Tuesday, September 30, 2008

யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார் ?

மீளவும் ஆரம்பித்திருக்கிறது
அடிமுடி தேடும் படலம்
முன்னையவற்றை விடவும் சற்று மூற்கமாக

யுத்த காலம்
ஒண்டிரண்டாய் உயிர்போகும்
உடமைகரியாகும்
எண்ணிக்கைபற்றிய கவலையன்றி
வேறேதும் இருக்கப்போவதில்லை
இழந்தவன் தவிர்த்து மற்றவர்க்கு

சண்டைகள் நடக்கும்
சிலநூறுபேர் சாவார்
கர்த்தால் வரும்
கடையடைப்பு ,எரிப்பு
இடம்,புலம் பெயர்வுகள் நிகழும்
பட்டினி மரணங்கள்
பாவையர் கதறல்கள்
பாரினை உலுக்கும் - இருந்தும்
அரியணை தொடர்ந்திடவேண்டி
அரவமின்றி இருப்பர்
அதிகாரத்தில் இருப்போர்

சண்டைகளுக்ககும், சத்தங்களுக்கும் நடுவே
சமாதானத்துக்கான போர்
சல்லடைபோட்டுத் தேடும்
யுத்தத்தின் முடிவை
ஆட்சிக்கால எல்லைக்குள்
அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலோடு
இத்தனைக்கும் அப்பால்
உறங்கிக்கொண்டிருக்கிறது உண்மை

யுத்தத்தின் முடிவினைக் கண்டவர்கள்
இறந்தவர்கள் மட்டுமே …பிளேட்டோ..


த.ஜீவராஜ்

சபிக்கப்பட்ட பரம்பரை…..


தன் வாழ்நாளின்
சந்தோச தரணங்களை
சிலிர்ப்போடு அசைபோடுவார்
அப்பப்பா – அது
அவராயுளின் அரைப்பகுதி

பாடசாலைக் காலம்வரை
பட்டாம்பூச்சி வாழ்க்கையென்று
மகிழ்வார் அப்பா

தவழ்ந்தது முதல்
வேட்டோசை கேட்டு
வளர்ந்தேன் நான்

தம்பி வயிற்றில் இருக்கையில்
செல்லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள்
அன்னை

நாளை
எனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….

 த.ஜீவராஜ்

Sunday, September 21, 2008

இரு பிரிவுகளாக அமைந்த ஆலய வழிபாடு, தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்.....

Thampalakamam
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன.வரலாற்றுப் புகழ்மிக்க இக்கோயிலை, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் கட்டினான் என்றும் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள "ஸ்வாமிமலை' என்னும் இடத்திலிருந்து ஆதிகோண நாயகர் திருவுருவையும் ஏனைய பரிவாரத் தெய்வங்களையும் மேளதாளத்துடன் கொண்டு வந்து இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என்றும் திருகோணாசலப் புராணம் கூறுகிறது.
.

Friday, September 12, 2008

ஆனந்தக் கண்ணீர்



இது என் இறுதிக்கட்டம்
வாழ்க்கைப் பயணத்திற்கு
வரவிருக்கும் முற்றுப்புள்ளி
ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள்
அடைக்கலமாகும் முன்
ஆண்டவன் தந்த
அரிய சில நிமிடங்கள்

கணவனுக்காக கண்ணீர் விட்டாள்
மனைவி
தகப்பனுக்காக அழுதன
பிள்ளைகள்
உறவுக்காக ஒருகூட்டம் உருகியது
கடனுக்காகவும், இன்னபிறவுக்குமாக
யார்யாரோ அழுதார்கள்

எனக்குத் ‘திக்’ என்றது
என் எழுபது வருட வாழ்வில்
எனக்காக அழ
எவரையும் சேகரிக்காமல்
போனேனெ என்று

எட்டடி தள்ளி
மெல்லிய விசும்பல்
விழி ஊன்றிப்பார்த்தேன்
என்வரவுப் பணத்தில்
ஏதோவோர் சிறுதொகையால் வளர்ந்த
ஏழைச்சிறுவன் இன்று
எஞ்சினியராய்

இப்போது
எனக்குள் நானே
அழுதுகொண்டேன் ஆனந்தமாக……

த.ஜீவராஜ்

Sunday, September 07, 2008

இப்போதெல்லாம் அவன்



தெருத்தெருவாய் ஓடித்திரிந்தான்
தினந்தோறும் பாடிமகிழ்ந்தான்
கண்ணாடிமுன் காலங்கழித்தான்
கடிதங்கள் எழுதி ஓய்ந்தான்
பாடங்கள் படிக்க மறந்தான்
படுத்தாலும் தூக்கமிழந்தான்
நண்பர்களுக்கு அவன்தான் நாயகன்
நக்கலடிப்பதற்கென்றுமானான்
எடுக்காத போணில் எல்லாம்
ஏதேதோ பேசிமகிழ்ந்தான்
துடிக்கும் மனதை அடக்க
துணிவின்றித் தொலைந்து போனான்
எடுக்கின்ற சபதமெல்லாம்
அடுத்தநாளே மறந்து போனான்
இத்தனையும் ஏதுக்கடா?
என்றேசுவோரை அடக்கி
என்றாவதொருநாள் ஏற்றுக்கொள்வாள்
அவளெனச் சொல்லி நின்றான்.
 த.ஜீவராஜ்