௌந்தரிக்கும் அமைச்சர் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி வைத்தார்.

 கட்டி முடிக்கப்பட்ட திருக்குளத்தைப் பார்வையிட இரு திறப்படைகளும் கடலெனச் சூழந்து வர அரச தம்பதியினர் கந்தளாய் வந்தனர். கடலென விரிந்து காணப்பட்ட குளத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தபோது கிழக்கு அணையில் ஒரு இடம் பதிந்து இருத்தலைக் கண்ட அரசி ஆடகசௌந்தரி ஒரு கல்லைத்தூக்கி அந்தப் பதிவில் வைத்தார். அரசியைத் தொடர்ந்து வந்த நூற்றுக்கணக்கான தோழிகளும் கற்களைத் தூக்கி வைத்து உயரமாகக் கட்டினர். பெண்கள் கட்டியதால் கந்தளாய்க் குளத்துக்கு கிழக்கு அணை, பெண்டுகள் கட்டு என்றே இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.


தம்பலகாமம்.க.வேலாயுதம்



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  2. காலத்திற்கும்,இளம் சந்ததிக்கும், கட்டாயமான பதிவு ,தொடரட்டும் தங்கள் பனி ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி உருத்திரா அவர்களே

    ReplyDelete